Sunday, 21 July 2013

கிராமத்து மக்கள் சொல்லும் பொருளும்

கிராமத்து மக்கள் எதையும் மங்களமாகச் சொல்லவேண்டும் என்றே நினைக்கிறார்கள். சொற்களில் சில சுடும். ‘அறம்’ பாடி அழித்த புலவர்களை நாம் அறிவோம். அமங்கலமான ஒரு நிகழ்வைக் குறித்துச் சொல்லும்போதுகூட கிராமத்து மக்கள் அதை மங்களமான சொற்களில்தான் கூறுகிறார்கள்.
ஒரு பெண்ணின் கணவர் இறந்து விட்டார். இப்போது அந்தப் பெண்ணின் கழுத்தில் கிடக்கும் தாலியை அறுக்க வேண்டும். அல்லது நீக்க வேண்டும். கணவனை இழந்த பெண்ணின் கழுத்தில் கிடக்கும் தாலியை அகற்றியாகிவிட்டதா? என்பதை ஒரு மூதாட்டி, ‘தாலியைப் பெருக்கியாச்சா? என்று கேட்டார்.
‘தாலியை அப்ற்றியாச்சா?’ என்று அமங்கலமாகக் கேட்காமல், ‘தாலியைப் பெருக்கியாச்சா?’என்று மங்களமாக அந்த மூதாட்டி கேட்ட மொழி நுட்பத்தைக் கண்டு நான் வியந்தேன். கிராமத்து சம்சாரிகளின் இத்தகைய சில அமங்கலம் நீக்கிய மங்களகரமான பிரயோகங்களை இக்கட்டுரையில் பதிவு செய்யலாம் என்று கருதுகிறேன்.
இனி வீரசேரளம்பதூர் இரா.உ. விநாயம் பிள்ளை என்ற கதை சொல்லி கூறியதைக் கேளுங்கள்.
அது ஐப்பசி மாதம், கழனியில் நடவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். சேர்ந்தாற்போல ஒரு கோட்டை விதப்பாடு, கரையடியோரம், தொழி உழவு உழுது மரம் அடிச்சி, நாற்றுப் பிடுங்கி, நாற்றங்காலில் இருந்து, நாற்றைச் சுமந்து நாற்று முடிகளை விதைத்து இருந்தார்கள் நடுகைத் தொழியில் (வயலில்).
அன்று நான் நடுகை. நான்தான் ஈசான மூலையில் மூன்று இடத்தில் நாற்றுகளை நட்டு நடுகையை ஆரம்பித்து வைத்தேன். நான் நட ஆரம்பித்ததும், அருகில் நின்ற ஒரு பெரிய மனுஷி, என் வெள்ளை வேட்டி சட்டை மீது, சகதியில் தெளிந்த தண்ணீரை எடுத்து என்மீது தெளிக்க, மற்றப் பெண்கள் எல்லாம் ஒருசேர குலவைச் சத்தம் எழுப்பினார்கள்.
எப்போதும் அப்பாதான் ‘நாள் நடுகை’யை ஆரம்பித்து வைப்பது வழக்கம். இன்று அப்பா வராததால் நான் நாள் நடுகையை ஆரம்பித்து வைத்தது எனக்குப் புது அனுபவமாக இருந்தது. சேற்றுத் தண்ணீர் என் வெள்ளை வேட்டி சட்டையை அழுக்காக்கினாலும், அந்த நிகழ்வு எனக்குச் சந்தோசமாக இருந்தது.
ஒருபுறம் நடுகை நடந்து கொண்டிருந்தது. மறுபுறம் நாற்றங்காலிலும் உழவு நடந்து கொண்டிருந்தது. நாற்றங்காலை உழும் உழவனைப் பார்த்து நடவு செய்து கொண்டிருந்த ஒரு பெரிய மனுஷி சொன்னாள். ‘அது புள்ளைப் பெத்த வயல்’ அதை நன்றாக உழு என்று. ‘புள்ளை பெத்த வயல்’ என்ற சொற்பிரயோகம் எனக்குப் புதிதாக இருந்தது. ஏன் இந்த வயலை மட்டும் அப்படிச் சொல்கிறார்கள் என்று உழவனிடம் கேட்டேன்.
தம்பி, “அது நாற்றங்கால். அந்த நாற்றங்கால் ‘நாற்று’ என்ற பிள்ளையை இப்போதுதான் பெற்றிருக்கிறது. நாற்றங்கால் கெட்டிப்பட்டுப் போய் இருக்கும். எனவே நாற்றங்காலை நன்றாக உழவேண்டும் என்பதைத்தான் ‘புள்ளைப் பெத்த வயலை நன்றாக உழு’ என்று அந்தப் பெண் கூறுகிறாள். நெல் விதையை கருவாகவும், நாற்றை வயிற்றில் வளரும் பிள்ளையாகவும், பெண்கள் பாவிப்பதால் நாற்றங்காலைப் பிள்ளைப் பெத்த வயல் என்று கூறுகின்றார்கள் என்று விளக்கம் கூறினார். உழவர் கூறிய விளக்கம் எனக்குப் பிரமிப்பை ஏற்படுத்தியது.
நாற்றங்காலில் இரண்டு ஏர்கள் உழுது கொண்டிருந்தது. முன்னால் போன உழவு மாடுகள் ரொம்ப சூட்டிகையாக (சுறுசுறுப்பாக) இருந்தன. வேகமாக நடந்தன. பின்னால் சென்ற மாடுகள் மெதுவாக நடந்தன. “முன்னேர் போன வழியே பின் ஏர் போகும்’ என்பது பழமொழி. பின்னேர்க்காரன் அடிக்கடி, முன்னேர்க்காரனைப் பார்த்து ‘கண்டோட்டு’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான். பின்னேர்க்காரன் சொல்வதின் பொருள் எனக்குத் தெரியவில்லை. எனவே, எங்கள் உழவனிடம் ஏன் பின்னேர்க்காரன் அடிக்கடி ‘கண்டோட்டு’ என்று கூறுகிறான்? என்று கேட்டேன்.
உழவன், முன்னேர்க்காரன் வேகமாகச் செல்கிறான். எனவே அவனை, ‘நின்று போ, அல்லது மெதுவாகப் போ….’ என்று கூறவேண்டும். ‘ஏரை நிறுத்து’ என்பது அமங்கலச் சொல். ஏர் என்பது உழவைக் குறிக்கும். ‘ஏரை நிறுத்து என்றால், விவசாயம் செய்வதையே நிறுத்து’ என்று பொருள்பட்டுவிடும். எனவேதான் ‘கண்டோட்டு’ என்று வேறு ஒரு சொல்லைச் சொல்கிறான். பின்னேர்க்காரன் ‘ஏரை எடுத்து வச்சிட்டான்’ என்றால், சம்சாரித்தனம் செய்வதையே நிறுத்திவிட்டான் என்று அர்த்தம். ஏர்தான் உழவனின் சின்னம். எனவே ஏர் சம்பந்தப்பட்ட விசயங்களில் அமங்கலச் சொல் வராமல்தான் சம்சாரிகள் பேசுவார்கள்.
ஏர்க்கால், ஒடிந்துவிட்டது என்றால், ‘ஏர்க்கால் வளைந்து விட்டது’ என்றுதான் கூறுவார்கள். ஏர்க்கால் ஒடிந்துவிட்டது என்று அமங்கலமாகக் கூறாமல், ‘ஏர்க்கால் வளைந்துவிட்டது’ என்று மங்களமாக, குறிப்பாகக் கூறுவார்கள் என்று உழவன் மேலும் விளக்கம் கூறினான்.
நடுகை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது சுமார் மத்தியானம் பன்னிரண்டு மணி இருக்கும். உழவன், வரப்பின்மேல் நின்றுகொண்டு இருந்தான். உழவன் பெண்டாட்டி உழவன் அருகில் சென்று அவன் காதோரமாய் ஏதோ ‘குசுகுசு’ என்று கூறினாள். உடனே உழவன் வயலில், நாற்று எடுத்துப் போட்டுக் கொண்டிருந்த பையன், உழவுக்காரர்கள், மற்றும் என்னையும் பார்த்து ஆம்பளைகள் எல்லாம் கரை ஏறி அந்தப் பக்கமா போங்க. பெண்கள் ‘கழனி பார்க்கணுமாம்’ என்று கூறிக்கொண்டே உழவன் குளத்தின் கரையைப் பார்க்க நடக்கத் தொடங்கினான். ஆண்கள் அனைவரும், அவரவர் வேலையை அப்படி, அப்படியே போட்டுவிட்டு உழவன் பின் சென்றார்கள். நானும் உழவன் பின்னால் சென்றேன்.
எல்லோரும் குளத்தின் கரையைக் கடந்து கீழே இறங்கி, ஒரு கருவை மரத்தில் நிழலில் அமர்ந்தோம். அப்போது நான் உழவனைப் பார்த்து, “கழனி பார்க்கணும்னா என்ன அர்த்தம்? பெண்கள் கழனி பார்க்க, நாம் ஏன் இங்கு வரவேண்டும்?’’ என்று கேட்டேன்.
உழவன் என்னைப் பார்த்து ஒரு ஏளனச் சிரிப்பை உதிர்த்துவிட்டு, “பெண்கள் நடுகை நட ஆரம்பித்ததில் இருந்து எங்கும் போகாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஆம்பிளைகளாகச் சுற்றி நின்று கொண்டிருக்கும்போது எப்படி அவர்கள் ‘ஒதுங்க’ முடியும்? அதனால், நடுகையின்போது நடுவேளையில், ‘கழனி பார்க்கணும்’ என்று பெண்கள் கூறினால், நாம்தான் அதைப் புரிந்துகொண்டு ஒதுங்கிக் கொள்ளணும். சில விசயங்களை நேரடியாகக் கூற முடியாது. இப்படித்தான் ஜாடைமாடையாக சொல்லுவார்கள். நாம்தான் அதை அனுபவத்தில் புரிந்து கொள்ளணும்” என்று விளக்கம் கூறினான்.
சம்சாரிகள் மத்தியில் நிலவும் இத்தகைய குழுவுக் குறிகள் கேட்க சுவாரசியமாக இருந்தன என்று கூறினார் தகவலாளர்.
Book link: http://discoverybookpalace.com/tags.php?tagid=2455

பழமொழிகளும் சொலவடைகளும்1



சொலவடைகள், பழமொழிகள் என்று நாட்டுப்புறவியல் ஒரு வகைமை இருக்கிறது. பழமொழிகள் வேறு, சொலவடைகள் வேறு என்பதை முதலில் வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது பழமொழி சொற்செட்டுடன் செம்மையான மொழிநடையில் அவைகள் காணப்படும்.

‘வேலியில போகிற ஓணானை சீலயில நுழைஞ்சிக்கோன்னு சொல்லுவானேன். பிறகு அது குத்துது குடையுதுன்னு கத்துவானேன்’ என்பது சொலவடை. சொலவடைகள் பெரும்பாலும் வட்டார வழக்கு மொழிநடையில் அமைந்திருக்கும் கிராமிய வாழ்பவனுபத்தின் அடிப்படையாகக் கொண்டு பிறந்திருக்கும்.

பழமொழிகளுக்கான பொருள் அதை வாசித்தவுடன் ஓரளவிற்குப் புரிந்துவிடும் ஆனால் சொலவடைகளுக்கான பொருளை என்னைப் போன்ற கிராமத்தான் எவனாவது விளக்கிச் சொல்ல வேண்டும்.

பழமொழிகளுக்கான பொருளை அகராதியில் இருந்துகூட எடுத்துக்கொள்ளலாம் ஆனால் சொலவடைகளுக்கான பொருளை அதைச் சொன்னவனின் வாழ்வியலில் இருந்துதான் பெற முடியும்.

சொலவடைகள் எந்தச் சூழலில் எத்தகைய அனுபவத்தின்போது சொல்லப்படுகிறது என்பதை வைத்துத்தான் அதன் உண்மையான பொருளை உணர்ந்து கொள்ள முடியும்.

சொலவடைகள் ரசனை சார்ந்தவை. அனுபவம் சார்ந்தவை. வாழ்வின் இரத்தமும் சதையுமாக நம் முன் நிற்பவை.
பழமொழிகளைப் பொருத்த அளவில் அவைகள் கி.வா.ஜெகந்நாதன் காலம் தொட்டு தொகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அப்பழமொழிகளை வாசிக்கிறார்கள். தனக்குத் தோன்றிய விதத்தில் எல்லாம் பொருள் புரிந்துகொள்கிறார்கள். பண்டிதர்கள் வேறு பழமொழிகளுக்கு அனர்த்தமாக பொருள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்- காட்சி ஊடகக்காரர் வேறு தன் பங்கிற்கு பழமொழிகளைக் குத்திக் குதறுகிறார்கள். பழமொழிகளின் உண்மையான பொருளை அனுபவம் சார்ந்து இதுவரை யாரும் எழுத்தில் முன் வைத்திருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

‘பழமொழி விளக்கம்‘, ‘பழமொழி நானூறு‘ என்று பழந்தமிழ் பாடல் நூல்கள் உள்ளன. இதுதவிர உரைநடையில் மொத்தமாக பழமொழிகளை முன்வைத்து யாராவது பேசியிருக்கிறார்களா என்றும் எனக்குத் தெரியவில்லை பழமொழிகளை மையமாகக் கொண்டு ஆய்வு நூல்கள் பல வெளிவந்துள்ளன.

பழமொழிகளின் பாடே இப்படி என்றால் சொலவடைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சொலவடைகளை அசல் கிராமத்தான்கள் மட்டுமே உள்வாங்கிக்கொள்ள முடியும்!

உயிரோசையில் அடுத்த இதழில் இருந்து வெளிவர உள்ள 'பழமொழிகளும் சொலவடைகளும் சொல்லும் வாழ்வியல்' என்ற தலைப்பில் பழமொழிகள் படைக்கப்பட்ட சூழல். சொலவடைகள் உருவான காலம், இன்றைய எதார்த்த வாழ்வில் அவைகளுக்கான 'இடம்', அவற்றின் பின்புலத்தில் உள்ள கிராமத்து வாழ்க்கை அனுபவச் சுவடு, சுவாரஸ்யமான கதையாடல் என்று பல்வேறு விசயங்கள் குறித்துப் பேசலாம் என்று எண்ணுகிறேன்.

உயிரோசையின் வாசகர்களை கிராமிய மணத்துடன், வட்டார வழக்கு மொழியுடன் கைகோர்த்துப் பேச ஆசைப்படுகிறேன். அடுத்த இதழ்வரை காத்திருங்கள். சந்திப்போம்!

அன்பன்
கழனியூரன்

சொலவடைகளும் பழமொழிகளும் 2



  நாட்டுப்புறக்கதைகளைப் போலவே சொலவடைகளிலும் பல்வேறு  வகைமைகள் உள்ளன. நாட்டார் கதைகளில் சமூகம் சார் கதைகள், நகைச்சுவை கதைகள், புராணமரபுக்கதைகள், நீதிக்கதைகள், பாலியல் கதைகள், மிகை எதார்த்தக் கதைகள், குடும்பக் கதைகள், விலங்குகள், பறவைகள் சார் கதைகள், ராஜா ராணி கதைகள், என்று பலவகைக் கதைகள் இருப்பதைப் போலவே சொலவடைகளிலும் பழமொழிகளிலும் பலவகைகள் உள்ளன.

‘சொலவடைகளில் உள்ள சிக்கலே அவைகளை உளவாங்கிக் கொள்வதில்தான் உள்ளது’ என்று பேராசிரியர் தே.லூர்து சொல்கிறார். பழமொழிகள் பற்றிய அவரின் ஆய்வு நூல் குறிப்பிடத்தகுந்தததாகும்.

ஒரு பிரதிக்கு பல விளக்கங்கள் என்பதை திருக்குறளில் நாம் பார்க்கிறோம். ஒரே குறளுக்கு உரையாசிரியர்கள் பலரும் தத்தமக்குத் தோன்றிய விளக்கங்களைத் தருகிறார்கள்.

இந்தக் கூற்று சொலவடைகளுக்கும் பொருந்தும். சொலவடைகளைக் கையில் எடுப்பவர்கள், அதை உண்டாக்கியவனின் அனுபவத்தை மறந்து விட்டு தத்தம் அனுபவங்களுடன் அவற்றைப் பொறுத்திப் பார்த்து விளக்கம் சொல்கிறார்கள்.
சொலவடைகளைச் சேகரித்து தொகுத்தால் மட்டும் போதாது. அவைகளுக்கு பெரியவர்கள் யாராவது விளக்கம் சொல்லவும் வேண்டும். நீதி இலக்கியங்களுககு உரையாசிரியர்கள் விளக்கமாக உரை எழுதுவதைப் போல.

இந்தத் தொடரில் பாமர மக்கள் உண்டாக்கி உலவ விட்டிருக்கிற சில சொலவடைகளுக்கு என் பாணியில் விளக்கம் முயல்கிறேன்
பொதுவாழ்வில் அக்கறை உள்ளவர்களாகச் சிலர் திகழ்வார்கள். அவர்களின்  மனம் இயல்பாகவே பொதுமக்களுக்கு தொண்டு செய்வதை நாடும். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் இத்தகையவர்கள் தானே வலியச் சென்று உதவிகள் செய்வார்கள் தான் செய்த உதவிக்கு எந்தப் பிரதி பலனையும் எதிர்பார்க்க மாட்டார்கள். இத்தகைய குணநலம் உள்ளவர்கள் பல தியாகங்களைச் செய்ய வேண்டியது வரும். இவர்களுக்கு ஊரில் நற்பெயர் இருக்கும். புகழ் இருக்கும் நாலுபேர் அவரைக் கண்டதும் கை எடுத்துக் கும்பிடுவார்கள். பொதுதொண்டு செய்வதால் அவருக்கு ஆத்ம திருப்தி இருக்கும்.

இத்தகைய பொதுசேவை செய்யும் மனப்பான்மை, உலகில் வெகுசிலருக்கே இருக்கும். பெரும்பாலும் மக்கள் தன்வீடு, தன்பெண்டு, தன் பிள்ளைகளின் நலனில் மட்டுமே அக்கறை செலுத்துவார்கள். சொத்து சுகம் சேர்ப்பது மேலும் மேலும் பணத்தைச் சேமிப்பது என்றே பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை அமைந்திருக்கும்.

சுயநலமாக, தன் குடும்ப முன்னேற்றத்திற்காக மட்டும் வாழும் மனிதர்களின் மனம் தேவையான அளவிற்கு பொன், பொருளைச் சேர்த்த பிறகு புகழை நாடும். ஆனால் அத்தகையவர்களுக்கு எளிதில் புகழ் கிடைக்காது.
பொது நலத்தொண்டு செய்து வாழ்கின்றவர்களுக்குத் தன் சொந்தக் குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்காது. பொது நலனில் அளவுக்கு அதிகமாக அக்கறை செலுத்துகின்றவர்கள். தன் சொந்தக் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாட்டார்கள், இத்தகையவர்களின் சொந்த வாழ்க்கை சோகமாகவேத் திகழும். இவர்களின் குடும்பத்தினரிடம் கேட்டால், ‘அவர் ஊருக்கு உழைத்து என்ன செய்ய? இங்கே, குடும்பம் வறுமையில் வாடுகிறதே’ என்று அங்கலாய்ப்பார்கள்.

சுயநலமாக வாழ்கின்றவனுக்கு புகழ் கிடைப்பதில்லை. பொதுநலமாக வாழ் கின்றவனுக்கு பணம் கிடைப்பதில்லை. இந்த இடைவெளி, மனிதர்களின் வாழ்வில் இருந்துகொண்டே இருக்கும்.

பொதுநலத்தில் அக்கறை கொண்டு, தன் சொந்தக் காரியங்களைக் கவனிக்காமல் வாழ்ந்தார் ஒருவர்.
அவரைப்பற்றி அந்த ஊரில் உள்ள பெரியவர் ஒருவரிடம் விசாரித்தபோது பெரியவர் சொன்னார். ‘அவரா, அவர் ஊருக்கு வண்ணப்பெட்டி. வூட்டுக்குப் பீத்தப்பெட்டியாச்சே!’ என்று பெரியவர் சொன்ன அந்தச் சொலவடை இரண்டுவிதமான பெட்டிகளைப் பற்றிப் பேசுகிறது. பெட்டி என்பது இங்கு பனை நாரினால் செய்யப்பட்ட நார்ப்பெட்டியைக் குறிக்கும். வண்ணப்பெட்டி, பீத்தப்பெட்டி என்று இரண்டுவிதமான பெட்டிகளைப் பற்றி இச்சொலவம் பேசுகிறது. இரண்டு விதமான, வாழ்வியல் பயன்பாடுகளைக் குறியீடாக, அச்சொற்கள் குறித்து நிற்கின்றன.

‘வண்ணப்பெட்டி என்பது அழகான வாழ்க்கை முறை; பீத்தப்பெட்டி (பிய்ந்துபோன பெட்டி) என்பது வறுமையான வாழ்க்கை முறை’ என்று பொருள் உணர்ந்து கொண்டு மீண்டும் அச்சொலவத்தை நினைவுகூர்ந்து பாருங்கள். சொலவம் சொல்ல வந்த பொருள் மிகச் சுலபமாகப் புரியும்.

‘ஊரில் உள்ள மக்களுக்கு எல்லாம் உதவிகள் செய்கிறவர்’ சொந்தவீட்டின் காரியங்களைப் பார்க்காமல் இருக்கிறார். இப்படிப்பட்ட மனிதர்களை எதார்த்த வாழ்வில் நாம் கண்கூடாகப் பார்க்கத்தான் செய்கிறோம். அது அவருடைய குணச்சித்திரம்.
இப்படி வாழ்கின்ற மனிதர்களுக்கு ஆறுதல் சொல்வது போன்று அமைந்துள்ளது. ‘ஊரா பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’ என்ற பழமொழி.

வாசகர்களுக்கு இப்போது சொலவடைக்கும் பழமொழிக்கும் உள்ள வேறுபாடு புரியும் என்று நம்புகிறேன்.
நம் முன்னோர்கள், மூதாதையர்கள், மனிதர்களின் வாழ்க்கையைக் கூர்ந்து பார்த்து, சிந்தித்து,  தன் அனுபவங்களின் விளைச்சலாகச் சொல்லி வைத்த இத்தகைய சொலவடைகள் நம்முன்னோர்கள் நமக்களித்த ‘முதுமொழிகள்’ என்றே கூறலாம்.
கிராமத்தில் ஒரு காலத்தில் வாழ்ந்து மறைந்த படிக்காத பெருமக்கள் இப்படிச் சொல்லிச் சென்ற சொலவடைகள், ரசிக்கத்தக்கதாகவும் இலக்கியத்தரம் மிக்கதாகவும் உள்ளன.

நீதி இலக்கியங்களைப் போன்று பழமொழிகளைப் போன்று கிராமத்து மக்களின், பாமரர்களின் நாவில் இன்றும் உலவும் சொவடைகள், சொல்லும் வாழ்வியலை தொடர்ந்து அடுத்த இதழிலும் கூறுகிறேன்

சொலவடைகளும் பழமொழிகளும் 3

   
    
நகைச்சுவையாக, அங்கதமாக, சிரித்துக்கொண்டே, கிராமத்து மக்கள் சொல்லிக்கொள்ளும் சில சொலவடைகள் ஆழிய பொருள் நயமிக்கதாகவும் சமூக விமர்சனமாகவும் இருக்கின்றன.
அப்படிப்பட்ட சொலவடைகளில் ஒன்றுதான் “காத்துட்டுக்கு குதிரை வாங்க வேண்டும். அத காற்றாய் பறக்கவும் வேண்டும்” என்பது.
‘துட்டு அரைத்துட்டு, கால்துட்டு’ என்ற நாணயங்கள் புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில் இந்தச் சொலவடை உருவாகி இருக்கிறது. இச்சொலவடையில் உள்ள கால்துட்டு என்ற வார்த்தையிலிருந்து இச்சொலவடை உருவான காலத்தை சரியாகக் கணித்து விடலாம்.
“குறைந்த விலையில் ஒரு பொருளை வாங்க வேண்டும். அது நிறைவான பயனைத் தர வேண்டும்” என்ற மக்களின் நுகர்கலாச்சாரம் சார்ந்த மனநிலையை இச்சொலவடை சொல்வது வாசகர்களுக்கு முதல் வாசிப்பில் புரியும். ஆனால் இச்சொலவடையின் அருகில் நின்று நிதானமாக மறுவாசிப்பு செய்தால் பண்ணையார்களின் முதலாளித்துவ மனோபாவம் இச்சொலவடையில் பதிவாகி இருப்பது புரியும்.
‘மிகக் குறைந்த கூலிக்கு வேலைக்கு ஆட்கள் கிடைக்க வேண்டும். அவர்கள் மிகக்கடுமையாக உழைக்கவும் வேண்டும்’ என்ற முதலாளித்துவ சிந்தனை. இப்பழமொழியில் பதிவாகி உள்ளது.
மக்களின் எதார்த்த மனோபாவம் பண்ணையாளர்களின் ஏகாதிபத்திய மனோபாவம் முதலியவை இச்சொலவடையில் பதிவாகியுள்ளதை என்னைப் போன்றோர் விளக்கிச் சொல்ல வேண்டியதிருக்கிறது.
----
முந்தைய சொலவடையில் ‘காத்துட்டு’ என்ற நாணயத்தைக் குறிக்கும் சொல். அச்சொலவடை தோன்றிய காலத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது. “சாமியே சைக்கிளில் போகிறபோது, பூசாரி புல்லட் கேட்டானாம்” என்ற சொலவடையில் ‘சைக்கிள், புல்லட்’ என்ற சொற்கள் வந்துள்ளன. ‘சைக்கிள், புல்லட்’ என்ற வாகனங்கள் புழக்கத்திற்கு வந்த காலகட்டத்தில் இச்சொலவடை உருவாகி இருக்க வேண்டும். இச்சொலவடையும் சொற்களால் அது தோன்றிய காலத்தை உணர்த்தி நிற்கிறது
‘எலக்ட்ரிக்கை நம்பி எலை (இலை) போடாதே” என்கிறது ஒரு சொலவம். மின்சாரத்தை முழுமையாக நம்பி எந்தக் காரியத்திலும் இறங்காதே என்று எச்சரிக்கிறது இச்சொலவம்.
‘கெரண்ட் எப்ப கட்டாகும்’ என்று தெரியாது. அப்படிப்பட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று. ஆனால் மின்சாரம் புழக்கத்திற்கு வந்த புதிதில் மின் வெட்டின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு எவனோ ஒரு கிராமத்தான் உருவாக்கிய சொலவடையாகும் இது. இச்சொலவம் தான் உருவான காலகட்டத்தைச் சில சொற்களால் சுட்டிக்காட்டுகிறது. சொலவத்தை உருவாக்கியவன் பெற்ற அதே அனுபவம். அச்சொலவத்தை இன்று நாம் பயன்படுத்தும்போதும் நமக்குக் கிடைக்கிறது. அதனால்தான் இச்சொலவம் இன்றுவரை உயிர் வாழ்கிறது.
‘எலை’ என்பது இலை என்பதின் திரிபு. இந்த இலை சாப்பாட்டு இலையைச் சுட்டி நிற்கிறது. இரவு நேரத்தில் எலக்ட்ரிக் லைட்டை நம்பி சாப்பிடத் தொடங்காதே’ என்று எச்சரிக்கிறது இச்சொலவம். இருட்டில் சாப்பிடக்கூடாது என்பது ஐதீகம். இருட்டில் சாப்பிடும்போது சாப்பாட்டில் கண்ணுக்குத் தெரியாமல் புழு,பூச்சி போன்றவை விழுந்து விட வாய்ப்புள்ளது. எனவே இருட்டில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். எலக்ட்ரிக்லைட் எரிந்தாலும் அதை நம்பி கிராமத்து மக்கள் சாப்பிட மாட்டார்கள்.  தூரத்தில் குத்துவிளக்கு எரிந்து கொண்டே இருக்கும். இச்சொலவமும் எலக்ட்ரிக் என்ற மின்சாரம் பயன்பாட்டிறகு வந்தபிறகு உருவானதாகும். ‘எலக்ட்ரிக்’ என்ற சொல் இச்சொலவம் தோன்றிய காலகட்டத்தை உணர்த்துகிறது.
........
ஏ.டி.எம். என்ற இயந்திரம் புழக்கத்திற்கு வந்த பிறகு ஏ.டி.எம். என்ற இயந்திரத்தின் குறைபாடுகளை அனுபவித்த எவனோ ஒருவன், ‘ஏ.டி.எம்.ஐ நம்பி எவங்கிட்டயும் கடன் வாங்காதே’ என்ற சொலவத்தை மிகச்சுலபமாக உருவாக்கி உலவவிட்டிருக்கிறான். இச்சொலவமும் தான் உருவான காலகட்டத்தை உணர்த்துகிறது.
காத்துட்டு, சைக்கிள், புல்லட், எலக்ட்ரிக், ஏ.டி.எம். என்ற சொற்கள் அமைந்த சொலவங்கள் அவை தோன்றிய காலத்தைச் சொல்லாமல் சொல்கின்றன. காலங்காலமாக புதிய புதிய சொலவங்கள் மக்களால் படைக்கப்படுகின்றன என்ற செய்தியையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
.............
சில சொலவங்கள் மாற்று வடிவத்தை அடையும். கலாச்சார மாற்றத்தால் பண்பாட்டு மாற்றத்தால் அத்தகைய மாற்றங்களை அடையும்.
‘உடையவனே ஒண்ணுமில்லாமல் அலைகிறபோது லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்டிச்சாம்’ என்கிறது ஒரு சொலவடை. பண்ணையாரே சாதாரண ‘மல்’ வேட்டி உடுத்திக்கிட்டு அலையும்போது அதே பண்ணையாளரிடம் வேலை செய்கிறவன் பட்டு வேட்டி எடுத்துத் தாருங்கள் என்று கேட்கமுடியாது என்ற தொனியில்தான் இச்சொலவடை அமைந்துள்ளது. அதே தொனியில் இஸ்லாமியர்கள் குதிரை வணிகம் செய்ய இந்தியாவுக்குள் வந்தபிறகு ஒரு சொலவடை உருவாக்கப்படுகிறது. ‘ராவுத்தரே கொக்கா பறக்கிறபோது குதிரை கோதுமை ரொட்டி கேட்டிச்சாம்’ என்பதுதான் அச்சொலவடை.
கவனித்துப் பார்த்தால் இரண்டு சொலவடைகளும் ஒரே மாதிரியான தொனியில்தான் பேசுகின்றன. ஆனால் முந்தைய சொலவடையின் காலம் வேறு. ‘ராவுத்தர்’ சம்பந்தப்பட்ட சொலவடை உருவான காலம் வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படி ஒரே பொருளை வலியுறுத்தும் பல சொலவடைகள் காலங்காலமாகத் தோன்றிக் கொண்டேதான் இருக்கின்றன.
‘கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைச்சிட்டான்’ என்பது ஒரு சொலவடை. இந்த பொருளில் இஸ்லாமிய கலாச்சாரத்தில் பிற்காலத்தில் வேறொரு சொலவடை. யாரோ ஒரு இஸ்லாமியரால் படைக்கப்படுகிறது. “ஊரா கோழியை அறுத்து உம்மா (அம்மா) பேர்ல பாத்திகா ஓதிட்டான்” என்பதுதான் அச்சொலவடையாகும். பாத்திகா என்பது இறந்தவர்களை நினைவுகூர்ந்து ஓதுவது.
இந்தச் சொலவடைகள் இரண்டும் சொல்லவரும் பொருள் ஒன்றுதான். சொல்லப்படும் களம், கலாச்சாரம் போன்றவைகள்தான் வேறாகும்.
‘எலக்ட்ரிக்’ என்ற கெரண்டு புழக்கத்திற்கு வந்த காலம் ஒன்று. ‘புல்லட்’ என்ற வாகனம் புழக்கத்திற்கு வந்த காலம் ஒன்று ‘ஏ.டி.எம்’ என்ற இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்திருக்கும் காலம் வேறு. ஆக, காலங்காலமாகச் சொலவடைகள் தோன்றிக் கொண்டேதான் இருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
“ சொலவடைகள் பழமொழிகள், விடுகதைகள், நாட்டார் பாடல்கள், கதையாடல்கள் போன்றவை காலங்காலமாக வெவ்வேறு வடிவங்களில் வாய்மொழி வடிவில் தோன்றிக் கொண்டேதான் இருக்கும்.
‘நாட்டார் தரவுகள்’ என்றால் அவைகள் மிகவும் பழமையானவை, எழுத்து, மொழி தோன்றுவதற்கு முன்பே வாய்மொழி வடிவில் தோன்றியவை’ என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது.
ஒரு காலத்தில் இருந்த புழுப்பூச்சிகள் இன்றைய காலகட்டத்தில் உயிர் வாழ்வதில்லை. ஆனால் இன்றைய இயற்கையின் தகவமைப்புக்கு ஏற்ப புதிய புதிய புழுப்பூச்சிகள் தோன்றிக்கொண்டேதான் இருக்கின்றன. அதுபோல காலங்காலமாக நாட்டுப்புறவியல் சார்ந்த ஆக்கங்கள் வெவ்வேறு வடிவங்களில் தோன்றிக்கொண்டேதான் இருக்கும். மனுஷங்க இருக்கிறவரை மனுஷ நாத்தமும் இருந்து கொண்டேதான் இருக்கும். மூக்கு இருக்கிற வரை சளியும் இருக்கும் என்பதைப் போல...

சொலவடைகளும் பழமொழிகளும் 4



அகப்பைச் சிலம்பு ஆடிய குரு போல’ என்கிறது ஒரு சொலவம். முதல் வாசிப்பிலும் முதல் யோசிப்பிலும் இச்சொலவத்திற்கான பொருள் அனேக வாசகர்களுக்குப் புரியாது.


இச்சொலவத்தில் உள்ள சொற்கள் மிக எளிமையானவை. ஆனாலும் இச்சொலவத்திற்கு என்னைப் போன்ற ஒருவன் விளக்கம் சொல்ல வேண்டியதிருக்கிறது.

ஒரு கதை சொல்லியின் சுவாரஸ்யத்துடன் சொன்னால்தான் இச்சொலவத்தின் பொருள் புரியும்.

ஒரு ஊர்ல ஒரு சிலம்பாட்ட அண்ணாவி இருந்தார். சிலம்பாட்டக் கலையை முறையாகக் கற்றுத்தேர்ந்து அக்கலையைப் புதிய மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் ‘ஆசானை’, அண்ணாவி என்று அழைப்பார்கள்.

அண்ணாவிக்கு கல்யாணம் ஆகிப் பிள்ளை குட்டிகளெல்லாம் இருந்தன. அண்ணாவியின் மனைவி ‘மகா கெட்டிக்காரி’ ரொம்ப புத்திசாலி.

அண்ணாவி தன்னிடம் சிலம்பாட்டக் கலையைக் கற்றுக்கொள்ள சேர்ந்த புதிய மாணவர்களுக்கு சிரத்தையுடன் சிலம்பாட்டக்கலையின் நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு நாளும் மாணவர்கள் அண்ணாவியிடம் இருந்து சிலம்பு விளையாட்டின் ஒவ்வொரு அடி முறைகள் பற்றிக் கற்றுத் தேறிக்கொண்டிருந்தார்கள்.

சிலம்பு விளையாட்டைப் பயிலும் மாணவர்களில் ஒருத்தன் ரொம்ப வசதி வாய்ப்பு உள்ளவன். பெரிய இடத்துப்பிள்ளை. அந்த வட்டாரத்தில் இந்த அண்ணாவியை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. அவ்வளவு பெரிய ‘தொள்ளாளி’ அவர்.

இந்த அண்ணாவியின் பெயரைக் கேட்டாலே மற்ற அண்ணாவிமார்கள் எல்லாம் எழுந்து நின்று மரியாதை செய்வார்கள் அந்த அளவுக்குப் பேரும் புகழும் பெற்று விளங்கினார் இந்த அண்ணாவி.

இந்த அண்ணாவியிடம் சிலம்பாட்டக் கலையைப் படித்த மாணவர்களுக்கும் அந்த வட்டாரத்தில் தனி மரியாதை இருந்தது.

எந்த அண்ணாவியும் தான் கற்ற வித்தைகள் அனைத்தையும் தன் சிஷ்யப் பிள்ளைகளுக்கு சீடர்களுக்கு முழுமையாகச் சொல்லிக் கொடுக்க மாட்டார். முக்கியமான சில அடிமுறைகளைக் கையிருப்பாக மறைத்து வைப்பார்கள்.

பண்ணையாரின் மகனான அந்தச் சிஷ்யப்பிள்ளை தன் அண்ணாவியான குருநாதருக்கு குருதட்சணை என்ற பெயரில் நிறைய காசு பணத்தைக் கொடுத்தான். எனவே குருநாதரும் ‘கரவில்லாமல்’ அந்தச் சீடனுக்கு மட்டும் தனக்குத் தெரிந்த எல்லா அடிமுறைகளையும் கற்றுக்கொடுத்துவிட்டார்.

குருநாதரிடம் இருந்து அவருக்குத் தெரிந்த விளையாட்டு முறைகள் அனைத்தையும் கற்றுக்கொண்டதால் அந்தப் பணக்காரச் சீடனுக்குத் ‘தான்’ என்ற அகந்தை தலைக்கேறிவிட்டது.

அந்த அண்ணாவி இதுவரை வேறு எந்த அண்ணாவியிடமும் சிலம்பம் விளையாடித் தோற்றதில்லை. அவரின் பெயரைக் கேட்டாலேயே அஞ்சி நடுங்குவார்கள். அவரிடம் எத்தனை விதமான அடிமுறைகள் இருக்கு என்று அந்த வட்டாரத்தில் உள்ள எந்த அண்ணாவிக்கும் தெரியாது.

தன் குருநாதரிடம் இருந்து எல்லாவிதமான விளையாட்டு முறைகளையும் கற்றுக்கொண்டதால், அந்தப் பணக்கார சீடன் ஒருத்தன் குருநாதரின் வீட்டுக்கே வந்து ‘என்னோடு சிலம்பம் விளையாடி உம்மால் ஜெயிக்க முடியுமாய்?’ என்று சவால் விட்டான்.

‘பணக்கார சீடன் தன் புத்தியைக் காட்டி விட்டான்’ என்று தன் மனதிற்குள் நினைத்து நொந்துகொண்டார்.


பணக்கார சீடன் குருவையே எதிர்விளையாட்டுக்கு அழைத்த சேதி ஊர் முழுவதும் பரவிவிட்டது. ‘அவன் குருவை மிஞ்சிய சீடனாகி விட்டான்’ என்று சிலர் பேசிக்கொண்டார்கள். குருநாதர் கூனிக் குறுகிப் போக, சீடன் தலைநிமிர்ந்து ஆணவத்தோடு ஊருக்குள் அலைந்தான்.

பணக்கார சீடன் சவால் விட்ட சேதி அண்ணாவியின் மனைவி காதுவரைப் போயிற்று. தன் கணவன் முகம் வாடி இருப்பதைக் கவனித்த அண்ணாவியின் மனைவி, தன் புருசனைப் பார்த்து, ‘நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? உங்கள் முகம் ஏன் வாடிப்போய் இருக்கிறது’ என்று கேட்டாள்.

அண்ணாவி, ‘அந்தப் பணக்கார சீடன் எனக்கு நிறைய பணம் கொடுத்து. என்னிடம் இருந்த அடிமுறைகள் அனைத்தையும் கற்றுக்கொண்டான். நானும் எந்த வித்தையையும் கையிருப்பாக வைத்துக் கொள்ளாமல் அவனுக்கு கற்றுக்கொடுத்துவிட்டேன். இப்போது அந்த நன்றி கெட்ட பையல் குருவான என்னையே எதிர்விளையாட்டுக்கு அழைக்கிறான். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை’ என்று மன வருத்தத்துடன் கூறினார்.

புருசன் சொன்னதைக் கேட்ட பெண்டாட்டிக்காரி, ‘அட, இதற்கா போய் இவ்வளவு தூரம் கவலைப்படுகிறீர்கள். ‘குரு’ என்றைக்கும் குருதான். சீடன் என்றைக்கும் சீடன். எந்த குருவையும் உலகத்தில் எந்த சீடனும் ஆழம் பார்க்க முடியாது. முதலில் இந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். மன தைரியத்தை விடாதீர்கள். நான் அந்தச் சீடனை வெல்லும் வழியைச் சொல்லித் தருகிறேன். நாளையே அவனை எதிர்விளையாட்டுக்குக் கூப்பிட்டு நீங்களும் சவால் விடுங்கள். பிறகு நடப்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று புருசனுக்குத் தைரியம் கூறினாள்.

அண்ணாவிக்குத் தன் மனைவி மதிநுட்பமானவள். ‘ஏதேனும் ஒரு ‘அசைவு’ இல்லாமல் அவள் இவ்வளவு தைரியமாக அவனை எதிர்விளையாட்டுக்கு வாருங்கள்’ என்று அழைக்கச் சொல்ல மாட்டாள்’ என்று நம்பினார். எனவே தன் மற்ற சீடர்களை அழைத்து ‘நாளை மாலை அஞ்சு (ஐந்து) மணி வாக்கில் ஊர் நடுவில் உள்ள பொதுத்திடலில் போட்டியை வைத்துக்கொள்வோம். நான் தயார்’ என்று அந்த பணக்கார சீடனுக்குச் சொல்லி அனுப்பினார்.

‘பெரியவரான அண்ணாவி தனக்குத் தெரிந்த வித்தைகளை எல்லாம் சொல்லித் தந்தேன்’ என்று பொய்தான் சொல்லி இருப்பார் போலவும். இல்லை என்றால் எப்படி இவ்வளவு தைரியமாக, நம்மைப் போட்டிக்கு அழைக்கிறார் என்று நினைத்ததும் அவனை அறியாமலேயே அவனுக்குள் ஒருவித பயமும் நடுக்கமும் வந்துவிட்டது.


என்றாலும் போட்ட சபதத்தை ஏற்றுக்கொள்ளாமல் பின்வாங்கக்கூடாது என்பதற்காக அந்தப் பணக்கார சீடனும் ‘களம்’ இறங்கத் தயாராகினான்.

‘தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல வித்தை கற்றுக்கொடுத்த பெரியவரையே எதிர்விளையாட்டுக்கு அழைக்கிறானே, இந்த குருவை மிஞ்சிய சீடன் என்று ஊர்ப் பெரியவர்களில் சிலர் அந்தச் சீடனைத் திட்டினார்கள். ‘பெரிய அண்ணாவியை உன்னால் ஜெயிக்க முடியாது’ அவர் அனுபவத்தின் முன் நீயெல்லாம் ஒரு தூசு’ என்றும் சிலர் அவனை அதைரியப்படுத்தினார்கள்.


ஆக, ஆரம்பத்தில் அந்த பணக்கார சீடனுக்கு இருந்த சூரத்தனம் நேரமாக, நேரமாக குறைந்தது. தவறான ஒரு முடிவெடுத்து விட்டோமோ என்று மனம் குழம்பினான். ‘புலி வாலைப் பிடித்தால் விட முடியாது’ என்ற கதையாக போட்ட சவாலுக்காக அந்தப் பணக்கார சீடன் களமிறங்கினான்.

நேரமாக ஆக குருவுக்கு தன்னம்பிக்கை துளிர்த்தது. ‘அவன் வயதும் நம் அனுபவமும் சரி நாம் ஏன் அவனுக்குப் பயப்பட வேண்டும்?’ என்று மனத்தெளிவு கொண்டார்.

குருநாதர் வீட்டை விட்டுக் கிளம்பும்போது, வழக்கமாகத் தன் கையில் எடுத்துக் கொள்ளும் சிலம்பக் கம்பை எடுத்துக் கொண்டார். அப்போது அவர் எதிரே வந்த அவர் மனைவி. அடுக்களையில் இருந்து எடுத்து வந்த நீளமான காம்புடைய ஒரு மர அகப்பையைக் கொடுத்து, இதையும் ஒரு ஆயுதமாக, இடது கையில் வைத்துக் கொள்ளுங்கள் என்றாள்.

புத்திசாலியின் மனைவி சொல்வதில் ஏதேனும் ஒரு சூட்சுமம் இருக்கும் என்று நினைத்த ஆசான். பொண்டாட்டிக்காரி கொடுத்த அந்த மர அகப்பையையும் இடது கையால் வாங்கிக்கொண்டு ஊரின் நடுவில் இருக்கும் மைதானத்திற்குச் சென்றார்.

ஏற்கனவே களத்தில் அதைரியத்துடன் அரைகுறை மனதுடன் நின்ற சீடன், குருநாதர் என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு புதியதொரு ஆயுதத்தைக் கையில் கொண்டு வருவதைப் பார்த்து, ‘எல்லா வித்தைகளையும் சொல்லிக் கொடுத்துவிட்டேன்’ என்று சொன்ன குரு. இப்போ புதியதொரு அகப்பை ஆயுதத்துடன் வருவதைப் பார்த்துப் பயந்துவிட்டான். பயத்தில் அவனுக்கு வேர்த்து வேர்த்துக் கொட்டியது. ‘இனி குருநாதர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுவிட வேண்டியதுதான்’ என்று நினைத்து அவர் காலில் விழுந்து ‘வித்தை சொல்லிக் கொடுத்த குருவையே சண்டைக்கு அழைத்தது என் தப்புதான். என்னை மன்னித்து விடுங்கள்’ என்கிறான்.

குருநாதர், ‘நம் மானம் கப்பலேறாமல் இருந்ததே’ என்று நினைத்து மகிழ்ந்தார். களத்திற்கு வரும்போது இடது கையில் அகப்பையைக் கொடுத்து அனுப்பிய மனைவியின் புத்திசாலித்தனத்தை மனதிற்குள் பாராட்டிக் கொண்டார் குரு.

குருவும் சீடரும் சிலம்ப விளையாட்டில் மோதிக் கொள்ளும் காட்சியைக் கண்டு ரசிக்கக்கூடி இருந்த ஊர்க்கூட்டம் ‘உப்புச் சப்பில்லாமல்’ போய்விட்டதே என்று நினைத்தது. இப்போது மீண்டும் ‘ஒருமுறை அகப்பைச் சிலம்பு ஆடிய குரு போல’ என்ற சொலவடையைச் சொல்லிப் பாருங்கள். அதன் பொருள் புரியும்.

சொலவடைகளும் பழமொழிகளும் 5

      


 எதார்த்த வாழ்வில் சில மனிதர்கள் ஒரு காரியத்தைத் தானும் செய்ய மாட்டார்கள். அக்காரியத்தைச் செய்யவிட மாட்டார்கள்.

ஒருவனுக்குப் பணம் தேவைப்படும். அவன் ஒரு முதலாளியிடம் வேலை பார்ப்பான். வேலைக்காரன் முதலாளியிடம் தன் அவசரத் தேவைக்குப் பணம் கேட்பான். ஆனால் முதலாளி பணம் கொடுக்க மாட்டான். ‘நாளை தருகிறேன். நாளை மறுநாள் தருகிறேன்’ என்று வாய்தா போட்டுக்கொண்டே இருப்பான். வேறு வழியில்லாமல் அந்தத் தொழிலாளி வேறு ஒருவனிடம் போய் கைமாத்தாகப் பணம் கேட்பான். அவன் கைமாத்துத் தர தயாராக இருப்பான். ஆனால் முதலாளி குறுக்கே வந்து ‘நீ கைமாத்தாக என்னிடம் வேலை பார்க்கிறவனுக்குப் பணம் கொடுக்க வேண்டாம். நான் கொடுத்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி உதவி செய்கிறவனையும் செய்யவிடாமல் தடுத்து விடுவான் தானும் பணம் கொடுத்து உதவ மாட்டான். இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்த்துச் சொல்லப்பட்ட சொலவம்தான், ‘அக்கப்போர் பிடிச்ச நாயி வைக்கப்போரில் (வைக்கோல் போர்) படுத்துக்கிட்டுத் தானும் திங்காதாம். திங்கிற மாட்டையும் திங்க விடாதாம்’ என்பது இச்சொலவடையில் வரும் நாய், மாடு முதலியவை ‘நாய்’ போன்ற மனிதனை ‘மாடு’ போன்ற மனிதனைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இதே பொருளில், ‘மேயுற மாட்டைக் கெடுத்திச்சாம். மெனக்கெட்ட மாடு’ என்ற சொலவமும் புழக்கத்தில் உள்ளது. ‘மெனக்கெட்ட’ என்ற வட்டார வழக்குச் சொல்லுக்கு ‘வேலை இல்லாத’ என்று பொருள். தானும் புல்லை மேயாது, புல்லை மேயும் மாட்டையும் மேயவிடாமல் கெடுக்கும் மாடு போன்ற மனிதனைத்தான் இச்சொலவடை சுட்டிக்காட்டுகிறது.

இதே தொனியில் அமைந்த ‘தானும் செய்யான், தள்ளியும் படான்’ என்ற பாலியல் சார்ந்த சொலவடையில் இங்கு நினைவு கூறத்தக்கதாகும்.

தானும் ஒரு வேலையைச் செய்ய மாட்டான். அதே வேலையை அடுத்தவன் செய்ய முன்வந்தால் அவளையும் அவ்வேலையைச் செய்யவிடாமல் தடுத்து விடுகிற மனிதர்களை நடைமுறை வாழ்வில் நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.

.........

பரிசல் மூலம் ஆற்றைக் கடக்கும் ஒரு மனிதனின் பேராசையை, ‘அக்கரைக்குப் போகவும் செய்யனும், பரிசிலை கவிழ்த்தவும் செய்யனும்’ என்ற பழமொழி பதிவு செய்துள்ளது.

நேரமோ இருட்டி விட்டது. இனிமேல் பரிசிலை ஆற்றில் இறக்க முடியாது என்ற நிலை. ஆனால்  அக்கரையில் பார்க்க வேண்டிய வேலையும் இருக்கிறது. மதில் மேல் பூனையாக மனம் கிடந்து துடிக்கிறது பரிசல்காரனுக்கு. நம் பரிசலை இக்கரையில் கவிழ்த்து வைத்துவிட்டு, அக்கரைக்கு வேறு ஒரு பரிசலில் ஓசியில் சென்றால் எப்படி இருக்கும்? என்று அவன் மனம் எண்ணிப் பார்க்கிறது. அந்தப் பரிசல்காரனின் எண்ண வெளிப்பாடுதான் இப்பழமொழி.

‘மச்சித் தானியமும் குறையக்கூடாது. மக்கள் முகமும் வாடக் கூடாது’ என்ற பழமொழியும் அதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறது.

அந்தக் காலத்தில் அறுவடை செய்த நெல்லை மச்சில் பாதுகாப்பாக சேமித்து வைக்கும் பழக்கம் இருந்தது. சாப்பாட்டுத் தேவைக்கு மச்சில் இருந்து நெல், கம்பு, கேழ்வரகு, சாமை, கேப்பை போன்ற தானியங்களை எடுத்து அவ்வப்போது பயன்படுத்திக் கொள்வார்கள்.

ஒரு சம்சாரி, ‘தான் மச்சியில் சேமித்து வைத்த தானியமும் வயிற்றுப்பசிக்காகப் பிள்ளைகள் சாப்பிட்டு குறைந்துவிடக்கூடாது. ஆனால் அதே சமயம், தன் பிள்ளைகளின் (மக்களின்)முகமும் பசியால் வாடிவிடக்கூடாது என்று நினைக்கிறான்.

இப்படி இரட்டை மனநிலையில் வாழும் சில மனிதர்களையும், எதார்த்த வாழ்வில் நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.

‘அக்காளும் விருந்துக்கு வரணும், அரிசியும் தீரக்கூடாது. ‘மாவுக்கும் ஆசை, கூழுக்கும் ஆசை’ என்ற பழமொழிகளும் இதே தொனியில் அமைந்ததுதான் ‘கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை’ என்ற பழமொழியும்.

மேலே நான் சொன்ன பழமொழியின் மாற்றுவடிவம்தான்.

‘ம.பொ.சி. ‘ மாதிரி மீசை வைத்துக்கொண்டு கூழைக் குடித்தால் கூழ் மீசையில் ஒட்டத்தான் செய்யும். ஒருவன் ம.பொ.சி. மாதிரி, மீசை வைத்துக்கொண்டு மீசையில் படாமல் கூழ் குடிக்க ஆசைப்படும் அனுபவத்தை இப்பழமொழி கேலி செய்கிறது.

‘காரியமும் நடக்கணும். காசும் செலவாகி விடக்கூடாது’ என்ற உளவியல்சார் மனித மனம் இப்பழமொழியில் கேலி செய்யப்படுகிறது.

‘அக்காள் போனால் போகட்டும், தங்கச்சி வந்தா சந்தோசம்.’

‘தங்கச்சி தலைவாசல் வழி வரவும் அக்காள் புறவாசல் வழி போய்விடுவாள்.’

இந்தப் பழமொழிகளில் ‘அக்காள்’ என்பது மூதேவியையும், ‘தங்கை’ என்பது சீதேவியையும் குறிக்கிறது.

‘மூதேவி’ என்பது புராண மரபுப்படி தரித்திரத்தின் வறுமையில் துன்பத்தின் குறியீடு, ‘சீதேவி’ என்பது செழிப்பின், செல்வத்தின், மகிழ்ச்சியின் குறியீடு.

அக்காள் என்ற மூதேவி நம் வீட்டில் இருந்து வெளியே  நடந்து செல்லும்போது, அந்த நடை அழகாகிறது. அதே அக்காள் நம் வீட்டினுள் நடந்துவந்தால் அந்த நடை அவலட்சணமாகத்தான் இருக்கும்.

சீதேவியும், மூதேவியும் ஒரே வீட்டில் குடியிருக்க மாட்டார்கள். சீதேவி இருக்கிற வீட்டிற்கு மூதேவி போக மாட்டாள். மூதேவி இருக்கிற வீட்டிற்கு சீதேவி போக மாட்டாள் என்பது நாட்டார் நம்பிக்கை. எதார்த்தமாக கிராமத்து மக்களின் பேச்சில் எப்போதும் ஒரு கேலி, கிண்டல், நையாண்டி ஆகியவை இருக்கும். அவர்கள் உருவாக்கிய சொலவடைகளில் நையாண்டி இல்லாமல் போகுமா?

மகள் வாக்கப்பட்டுபோன இடத்தில் சிறிது கஷ்டம்தான். ஆனால் பிறந்த வீட்டிலோ வறுமை. தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஆடுகிறது. புகுந்த வீட்டின் வறுமையை நினைத்து போவோர் வருவோரிடமெல்லாம் புதுப்பெண் புலம்பித் தீர்த்துக்கொண்டு இருக்கிறாள். மகளின் புலம்பல் தகப்பக்காரனின் காதில் விழுகிறது.

இத்தகைய சூழலில் அப்பக்காரன், தான் பெற்ற மகளைப் பார்த்துக் கூறிய சொலவடைதான், ‘அங்கு ஏண்டி மகளே கஞ்சிக்கு அழுகிறே’ இங்கே வாடி மகளே காத்தாப் பறக்கலாம்’ என்பது வறுமையிலும், கஷ்டத்திலும் அவர்களால் நகைச்சுவை உணர்வுடன் பேச முடிகிறது. அங்கதச் சுவையுடைய சொலவடை இது.

இச்சொலவத்தைப் போல ‘தொனி’ யுடைய சில சொலவங்களும் வட்டார வாரியாகக் காணக்கிடக்கின்றன.  ‘அங்கே ஏண்டி கிடக்கிற அலகாத்துல, இங்கே வாடி பக்கத்தில் பெருங்காத்தில’ என்ற சொலவடையைச் சொல்லலாம். அலகாத்து என்பது தென்றல் காற்றையும் பெருங்காத்து என்பது புயல் காத்தையும் குறிக்கும்.

போகிற போக்கில் அதிர்வில்லாமல் நம்  வாழ்வியலுக்குத் தேவையான போதனைகளைச் சொல்லாமல் சொல்லிவிடுகின்றன இந்தச் சொலவடைகள்.

சேலை

 வீட்டை விட்டுக் கிளம்பும் போதே மகள் சொன்னாள், “இப்படி வேளை கெட்ட வேளையில், புறப்பட வேண்டாம். இன்று ராப்பொழுது தங்கிவிட்டு, காலையில் விடிந்ததும் போ... விடியாப்பொழுதா.. என்ன? வீட்டுல என்ன கைப்பிள்ளையையா விட்டுட்டு வந்திருக்க? என் வீட்டுக்காரரும், இப்ப வந்திருவார். அவர் வந்தபிறகு, போறதுதான் நல்லது” என்று.

இப்போது மணி எட்டுதான் ஆகிறது. இப்ப புறப்பட்டா, கால் மணி நேரத்தில், பஸ் ஸ்டாண்ட் போயிறலாம். அங்க இருந்து அஞ்சு நிமிசத்திற்கு ஒரு முறை திருநெல்வேலிக்குப் பஸ் இருக்கு. ஒன்பது ஒன்பதே காலுக்குத் திருநெல்வேலி போயிட்டா கடைசி பஸ்ஸைப் பிடித்து ஊர் போய்ச் சேர்ந்திருவேன். உம்புருசன், இப்பமும், தண்ணிய போட்டுக்கிட்டுத்தான் வருவாரு.. இதுவரை என்னைப் பேசிய பேச்சு காணாதா? எவனாவது அத்தைய “தேவடியா, பலவட்டர” என்று பேசுவானா..? எந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு, என்னைய இங்க இருக்கச் சொல்லுத? எங்காயாவது போய் செத்தாலும் சாவனே தவிர, இனிமேலும் நான் நொடிப்பொழுது கூட தாமதிக்க மாட்டேன். ஏதோ, நீ போன் பேசுனியே வரச் சொன்னியேன்னு வந்தேன்.. நீதான் உன் புருசக்காரனை கட்டிக் கிடந்து அழணும். தங்கமாத்தான் பேசுகிறார் மனுஷன், தண்ணிய வாயில ஊத்திக்கிட்டு வந்துட்டார்னா, என்ன பேசணும் ஏது பேசணும் எப்படிப் பேசனும்னு ஒரு கணக்கு வழக்கு இல்லாமப் பேசுகிறாரே, நான் என்ன செய்யட்டும். நான் என்னால இயன்ற மட்டும் கொடுத்து உதவிட்டேன்.

இப்ப நான் காத்துல போட்டிருக்கது கூட கவரிங் கம்மல்தான். தங்கக் கம்மலக் கூடக் கழற்றிக் கொடுத்தேன். அதைக்கூட வித்து மனுஷன் குடிச்சித் தீத்துட்டான். நீ, அவங்கூட இருந்து காலங் கழிக்கிறதா இருந்தாக் கழி. இல்லைன்னா, பேசாம பிள்ளையைத் “தூக்கிக்”கிட்டு வீடு வந்து சேர்ந்திரு. எது சௌகர்யமோ, உன் இஸ்டப்படி செய். நான் வேண்டாம்னு சொல்லலை. உன் புருசனைத் திருத்த முடியும்னு எனக்குத் தோணலை. உன்னை நினைச்சா, என் நெஞ்சே வெடிச்சிரும் போல இருக்கு. கண்ணாசை பார்த்துட்டேன். அது போதும், அஞ்சும் பத்துமா சேர்த்து வச்சிருந்ததைக் கொண்டு வந்த உன் கையில் கொடுத்தேன். உன் புருசக்காரர் அதையும் புடிங்கிட்டுக்கிட்டுப் போயி குடிச்சிட்டு வந்துட்டார். உங்கப்பனும் குடிகாரமட்டைதான் குடிச்சிக் குடிச்சிக் குடல் அந்துதான் மண்டையைப் போட்டார். ஆனா அவர் உம் புருஷனை மாதிரி முடாக்குடி, குடிக்க மாட்டார். குடிச்சாலும் இப்படி, தாறுமாறுமா பேசி அழிச்சாட்டியம் பண்ண மாட்டார். இருக்க, இடம் தெரியாம இருந்துக்கிருவார். எனக்கு நேரமாகிறது, நான் உங்கிட்டப் பேசிக்கிட்டே இருந்தா நேரமாயிரும். பஸ்ஸை விட்டிருவேன். உம் புருசன் வாரதுக்குள்ள நான், கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

நான் புறப்படும் போது, கசங்கிய ஒரு பத்து ரூபா நோட்டை என் கையில் திணித்தாள். அவள் கண்கள் கலங்கி இருந்தது. “என்ன செய்ய... அவள் தலை எழுத்து இப்படி ஆகிவிட்டது”, என்று நினைத்துக்கொண்டே, வீட்டு வாசல்படி இறங்கினேன்.

மருமகன் வந்து இன்னும் ஏதாவது பேசி மனக்கஷ்டப்படுவதற்குள் சென்று விடுவோம் என்று நினைத்து வேகமாக நடையைக் கட்டினேன். தெருமுனை பஸ் ஸ்டாப்பிற்குச் சென்றதும் டவுண் பஸ் கிடைத்தது. கூட்டம் அதிகம் இல்லை. பஸ்ஸில் ஏறி பெண்கள் பக்கம் காலியாக இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டேன். மனசு லேசான மாதிரி இருந்தது. பஸ், ஜன்னல் வழியாக வந்த காற்று முகத்தில் பட்டது குளுமையாக இருந்தது.

மகளிடம் அவ்வளவு தூரம் பேசி இருக்க வேண்டாமோ என்று பட்டது இப்போது. மகளிடம் வளவளவென்று பேசியதில் நேரமும் கடந்துவிட்டது. எப்படியாவது ஊர் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்ற வெறி மட்டும் மனதில் இருந்தது. தூத்துக்குடி பஸ் ஸ்டாண்ட் வந்ததும் தாமதமில்லாமல் திருநெல்வேலி போகிற பஸ்ஸும் கிடைத்தது. அது ஒரு எல்.எஸ்.எஸ் பஸ்தான் என்றும், ஒரு மணி நேரத்தில் திருநெல்வேலி போய்ச் சேர்ந்துவிடும் என்றும் கூறினார்கள். மனசுக்கு நிம்மதியாக இருந்தது. நான் ஏறி உக்கார்ந்ததும் டிரைவர் பஸ்ஸைக் கிளப்பி விட்டார். ஜன்னலோரமாக உள்ள இடத்தில் உக்காந்திருந்ததால் காற்று ‘ஜில்’ லென்று வந்து முகத்திலடித்தது.

பகலெல்லாம் அலைந்த களைப்பில் கண்களைச் சொக்கியது. முன் சீட்டுக் கம்பியில் கைகள் இரண்டையும், கட்டி வைத்துக் கொண்டு தலை சாய்த்தேன். மனதில் பலப்பல நினைவுகள் ஓடின...

சின்ன வயதிலேயே புருசனைப் பறிகொடுத்த பிறகு, ஒரு பெண் தன்னந்தனியாக வாழ்வது என்பது எவ்வளவு கசப்பானது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். நல்லவனோ... கெட்டவனோ... இயன்றவனோ... இயலாதவனோ... புருசன் என்று ஒரு மனுஷன் துணையாக இருந்தால் அதன் மதிப்பே தனிதான். கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு கிடக்கும் வரை, எந்த ஆம்பளையும் கை நீட்டி ஒரு சொல் சொல்லப் பயப்படத்தான் செய்கிறான்.

அவர் மண்டையை போடும்போது எனக்கு ஐம்பதைத் தாண்டிவிட்டது. பெண் பிள்ளைகள் இரண்டையும் கட்டிக் கொடுத்தாகிவிட்டது. காலமெல்லாம், காடு கரைகளுக்குச் சென்று உழைத்தால், உடம்பும், வத்தலும், தொத்தலுமாகிவிட்டது. கல்யாணமான புதிதில் ஆள் பார்க்க ஒரு மாதிரி அம்சமாகத்தான் இருந்தேன். அவருக்கு வாக்கப்பட்டதில் இருந்து உழைத்து உழைத்தே ஓடாய்த் தேய்ந்துவிட்டேன்.

ஆம்பளை துணை இல்லததால் எத்தனை கஸ்டங்கள். நான் மனம் திறந்து பேச ஆரம்பித்தால், எத்தனை ஆம்பிளைகளின் முகத்திரை கிழியும்? ஏன் இந்த ஆம்பளைகள் பொம்பளை மோகத்தில் அலைகிறார்கள்? எத்தனை முகச் சடவுகள்? எத்தனை ஆவலாதிகள்? ஆம்பளைகளின் வேட்டையில் இருந்து தப்பிக்க எத்தனை பொய்களைக் கூறி இருக்கிறேன். எப்படி எப்படி எல்லாம் ஆசை வார்த்தைகள் கூறிப் பெண்ணைப் பணிய வைக்க பார்க்கிறார்கள். அதற்கும் அவள் பணியவில்லை என்றால் எத்தனை உருட்டல்கள், மிரட்டல்கள் எப்படியோ அந்தக் கடவுள் புண்ணியத்தில் வேத்தாள் விரல் என் மேனியின் மேல் படாமல் இதுவரை காலங்கழித்தாயிற்று. இனிமேல் என்ன... அரைக் கிழவிமாகிவிட்டேன்.

திடீரென்று பஸ் தாறுமாறாகப் போவது போல் இருந்தது. பஸ்ஸில் இருந்தவர்கள் ‘ஐயோ... அம்மா’ என்று கூச்சல் போட்டார்கள். என்ன ஏது...? என்று விசாரிப்பதற்குள் பஸ் ஒரு பள்ளத்தில் போய் நின்றது. பஸ் நின்றதும் பஸ்ஸில் இருந்தவர்கள் முண்டியடித்துக் கொண்டு பஸ்ஸிலிருந்து கீழே இறங்கினார்கள். கீழே இறயங்கியவர்கள், ஒண்ணும் பயப்பட வேண்டாம், பஸ், எப்படியோ ரோட்டை விட்டுத் தடம் புரண்டு, ஒரு பள்ளத்தில் இறங்கிவிட்டது என்றாலும் டிரைவர் சாதூர்யமாகப் பிரேக்போட்டு, பஸ்ஸை நிறுத்திவிட்டார். ஆட்கள் யாருக்கும் சேதம் இல்லை, டிரைவர் உட்பட என்று ஆறுதலாகக் கூறினார்கள்.

ஒரு விபத்தை அனுபவித்ததில் நானும் குலுங்கிப் போனேன். எல்லோரும் பஸ்ஸை விட்டு இறங்கினோம். இனி, இந்த பஸ்ஸை, இப்போதைக்கு எடுக்க முடியாது, டிப்போவில் இருந்து, வண்டி வந்துதான் பார்க்கணும். வண்டியில் வந்தவர்களை, இனி வரும் வண்டியில், கொஞ்சங் கொஞ்சமாக ஏற்றி விடுகிறேன் என்றார் கண்டக்டர்.

எல்லாரும் கும்பலாக, ரோட்டிற்குச் சென்றார்கள். நானும் சென்றேன். நேரம் ஆக, ஆக எனக்குத் ‘திக் திக் கென்று அடித்தது. ஊருக்குப் போக கடைசி பஸ் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற பயத்தில் சிறிது நேரத்தில் மெயின் ரோட்டில் ஒரு பஸ் வந்தது. வந்த பஸ் நிறைய கூட்டம் இருந்தது என்றாலும், ரோட்டில் நின்ற ஆண்கள் அனைவரும் அந்த பஸ்ஸில் ஏறத் தயாரானார்கள். பஸ் நின்றதும். ஆண்கள்தான் அடித்துப் பிடித்துக்கொண்டு பஸ்ஸில் ஏறினார்கள். ‘இருட்டு நேரத்தில் காட்டு வெளியில் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் எல்லாம் பயந்தபடி நிற்கிறார்களே...! என்ற கவலை எதுவும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை...!

கும்பலாக நின்றவர்களில் பத்துப் பதினைந்து பேருக்கு மேல் ஏற முடியாது என்று வந்த பஸ்ஸின் கண்டக்டர் சொல்லிவிட்டார். சிறிது நேரம் காத்திருந்த பிறகு, இன்னும் ஒரு பஸ் வந்தது. அதிலும் ஆண்களே... அடித்துப் பிடித்துக்கொண்டு ஏறினார்கள்... நேரம் செல்லச் செல்ல எனக்குப் பயமாக இருந்தது. வெகு நேரம் கழித்து மற்றொரு பஸ் வந்தது. பெண்கள் வேண்டிக்கொண்டதற்கு இணங்க, கண்டக்டர், அந்த பஸ்ஸில் எங்களை ஏற்றி அனுப்பினார்.

நின்று கொண்டுதான் பயணம் செய்ய வேண்டியதாயிற்று. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்ததும் ஒரு பெரியவரிடம் மணி என்ன என்று கேட்டேன். மணி பத்து என்று கூறினார். அவசர அவசரமாக பஸ்ஸை விட்டு இறங்கி, எங்கள் ஊருக்குப் போகிற பஸ் நிற்கும் இடத்திற்குச் சென்றேன். அங்கு நின்றவர்களிடம் மலையடிக்குறிச்சிக்குப் போகிற கடைசி பஸ் போய்விட்டதா என்று கேட்டேன். அவர்களில் பேண்டு, சட்டை போட்ட ஒரு பெரியவர், அந்த பஸ் டயம் ஒன்பதரைக்குத்தானே அந்த பஸ் போய் அரை மணி நேரமாகிவிட்டது என்று கூறினார்.

“மகள் வீட்டிலேயே இருந்துவிட்டு விடியற்காலம் வந்திருக்கலாமே, இப்ப என்ன செய்ய..? எங்கே... போக, இந்த பஸ் ஸ்டாண்டில் விடிய விடிய, குத்தவச்சிக்கிட்டு இருக்க முடியுமா...? என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, பேண்ட் சட்டை போட்ட பெரியவர், அதோ... அந்த பஸ், சேரன்மகாதேவி வழியாகத் தென்காசி போகுது. நீங்க அந்த பஸ்ஸில் சேரன்மகாதேவி போயிருங்க, அங்க இருந்து போக்கு வண்டியோ, வேனோ கிடைத்தால் ஊருக்குப் போயிரலாம் என்று யோசனை கூறினார்.

“அந்தப் பெரியவர் கூறுவதும் சரி என்றுபட்டது மனதிற்கு. சேரன்மகாதேவி போய்விட்டால் அங்கிருந்து ஊர்பக்கம் தான். ரொம்பப் பயம் தோத்தாது...” என்று நினைத்து புறப்படத் தயாராக நின்ற அந்த பஸ்ஸில் ஏறினேன். ராத்திரி வெகு நேரத்திற்குப் பிறகு புறப்படும் பஸ் என்பதால் அந்த பஸ்ஸில் கூட்டம் அதிகம் இல்லை, என்னையும் சேர்த்து மொத்தம் நான்கு பெண்கள்தான் இருந்தார்கள். ஆண்களும் பத்துப் பதினைந்துபேர்தான் இருந்தார்கள்.

மனது ‘திக், திக்’ கென்று அடித்துக்கொண்டுதான் இருந்தது.. இனி என்ன செய்ய...? எப்படியாவது ஊர்போய்ச் சேர்ந்திருவோம் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.

சேரன்மகாதேவி பஸ்ஸ்டாண்டு வந்ததும், இறங்குங்கும்மா. ஊர் வந்துட்டு என்றார் கண்டக்டர். சேரன்மகாதேவி நான் அடிக்கடி வருகிற ஊர்தான். இங்கிருந்து நாலைந்து மைல்தான், எங்கள் ஊருக்கு பஸ்ஸை விட்டு இறங்கினேன். மெர்குரி விளக்குகளின் வெளிச்சம் வெள்ளியை உருக்கி ஊத்தியதைப் போன்றிருந்தது. கடைகளில் பெரும் பகுதியை அடைத்து விட்டார்கள். ஆளே இல்லாமல் பஸ் ஸ்டாண்டு வெறிச்சோடிக் கிடந்தது. தூரத்தில் ஒரு போலிஸ்காரர் யாரோடோ பேசிக் கொண்டிருந்தார். தன்னந்தனியா அந்த இடத்தில் நிற்பதற்குத் தயக்கமாக இருந்தது. இனி என்ன செய்ய...? தன்னந்தனியாக, தனி வழியாக நடந்து போகவும் முடியாது. இந்த பஸ் ஸ்டாண்டில் தங்கவும் முடியாது. வேறு துணைக்குத் தெரிந்த ஆளும் இல்லையே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது டி.வி.எஸ் பிப்டியில் ஒரு இளம் வயது பையன், வந்து என் முன்னால் வண்டியை நிப்பாட்டினான். எக்கா.. உங்களுக்கு மலையடிக்குறிச்சிதான...! இந்த நேரத்துல இங்க எப்படி வந்தீங்க...? வெளியூருக்குப் போயிட்டு வாரீகளா...? எனக்கு பக்கத்தூருதான், மேட்டூருதான் போறேன், வேணா, வாங்க வண்டியில பின்னால ஏறிக்கங்க. நான் உங்களைக் கொண்டு போய் ஊரில் விட்ருதேன். என்னைத் தெரியலையா. நான், பால் வியாபாரி முருகன். எனக்கு உங்களை நல்லாத் தெரியுமே என்று மூச்சுவிடாமல் பேசினான்.

அவன் என்னைப் பதில் பேசவிடாமல், அவனே, தட, தட என்று பேசுகிறான். நம்மைத் தெரியும் என்று சொல்கிறான். நம் ஊர்ப் பெயரையும் சரியாகச் சொல்கிறான். சிறு பையனாக இருக்கிறான். நல்லா இருந்தா அவனுக்குப் பதினெட்டு, இருபது வயதுதான் இருக்கும். என் புள்ளை வயசுதான் அவனுக்கு இருக்கும். இங்கே, இடம் தெரியாத இடத்தில் நின்று கொண்டிருப்பதைவிட, முகம் தெரிந்த இந்த பையனுடன் ஊர் போய்ச் சேர்ந்திரலாம் என்று நினைத்தேன்.

‘தம்பி இருட்டு வேளை பையப் போகணும்’ என்று கூறிக்கொண்டே அந்தப் பையனின் டி.வி.எஸ்.பிப்டி வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டேன். வண்டி புறப்பட்டது. ஊரைத் தாண்டிப் போனதும், நான்தான் அவனிடம் தம்பி உன் பெயர் என்ன? என்று பயம் தோன்றாமல் இருக்க கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தேன். அந்தப் பையனும் நான் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் கூறிக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான். இருட்டு ‘கொய்’ என்றிருந்தது. இருட்டுப்பூச்சிகள் ‘உய்’ யென்று சத்தமிட்டுக் கொண்டிருந்தன.

ஊருக்குப் போகிற தார் ரோட்டை விட்டு வண்டியை ஒரு ஓத்தையடிப் பாதையோரமாகத் திருப்பினான். ஏன் தம்பி இந்தப் பாதை வழியா போற. நேரே தார் ரோடு வழியாப் போகவேண்டியதுதானே! என்று கேட்டேன்.

‘யக்கா அது சுத்துப்பாதை, நான் குறுக்குப்பாதை வழியாப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு ஒத்தயடிப்பாதை வழியாகவே வண்டியயை ஓட்டினான். அப்பதான் எனக்குச் சந்தேகம் வந்தது.

தம்பி, நேரே தார் ரோடு வழியாப் போ.. இல்லைன்னா நான் இறங்கிக்கிடுதேன் என்றேன். எங்கே நான் வண்டியிலிருந்து குதித்துவிடுவேனோ.. என்ற பயத்தில், வண்டியின் வேகத்தைக் குறைத்து வண்டியை நிப்பாட்டினான்.

வண்டி நின்றதும் நான் வண்டியில் இருந்து கீழே இறங்கினேன். ‘ஏன் தம்பி வண்டியை நிறுத்திட்டே’ என்று கேட்டேன் குழப்பத்துடன். ‘வண்டியில ஏதோ கோளாறு, அதான் வண்டிய நிறுத்திட்டேன். இருங்க இப்ப, கொஞ்ச நேரத்துல சரி பண்ணிருவேன் என்றவன் வண்டியை ஸ்டாண்டு போட்டுவிட்டு, என்னருகில் வந்து எதிர்பாராத விதமாக என் சேலையைப் பிடித்தான்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பச்சப்புள்ளை மாதிரி இருந்தான், முகத்தில் பால் வடிவது போல் இருந்தது. தனிமையில், இருட்டில் தாய் வயதுள்ள ஒரு பெண்ணிடமே இப்படி நடந்துகொள்கிறானே! என்று நினைத்த என்னால் நடக்க இருக்கிற விபரீதத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.

நான், “சீ... பாவி .... நீ .... மனுசனா.... விடுடா என் சேலையை” என்று இழுத்தேன். சாண்பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை என்று சொன்னது சரியாகத்தான் இருந்தது. அவன் கைகளால் சேலையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு இழுத்ததும், என் சேலை குலைந்துவிட்டது. சேலையின் மறுநுனியைப் பிடித்துக்கொண்டு, பாவிப்பயலே, சண்டாளா... நீ நல்லா இருப்பியா.. நம்பி வந்தவளை இப்படிக் கழுத்தறுக்கலாமா?” என்ற கூறி கத்தினேன். அவன் ‘வெட்’ டென்று இழுத்ததில், சேலை நுனியையும் விட்டுவிட்டேன். சேலையை உறுவியவன் அடுத்து என் மேல் பாய ஆயத்தமானான்.

“இனியும் இந்த இடத்தில் நிற்கக்கூடாது” என்று நினைத்தவள், திக்கு திசை தெரியாமல் ஓடத் துவங்கினேன். அவன் என் பின்னாலேயே ஓடிவரும் காலடிச்சத்தம் கேட்டது. முள்ளுமுடை என்று பார்க்காமல் நான் ஓடிப்போய் ஒரு மரத்தடியில் நின்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத் திரும்பிப் பார்த்தேன். அவனைக் காணவில்லை. மனித காலடிச் சத்தமும் கேட்கவில்லை. இப்போது நேரம் நடூச் சாமம் இருக்கும் என்று உத்தேசமாக நினைத்துக் கொண்டேன். நெஞ்சு ‘திக் திக்’ என்று அடித்துக்கொண்டுதான் இருந்தது.

உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டியது. கால்கள் ரெண்டும் நடுங்க ஆரம்பித்தது. தாகமாக இருந்தது, நாக்கு வரண்டுவிட்டது. காலில் குத்திய முட்கள் இப்போது தான் வலிக்கத் தொடங்கியது. நான் பதுங்கி இருந்தது ஒரு பெரிய பூவரச மரம் என்பது மரத்தின் வாசனையிலிருந்து அறிய முடிந்தது.

மரத்தடிக்கு வந்து பத்துப் பதினைந்து நிமிடமாகிவிட்டது. அவனைக் காணவில்லை. சண்டாளப் பாவியைக் காணவில்லை. எப்படியோ அந்த காளியாத்தா புண்ணியத்தில் இன்று மானத்தைக் காப்பாற்றினோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான், உடுத்தி இருந்த உள் பாவாடை, ஓடி வந்த வேகத்தில் கிழிந்திருப்பதும், போட்டிருந்து சட்டையிலும் முள், இழுத்து நாலைந்து இடத்தில் கிழிந்திருப்பதும், தெரியவந்தது. “அட.. கடவுளே... முக்கால் நிர்வாண கோலத்தில் நிற்கிறோமே, இந்தக் கோலத்துடன் எப்படி வெளியே வர” என்று நினைத்த போது என் கண்களில் கண்ணீர் முட்டியது.

அந்த மரத்தடியிலேயே அப்படியே குத்துக்காலிட்டு, கிழிந்த பாவாடையுடனும், கிழிந்த சட்டையுடனும் உக்கார்ந்து விட்டேன். எவ்வளவு நேரம்தான் இப்படியே இருந்துவிட முடியும். விடிவதற்குள் ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும். விடிய, விடிய, இப்படியே உக்கார்ந்து இருந்தாலும், விடிந்தபிறகு, இந்தக் கோலத்தில் வெளியே இறங்கி நடக்கவும் முடியாது. என்னடா.. செய்ய... என்று நினைத்துக் கொண்டு மெல்ல எழுந்து சுத்தும் முத்தும் பார்த்தேன். வானத்தில் இப்போதுதான் நிலவு உதித்திருந்தது. தேய்பிறைக் காலமாக இருக்க வேண்டும் அது.

நிலவின் மங்கிய வெளிச்சத்தில் சற்று தொலைவில் ஒரு ஓத்தையடிப் பாதை போல தெரிந்தது. விதிப்படி நடக்கட்டும் என்று நினைத்து அந்தப் பாதையை நோக்கி நடக்க அடியெடுத்து வைத்த போதுதான், கால் பாதங்களில் முட்கள் குத்திய வேதனை தெரிய வந்தது.

“காளியாத்த.. நீதான் காப்பாத்த வேண்டும்” என்று நினைத்துக் கொண்டு பற்களைக் கடித்துக் கொண்டு மெல்ல, மெல்ல முன் பாதத்தை மட்டும் ஊன்றி அடி மேல் அடியெடுத்து வைத்துப் பாதையை அடைந்தேன்.

பாதையில் சிறிது தூரம் சென்றதும், ஒரு பனைமரத்தைப் பார்த்தேன். முதலில் பனைமரத்தடியில் யாரோ ஒரு பெண்தான் நிற்கிறாள் என்று நினைத்தேன். அது நம்ம காளியாத்தாகத்தாவாக.. இருக்கக்கூடாதா? என்று மனம் ஏங்கியது. பனை மரத்திற்குள் இருந்து ஒரு பெண்ணின் குரல் பேசியது, “மகளே.. பயப்படாதே.. வா.. உன் மானம் காக்கத்தான் நான் சேலை உடுத்தி இருக்கிறேன். என் சேலையை அவிழ்த்து எடுத்துக்கொள். உன் மானத்தைக் காத்துக்கொள்” என்றது.

நான் அருகில் சென்று பார்த்தேன். குரல் கொடுத்த பெண்ணைக் காணவில்லை. ஒத்தைப்பனை மரம்தான், ஒரு முழுச் சேலையை உடுத்தியபடி ஓங்கி வளர்ந்து நின்றது. ஒருமுறை அந்த பனை மரத்தின் முன்னால், சாஸ்டாங்கமாக விழுந்து கும்பிட்டுவிட்டு, பனை மரத்தில் கட்டப்பட்டிருந்த பட்டுச் சேலையை அவிழ்த்து எடுத்து நான் உடுத்திக்கொண்டேன்.

பாஞ்சாலியின் சேலையை பாவி துச்சாதனார் உருவியபோது கிருஷ்ணர்.. பாஞ்சாலியின் மானத்தைக் காக்க சேலையை வளர்த்து போல், ஒரு பாவி, என் சேலையை உரிந்து என் மானத்தைக் கெடுக்க முயன்றான். இந்த காளியாத்தாள், எனக்குச் சேலை கொடுத்து என் மானத்தைக் காத்துவிட்டாள் என்று நினைத்துக்கொண்டு தூரத்தில் தெரிந்து தார்ரோட்டைப் பார்த்து நடக்க ஆரம்பித்தேன்.

பவுண்டுத் தொழு - மாடுகளின் சிறைச்சாலை



  மனிதர்கள் தப்பு செய்தால் அவர்களைச் சிறையில் அடைத்து வைப்பதைப் போல் மாடுகள் தவறு செய்தால் அவைகளையும் அடைத்து வைக்கச்சிறைகள் இருந்தது உங்களுக்குத் தெரியுமா?” என்று ஒரு பெரியவர் என்னிடம் கேட்டனர்.
பெரியவர் சொன்ன ‘சேதி’ எனக்கு வியப்பாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருந்தது. எனவே, “தெரியாது சொல்லுங்கள் தாத்தா” என்றேன்.

பெரியவர் பேச ஆரம்பித்தார். அந்தக் காலத்தில் வீடு தவறாமல் சம்சாரிகளிடம் காளை மாடுகள் இருக்கும், அது தவிர பாலுக்காக எருமை மாட்டையோ, பசுமாட்டையோ வளர்ப்பார்கள். கிராமத்தில் சம்சாரி விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்ந்தால் அவன் பாடு தவிடு தாங்கிப் போகும் (மோசமாகி விடும்) எனவே விவசாயத்தோடு உபதொழிலாகக் கால் நடை வளர்ப்பையும் சேர்த்துச் செய்வார்கள். வீடுகளுடன் கன்று, காளைகளைக் கட்டிப் பேணி வளர்க்க என்று மாட்டுத் தொழுவத்தையும் சேர்த்துக் கட்டிக் கொள்வார்கள்.

ஒரு மனிதன் அடுத்தவன் தோட்டத்தில் புகுந்து, தேங்காயையோ, மாங்காயையோ பறித்தால், அவனைத் தோட்டத்தின் காவலாளி பிடித்து, தோட்டத்தின் உரிமையாளரிடம் ஒப்படைப்பார். தோட்டத்தின் உரிமையாளர் காவல்துறையினரிடம் ஒப்படைப்பார். காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் திருடனை நீதிமன்றத்தில் ஒப்படைப்பர். நீதிபதி தீர விசாரித்து திருட்டு ‘ருசுப்பட்டால்’ (நிரூபிக்கப்பட்டால்) திருடன் இத்தனை மாதம் சிறையில் இருக்க வேண்டும் என்று தண்டனை கொடுப்பார்.

இதேபோல் சில மாடுகள் அடுத்தவன் நஞ்சையில் அல்லது புஞ்செயில் மேய்ந்து மகசூலை அழித்து விட்டால் அந்த மாட்டைப் பிடித்து வந்து வயலின் உரிமையாளர் பவுண்டுத் தொழுவில் அடைத்து விடுவார். “அது என்ன பவுண்டுத் தொழு?” என்று நீங்கள் கேட்பது எனக்கும் புரிகிறது. மாடுகளை (பிற சம்சாரிகளின் பயிர்களில் மேய்ந்து அழிமதி செய்த மாடுகளை) பிடித்து வந்து ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு நேரே, கிராம முனிசிப் வீட்டிற்குப் போவார்கள். அவருக்கு வீடும் அதுதான் ஆபீசும் அதுதான். வீட்டின் ஒரு பகுதியையே ஆபீசாக வைத்திருப்பார். இன்னேரம் தான் ஆபீசில் இருக்க வேண்டும் என்ற கணக்கு வழக்கெல்லாம் அந்தக் காலத்து கிராம முனிசிப்களுக்கு கிடையாது. எப்போது வேண்டுமானாலும், பொது மக்கள் போய் கிராம முனிசிப்யைச் சந்தித்துப் பேசலாம்.

கிராமுனிசிப் அவசர வேலையாக எங்காவது வெளியூர் போனால் அவருக்குப் பதில் உள்ளூரிலேயே தலையாரி, இருப்பார். அவரைச் சந்தித்து விபரம் கூறலாம். போனவர் “இன்னமாதிரி என் மகசூலை, இன்னாருக்குச் சொந்தமான எருமை மாடு மேய்ந்து விட்டது” என்று பிராது (புகார்) சொல்வார். உடனே கிராம முனிசிப் பவுண்டுத் தொழுவின் சாவியை தலையாரியிடம் எடுத்துக் கொடுத்து அந்த எருமை மாட்டைப் பவுண்டில் அடைத்து விடும் என்பார்.

தலையாரி பவுண்டுத் தொழுவின் சாவியை வாங்கிக் கொண்டு, பவுண்டுத் தொழுவின் பக்கம் செல்வார். மகசூலை மேய்ந்த மாட்டைப் பத்திக் கொண்டு புஞ்சைக்காரர் சென்று பவுண்டுத் தொழுவிற்குள் பத்தி விட்டு வெளியே வந்து விடுவார். உடனே தலையாரி பவுண்டுத் தொழுவை பூட்டிச் சாவியை கிராம முன்சீப்பிடம் ஒப்படைத்து விடுவார். இதுதான் தப்பு செய்த மாடுகளைச் சிறையில் அடைக்கும் நடைமுறை. இந்தமாதிரி அடுத்தவர் மகசூலை மேய்ந்து விடும் மாடுகளை அடைக்க அந்தக் காலத்தில் ஊர்தோறும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு கட்டிடத்தைக் கட்டி இருந்தார்கள்.

இந்தக் கட்டிடம் சதுர வடிவமானதாக இருக்கும். சுமார் பத்தடி உயரமான சுற்றுச் சுவர் கொண்டதாக இருக்கும். இச்சுவர் சுண்ணாம்புக் காரை கொண்டும், கருங்கல் கொண்டும் கட்டப்பட்டிருக்கும் சதுர வடிவான கோட்டைச் சுவர் போன்ற இந்தக் கட்டிடத்தில் வடக்கு நோக்கி ஒருவாசல் மட்டும் இருக்கும். வாசலையும் இரும்புக் கம்பி போட்ட கதவால் மூடி இருப்பார்கள். இதுதான் பவுண்டுத் தொழு என்பது.

இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் சிறிய ஓட்டுச் சாய்ப்பு இருக்கும். அதில் மேலோரமாக நீண்ட கம்புகளை வைத்துக் கட்டி இருப்பார்கள். சுற்றுச் சுவருக்கும், கம்பு காதுக்கும் இடையில் இப்போது நீள வசத்தில் ஒரு பள்ளம் கிடைக்கும். இந்தப் பள்ளப்பகுதியைத்தான் ‘அழி’ என்று சொல்கிறார்கள். இந்த நீள்வச பள்ளத்தில் வைக்கோலைப் போட்டு வைத்திருப்பார்கள். அதே தொழுவின் மற்றோர் பகுதியில்ஒருகல் தொட்டி கிடக்கும். அதைத் தண்ணீரால் நிரப்பி இருப்பார்கள். பவுண்டுத் தொழுவில் அடைக்கப்பட்டாலும் மாடு பட்டினி கிடக்க வேண்டாம். அங்கு கிடக்கும் வைக்கோலைத் தின்று கொள்ளலாம். பவுண்டுத் தொழுவிற்குள் இருக்கும் கல் தொட்டியில் தண்ணீர் குடித்துக் கொள்ளலாம்.

மாடுகளுக்குத் தண்டனை கொடுத்து அதைச் சிறையில் அடைத்தாலும் அதற்குத் தீவனமும் கொடுத்து அம்மாட்டின் பசியைப் போக்க வேண்டும், தாகத்திற்கு தண்ணீர் குடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மழைக்கும், வெயிலுக்கும் அம்மாடுகள் ஒதுங்க ஒரு சாவடி (நிழல் தரும் கட்டிடம்) வேண்டும் என்று சிந்தித்து மாட்டின் ஜெயிலை வடிவமைத்திருந்த நம் முன்னோர்களைப் பாராட்ட வேண்டும்.

தலையாரி பவுண்டுத் தொழுவில் மாட்டை அடைத்த செய்தி உடனே ஊருக்குள் பரவி விடும். எனவே, மாட்டின் உரிமையாளர் செய்தி தெரிந்து தலையாரியைத் தேடிக்கொண்டு கிராம முனிசிப் அலுவலகத்திற்கு வந்து விடும். கிராம முனிசிப் தலையாரியை அனுப்பி ஊர் நாட்டாமையைக் கூட்டிக் கொண்டு வரச்சொல்வார். நாட்டாமை வந்ததும், கிராம முனிசிப், நாட்டாமையுடன் சென்று மாடு மேய்ந்து அழிமதி செய்திருக்கிற இடத்தைப் பார்வையிட்டு அழிமதியைப் பொருத்து பாதிக்கப்பட்ட சம்சாரிக்கு இவ்வளவு பணத்தை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று பேசி முடிவு செய்து மாட்டின் உரிமையாளரிடம் சொல்வார்கள்.

மாட்டின் உரிமையாளர், அத்தொகையை நாட்டாமையிடம் கொடுக்க, நாட்டாமை பாதிக்கப்பட்ட சம்சாரியை அழைத்து அந்த நஷ்ட ஈட்டுத்தொகையைக் கொடுத்து விடுவார். பின்னர் மாட்டைப் பவுண்டில் அடைத்ததால் ஏற்படும் பராமரிப்புச் செலவுக்கு என்று ஒரு தொகையை அரசாங்கத்திற்கு வாங்கிக் கொள்வார்கள். இப்படி பராமரிப்புச் செலவுக்கு என்று வாங்கும் அபராதத் தொகைக்குத் தனியாக ரசீது போட்டுக் கொடுத்து விடுவார், கிராம முனிசிப்.

அந்தக் காலத்தில், ஒரு நாளைக்கு ஒரு மாட்டிற்கு இவ்வளவு பராமரிப்பு செலவு என்று ஒரு கணக்கு இருந்தது. அந்தக்கணக்குப்படி பராமரிப்புச் செலவை மாட்டின் சொந்தக்காரரிடம் வாங்கி விடுவார். மாட்டை ஒருமுறை பவுண்டில் அடைத்தால், ஒருநாளைக்கு உரிய பராமரிப்புத் தொகையைக் கட்டிவிடவேண்டும், மாட்டின் உரிமையாளர் ரெண்டு, மூணு நாட்களாகத் தன் மாட்டை, மீட்க வரவில்லை என்றால் அதற்கு ஏற்ப பராமரிப்பு செலவைக் கூட்டிப் போட்டு அதை மாட்டின் உரிமையாளரிடம் வாங்கி விடுவார் கிராம முனிசீப்.

பவுண்டுத் தொழுவில் அடைபட்ட மாடுகள் போடும் சாணி சவதிகளை அள்ள என்று தனியே ஒரு சிப்பந்தியையும் (ஊழியரையும்) ஊரில் இருந்து நியமித்து இருப்பார்கள். காம்பவுண்டு போன்ற இந்த அமைப்பிற்கு ‘பவுண்டுத் தொழு’ என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியவில்லை! என்று சொல்லிவிட்டு ஒரு குறுஞ்சிரிப்பாணியைச் சிரித்தார். ஏன் சிரிக்கிறீர்கள் இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டேன்.

தாத்தா, தன் நரைத்த மீசையை ஒதுக்கிக் கொண்டு, ஒரு சம்பவத்தை நினைத்தேன்; சிரித்தேன் என்றார். “அது என்ன சம்பவம் சொல்லுங்கள்” என்று நான் ஆர்வத்துடன் கேட்டேன். தாத்தா அந்த சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார். ஒருநாள் நம்மூருக்கு ஒரு களைக் கூத்தாடிக் கூட்டம் வந்திருந்தது. அவர்கள் ஒரு இடத்தில் கூடாரம் போட்டுக் கொண்டு நம்ம ஊரிலும், பிறகு சுற்றுப்பட்டிகளுக்கும் சென்று களைக்கூத்து நடத்தி அதில் வசூலாகும் காசு, பணத்தைக் கொண்டு கஞ்சி காச்சிக் குடித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் நாடோடி மக்கள். ஒரு மாட்டு வண்டியில் தன் தட்டுமுட்டுச் சாமான்களை அள்ளிப் போட்டுக் கொண்டு ஊர், ஊராய் போய் முகாமிட்டு, வித்தை காட்டிப் பிழைக்கிறதுதான் அவர்கள் தொழில். அதுஒரு ஒத்தக்காளை வண்டி அந்த வண்டிதான் அவர்களுக்கு வீடு. வண்டிக்கு கீழே, ஒரு கூண்டு தொங்கும். அதற்குள், ‘காடை, கருவாலி’ என்று ஏதாவது சில பறவைகள் கிடக்கும். வண்டிக்குள் (கூண்டு வண்டிக்குள்) தொங்கும் கூண்டுக்குள் கிளி ஒன்று கிடந்தது. ‘கீக்கீ’ என்று கத்திக் கொண்டே இருக்கும். ஊர் ஊராய்ச் செல்கிற இந்த நாடோடிகள், கோழிகளும், ஆடுகளும் வேறு வளர்ப்பார்கள். மரத்தடியில் வெட்டவெளியில் தான் இவர்களின் சமையல் நடக்கும். சாப்பாடும் அதே மரத்தடியில்தான் நடக்கும்.

இந்த நாடோடிக் கூட்டத்தினரின் காளை ஒரு சம்சாரியின் வெள்ளாமையில் விழுந்து மேய்ந்து விட்டது. வயல்காரனும் தலையாரியிடம் சொல்ல, தலையாரி, பவுண்டுத் தொழுவின் சாவியை எடுத்து வந்து அந்த மாட்டைப் பவுண்டுத் தொழுவிற்குள் அடைத்து விட்டார். (அன்று பார்த்து கிராம முனிசீப் ஊரில் இல்லை. அத்தோடு தலையாரிக்கும் இது களைக் கூத்தாடியின் மாடுதான் என்பது தெரியாது).

தலையாரிக்கு பவுண்டில் அடைத்த பின்தான் அது களைக்கூத்தாடியின் மாடு என்று தெரிந்தது. களைக்கூத்தாடி, ‘ஐயா, சாமி, என் மாட்டைத் திறந்து விடுங்கள்’ என்று கெஞ்சினான். தலையாரி, எனக்கு பவுண்டில் அடைக்க மட்டும்தான் அதிகாரம் உண்டு. கிராம முன்சீப் வந்த பிறகு கட்டவேண்டிய தண்டத்தை (அபராதத்தை) கட்டிவிட்டு வா. அதன்பிறகு தான் பவுண்டில் அடைத்த மாட்டைத் திறந்து விட முடியும்’ என்று சொல்லி விட்டார்.

களைக்கூத்தாடி, அன்று இரவு புறப்பட்டு அடுத்த ஊருக்குப் போக வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தான். அதற்குள், அவன் வண்டி மாட்டைப் பிடித்து பவுண்டில் அடைத்து விட்டார்கள். களைக்கூத்தாடியும், கிராம முன்சீப்பின் வீட்டு வாசலில் ராத்திரி பத்துமணி வரை காத்துக் கிடந்து பார்த்தான். கிராம முனிசீப்பின் மனைவி, ‘ஏய் களைக்கூத்தாடி. இங்கே என் வீட்டு முன்னால் “வயனம் காக்காதே” (உண்ணா நோன்பிருக்காதே) அவர் வர ரெண்டு மூணு நாளாகும். போய் ஊர் மடத்தில் படுத்து உறங்கு என்று சொல்லி விரட்டி விட்டாள்.

மறுநாள் காலையில் தலையாரி விடிந்ததும் விடியாமலும் இருக்கிற நேரத்தில் பவுண்டுத் தொழுவிற்குப் போய் கம்பிக் கதவு வழியாக எட்டிப் பார்த்திருக்கிறார். உள்ளே களைக் கூத்தாடியின் காளை மாட்டைக் காணவில்லை. கதவின் பூட்டும், பூட்டிய படியே தொங்குகிறது. களைக்கூத்தாடி முகாமிட்டிருந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தால் அங்கே அவர்களின் வண்டியும் இல்லை; மாடும் இல்லை, அந்த நாடோடிக் கூட்டமும் இல்லை. பொழுது விடிந்ததும், ஊர் முழுவதும் இந்தச் செய்தி பரவி விட்டது. “பவுண்டுத் தொழுவின் பூட்டை உடைக்காமல், எப்படி மாடு வெளியே வந்தது?” என்பது யாருக்கும் புரியாத புதிராக இருந்தது.

அங்கு கூடி இருந்த கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெரியவர் “அவனோ, களைக்கூத்தாடி பாவப்பட்டவன் அவன் வளக்கிற காளையை எப்படிப் பழக்கி இருப்பான்னு உங்களுக்குத் தெரியுமா? ராத்திரி நடுச்சாமம் போல, ஒரு நீண்ட காளையை (மூங்கில் கம்பை) இந்த பவுண்டுக்குள் நீள வசத்தில் போட்டிருப்பான், உரிமையாளனே கயிற்றில் நடக்கும் போது அவன் வளர்க்கும் காளை கம்பில் நடக்காதா? வித்தை தெரிந்த அந்தக்காளை, அந்த மூங்கில் கம்பில் ஏறி நடந்து சுவர் மேல் ஏறி பின் கீழே குதித்திருக்கும். மாடு வெளியே குதித்தபின் களைக்கூத்தாடி பவுண்டுச் சுவரின் மேல் ஏறி மூங்கில் களையையும் எடுத்துக் கொண்டு ஊரை விட்டுப் போயிருப்பான். இதுதான் நடந்திருக்கும். என்று பக்கத்திலிருந்து பார்த்ததைப் போல நடந்த ‘நடப்பை’ விவரித்தார்.

ஊர்க்காரர்களும் ஆமா... இருக்கும் அப்படித்தான் நடந்திருக்கும் என்று பெரியவர் சொன்னதை ஆமோதித்தார்கள். என்று கதை போல் சொன்னவர், அந்தக் களைக்கூத்தாடி செய்த காரியத்தை நினைத்துத்தான் சிரித்தேன் என்ற பெரியவர், முக்கியமான ஒரு குறுந்தகவலையும் சொன்னார். அந்தத் தகவலையும் இங்கே பதிவு செய்கிறேன். “இந்த மாதிரியான பவுண்டு தொழுக்கள் எல்லாம் நவாப்புகள் நம் நாட்டை ஆண்டகாலத்தில் கட்டப்பட்டவை. நவாப்பின் ஆட்சிபோய், வெள்ளைக்காரர்களின் ஆட்சி நடந்த போது, அவர்கள், இந்த பவுண்டுத் தொழுக்களை எல்லாம் தன் கட்டுப்பாட்டில், வைத்திருந்தார்கள்.

வெள்ளைக்காரர்கள் நாட்டை விட்டுப் போகும்போது, இந்த பவுண்டுத் தொழுக்களை எல்லாம் மத்திய அரசின் பராமரிப்பில் கொடுத்து விட்டுச் சென்று விட்டார்கள். இன்று பயன்படாமல் பராமரிக்கப்படாமல் தமிழகம் எங்கும் உள்ள இந்த மாட்டு ஜெயில்களை மாநில அரசுகள் தன்தேவைக்குப் பயன்படுத்த முடியாது. சட்டத்திருத்தம், கொண்டு வந்து மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு பெற்றால்தான் உண்டு.

செவக்காட்டுச் சேதிகள்



     கிராமத்து மக்களின் பேச்சு, நடை உடை, பாவனைகள் கூட சில நேரம் கவித்துவமாக அமைந்துவிடுகின்றன. ஒரு பெண் வயசுக்கு வந்துவிட்டால், அப்பெண்ணின் தந்தையைப் பார்த்து, மற்றவர்கள் ‘பேரன் பிறந்திருக்கிறானா?’ என்று சந்தோசமாக விசாரிப்பார்கள்.
‘மகள் வயசுக்கு வருவதற்கும், பேரன் பிறப்பதற்கும் என்ன சம்பந்தம்?’ என்ற குழப்பம் வெகுநாட்களாக இருந்தது எனக்கு. ஒருநாள் கிராமத்து பெரியவர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அது பற்றிக் கேட்டேன்.
அந்தப் பெரியவர், ‘ஒரு பெண் வயதிற்கு வந்து விட்டால் என்றால், அவளின் கர்ப்பப்பை கருவுறுவதற்குத் தயாராக இருக்கிறது’ என்று அர்த்தம். எனவே விரைவில் ‘உன் மகளுக்குத் திருமணமாகட்டும், அவள் வயிற்றில் தலைநாளில் ஒரு ஆம்பளப்பிள்ளை பிறக்கட்டும்’ என்ற வாழ்த்துக்களுடன் கூடிய தன் எண்ணத்தை அந்த வாசகம் வெளிப்படுத்துகிறது’ என்றார்.
அதுசரி, ‘ஏன் பேரன் பிறக்கட்டும்’ என்று வாழ்த்துகிறார்கள், ‘பேத்தி பிறக்கட்டும்’ என்று வாழ்த்தவில்லை? என்று அந்தப் பெரியவரிடம் மேலும் கேட்டேன்.
பெரியவர், “தலைப்பிள்ளை ஆம்பளப்பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என்று பொதுவா நாம நினைக்கிற நினைப்பைத்தான் அந்த வாசகம் பிரதிபலிக்கிறது”ன்னு சொன்னார். “அந்த வாசகத்திலும், ஒருவித ஆணாதிக்க மனோபாவம் இருக்கத்தான் செய்கிறது” என்று நினைத்துக் கொண்டேன்.
கிராமத்து மக்கள் எதேச்சையாகப் பேசுகிற பேச்சு மரபில்கூட நுட்பமான சில சேதிகள் இருக்கின்றன. அதேபோல கிராமத்து மக்களில் சில இனக்குழு மக்களுக்கு என்று சில அபூர்வமான நடை, உடை, பாவனைகள் இருக்கின்றன.
புகைப்படக் கருவி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இன்று கிடைத்தால், அப்புகைப்படத்தை வைத்து ஆய்வுகள் செய்து பலப்பல செய்திகளை நாம் அறிந்துகொள்ள முடியும்.
நடுத்தர வயதுடைய ஒரு குடும்பப் பெண்ணின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் என் பார்வைக்கு வந்தது. அந்தப் புகைப்படத்தை வைத்துக்கொண்டு பெரியவர் ஒருவர், “இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் இன்ன ஜாதியைச் சேர்ந்தவர்தான்” என்று அடித்துக் கூறினார் (உறுதியாகச் சொன்னார்).
“எப்படி அந்தப்பெண் இன்ன ஜாதியைச் சேர்ந்தவர்தான் என்று அடித்துக் கூறுகின்றீர்கள்?” என்று பெரியவரிடம் கேட்டேன்.
பெரியவர், ‘புகைப்படத்தில் இருக்கும் பெண் சேலை கட்டி இருக்கும் விதம், அவள் காதில் அணிந்திருக்கும் ‘பாம்படம்’ என்ற நகை, அவள் கால்களில் கிடக்கும் தண்டை, கழுத்தில் கிடக்கும் தாலியின் அமைப்பு எல்லாவற்றையும் பார்த்துக் கணித்துத்தான் கூறுகிறேன்’ என்றார்.
‘எனக்கொன்றும் புரியவில்லையே என்றேன்’ நான். “பழங்கால புகைப்படங்கள் கூட இன்றைய நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வுக்கு ஒரு சான்றாதாரம்தான். புகைப்படத்தில் இருக்கும் பெண் மேலுக்கு சட்டை போடவில்லை. நடுத்தரமான வயதில் மாராப்புச் சேலையுடன் ஒரு புகைப்படத்திற்கு ஒரு பெண் போஸ் கொடுத்திருக்கிறாள் என்றால், அவள் இன்ன ஜாதியைச் சேர்ந்த பெண் அல்ல என்று பட்டியலிட்டு விடலாம். அடுத்து அப்பெண் காதில் போட்டிருக்கும் பாம்படம்.
இந்தப் புகைப்படம் எடுத்து சுமார் இருநூறு வருசமாவது இருக்கவேண்டும். அன்றைய காலகட்டத்தில் ‘பாம்படம்’ என்ற இந்த ஆபரணத்தை இன்ன இன்ன ஜாதிக்காரர்கள் அணிந்தார்கள்’ என்று பட்டியலிட்டு விடலாம்.
எல்லாவற்றையும் விட அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருக்கும் தாலியைப் பார்க்க வேண்டும். ஒரு பெண் கழுத்தில் அணிந்திருக்கும் தாலியை வைத்து அந்தப் பெண் எந்த மதத்தைச் சேர்ந்தவள், என்ன ஜாதியைச் சேர்ந்தவள், அந்த ஜாதியிலும் எந்தப் பிரிவைச் சேர்ந்தவள் என்று துல்லியமாகக் கூறிவிடலாம்.
ஒவ்வொரு ஜாதிக்கென்று ஒவ்வொரு விதமான ‘தாலி’ இருக்கிறது. அதில் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் என்று ஒவ்வொருவிதமான தாலி அடையாளம் இருக்கிறது. தமிழ்ப் பெண்களின் தாலியைப் பற்றிப் பேசினால் அதுவே பெரியதொரு ஆராய்ச்சியாகப் போய்விடும்’ என்று விளக்கம் கூறினார்.
‘புகைப்படத்தில் இருக்கும் அந்தப்பெண் ஏன் மேலுக்குச் சட்டை அணிந்து கொள்ளவில்லை?’ என்று பெரியவரிடம் கேட்டேன்.
பெரியவர் “இன்றைக்கும் கிராமங்களில் மாராப்போடு வீட்டிற்குள்ளும், வீதியிலும் வலம் வரும் பெண்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் தான் உடம்பில் அணிந்திருக்கும் சட்டையைக் கழற்றிவிடுவார்கள். அதன் பிறகு மாராப்புச் சேலையுடன்தான் காட்சியளிப்பார்கள்.
சின்னப் பிள்ளைகளுக்குப் பாவாடை சட்டை போட்டு அழகு பார்க்கிறார்கள். அதே பெண் குழந்தையின் உடம்பில் பருவ மாற்றங்கள் வந்த பிறகு அக்குமரிப் பெண்ணுக்குப் பாவாடை சட்டையுடன் தாவணியும், சில உள்ளாடைகளும் அணிந்துகொள்ளச் சொல்கிறார்கள்.
அதே பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்போது சேலை, சட்டை அணிந்துகொள் என்கிறார்கள். சில குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்கள் – ஒரு காலகட்டத்தில் தன் உள்ளாடையையும் சட்டையையும் கழற்றி எறிந்துவிடுகிறார்கள்.
அப்படித் தன் சட்டையைத் துறக்கும் அந்தப் பெண்ணுக்குக் கணவர் இருப்பார். தலைக்கு மேல் வளர்ந்த ஆம்பளப் பிள்ளைகள், பொம்பளைப் பிள்ளைகள் இருப்பார்கள். ஆனால், அவர்கள் யாரும் அப்பெண் தன் சட்டையைத் துறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டார்கள். ஏனென்றால், அது அவர்களின் கலாச்சாரம் சார்ந்த விசயம் என்று விளக்கம் சொன்னார்.
நான் பெரியவரிடம், “எப்போதிருந்து அந்தப் பெண் தன் சட்டையைத் துறக்கிறார்?” என்று கேட்டேன்.
நண்பர், “குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த பெண் தன் தலைமகனின் மகள் (பேத்தி) வயசுக்கு வந்த நாளில் இருந்துதான் அணிந்திருக்கும் சட்டையைக் கழற்றி விடுகிறாள். பேத்தி வயதிற்கு வந்துவிட்டாள் என்றால், அவளின் கர்ப்பப்பை ஒரு கருவைத் தாங்கும் தகுதியை அடைந்துவிட்டது’ என்பது பொருள். எனவே பாட்டியான அந்தப் பெண் தன் சட்டையைக் கழற்றி ஊர் உலகத்திற்குத் தன் மூத்த மகன் வயிற்றில் பிறந்த பிள்ளை வயசுக்கு வந்துவிட்டாள் என்பதைக் குறிப்பாக அறிவிக்கிறாள்.

சட்டையைத் துறப்பது என்ற குறியீடு, ‘காமத்தைக் கடத்தல்’ என்பதையும் குறிக்கிறது. கணவன், மனைவி என்று தாத்தாவும், பாட்டியுமாக அவர்கள் வாழ்ந்தாலும், மனைவி தன் சட்டையைத் துறந்த பிறகு அப்பெண், தன் கணவருடன் தாம்பத்திய உறவை வைத்துக்கொள்வதில்லை. ‘சட்டை துறப்பு’ என்ற செயல், இதுவரை கணவன் – மனைவியாகச் சேர்ந்து வாழ்ந்து அவர்கள் பெற்ற இல்லற சுகத்திற்கு அதாவது காமத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது. இதற்கு அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ, ஊர்க்காரர்களோ எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. இதுபோன்ற பண்பாட்டுக் கூறுகள் காலங்காலமாகக் கிராமப்புறங்களில் சில இனக்குழு மக்களிடம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
நடுத்தர வயதாக இருந்தாலும், உடல் கட்டுடன் அத்தகைய பெண் இருந்தாலும், அவர்கள் குறிப்பிட்ட அந்த நாளிலிருந்து தானே முன்வந்து தன் சட்டையைத் துறந்துவிடுகிறாள். அல்லது சமூகம் சார்ந்த கலாச்சார அம்சம் அப்பெண்ணைச் சட்டையைத் துறக்கும்படி நிர்ப்பந்திக்கிறது.
இப்படிச் சில கிராமத்து மக்கள், ‘காமத்தைத் துறப்பது’ என்பதையும் ஒரு சடங்காக, வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலோட்டமாக இத்தகைய சேதிகளைப் பார்க்காமல் கூர்ந்து கவனித்து ஆராய்ந்தால் நம் பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த பல உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியும்” என்றார் பெரியவர்.
 Book Link: http://www.tamilbooksonline.in/searchbooks1.php?code=TA020901&&bookname=SEVAKATTU%20SETHIGAL

சேர்வைக்காரன்


திருநெல்வேலி மாவட்டத்திலும் ஒரு வீராணம் இருக்கிறது. ‘வீராணத்தில் உங்கள் வீடு எந்தப் பகுதியில் இருக்கிறது?’ என்று ஒரு பெரியவரைக் கேட்டேன். பெரியவர், ‘எங்கள் வீடு ‘சேரு‘க்குப் பக்கத்தில் இருக்கிறது’ என்று கூறினார்.
‘சேர்’ என்ற ஆங்கில வார்த்தைதான் எனக்குத் தெரியும். ‘சேரு’ என்ற தமிழ் வார்த்தையை அல்லது வட்டார வழக்குச் சொல்லை நான் கேள்விப்பட்டதில்லை. எனவே பெரியவரிடம் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ‘சேரை’ எனக்குக் காட்டுங்கள் எனறேன்.
பெரியவரும் ‘சேர்’ இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அது பெரிய பெரிய ரூம்களாக ‘ப’ என்ற எழுத்து வடிவில் இருந்தது. ‘இந்தக் கட்டிடங்களை ஏன் ‘சேர்’ என்று கூறுகின்றார்கள்?’ என்று பெரியவரிடம் கேட்டேன்.
தம்பி, இநதக் கட்டிடங்கள் எல்லாம் ஊத்துமலை ஜமீனுக்குச் சொந்தமானது. ஜமீன்தார் அந்தக் காலத்தில் அவர்களுக்குச் சொந்தமான நிலங்களை அந்தந்தப் பகுதி சம்சாரிகளுக்குப் பயிரிட பிரித்துக் கொடுத்து விடுவார். நெல் விளைந்தால் மட்டும் நெல் அறுவடையானதும், ஜமீன் நிலங்களைப் பயிரிட்ட சம்சாரிகளிடம் இருந்து கட்டுக் குத்தகை (பாட்டம்) நெல்லை வாங்குவார்கள்.
அப்படி வாங்கிய நெல்லை, உடனே ஜமீன் தலைநகருக்குக் கொண்டு செல்லமாட்டார்கள். அந்தந்த ஊர்களில் ஜமீன் கட்டி வைத்திருக்கும் இதுபோன்ற ‘சேர்’களில்தான் நெல்லை இருப்பு வைப்பார்கள்.
நெல்லை இப்படிச் சேர்த்து வைக்கும் இடத்தை ‘சேர்’ என்று கூறுகின்றார்கள். நெல்லை கட்டுக் குத்தகைக்காரர்களிடமும், நிலவரிக்காரர்களிடமும் வசூல் செய்வதற்கும் ஊர்தோரும் ஜமீன்தாரர் ஒரு அதிகாரியை நியமித்திருந்தார். அவருக்குச் சேர்வைக்காரன் என்று பெயர்.
அந்தக் காலத்தில் நிலங்களுக்கு ஜமீன்தார்கள் நிலவாரியாக, தானிய தவசங்களை வசூல் செய்தார்கள். நெல் விளையும் இடத்தில் நெல்லையும், சோளம் விளையும் இடத்தில் சோளத்தையும் வரியாக வசூல் செய்வார்கள். நெல், சோளம் தவிர மற்ற தானியங்களையும் வரியாக வசூல் செய்தார்கள். எந்தெந்தக் காலத்தில் என்னென்ன தானியம் விளைகிறதோ, அந்தந்தக் காலத்தில், அந்தந்த தானியத்தை வரியாக வசூல் செய்தார்கள்.
இந்தச் சேரில் அந்தக் காலத்தில் ஒவ்வொரு அறையிலும், ஒவ்வொரு தானியத்தைச் சேமித்து வைப்பார்கள். இப்படித் தானியங்களைச் சேர்த்து வைப்பதால், அந்த இடத்தைச் ‘சேர்’ என்று அழைத்தார்கள். ‘சேர்’ நிறைய தானியத்தைச் சேமிக்கும் அதிகாரியைச் சேர்வை அல்லது சேர்வைக்காரன் என்று சொன்னார்கள், என ‘சேர்’ என்ற வார்த்தை வந்த விபரத்தை விளக்கினார் பெரியவர்.
“சிறிய தானியக் களஞ்சியத்தைத்தான் வழக்கு மொழியில் ‘சேர்’ என்று கூறுகின்றார்கள் என்பதைப் புரிந்துகொண்டு மேலும், விபரங்களைச் சேகரிக்க நான் பெரியவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
“இந்தச் சேருக்கு அந்தக் காலத்தில் காவலர்கள் இருந்தார்களா?” என்று கேட்டேன். பெரியவர், “அம்புட்டுத் தானியத்தை அடைத்து வைத்துவிட்டுக் காவலுக்கு ஆள் வைக்காமல் இருப்பார்களா?”
ராவும் (இரவும்) பகலும், மாற்றி மாற்றி இந்தச் சேரை அரண்மனைக் காவலர்கள் காவல் காத்தார்கள். ஜமீனுக்குச் சொந்தமான சேர் என்பதால் இந்தப் பக்கம் வரவே எல்லோரும் பயப்படுவார்கள். ஆனால் யுத்த காலம் வந்துவிட்டால் எதிரி நாட்டு வீரர்கள் முதலில், சேரில் உள்ள தானியத்தைத்தான் சூரையாடுவார்கள்.
யுத்த காலத்தில் ‘சேர்’களுக்குக் கூடுதல் பாதுகாப்புப் போடுவார்கள். அதையும் மீறி எதிரி நாட்டுப் படைவீரர்கள் ராவோடு ராவாக வந்து சேர்க்குத் தீ வைத்து விடுவார்கள். தானியக் கிடங்கு தீப்பிடித்து எரிந்தால் என்னவாகும்? தானியங்கள், பொறிபொறியாகப் பொறிந்து பிறகு கருகிவிடும். தானியக் கிடங்குக்குத் தீ வைத்த எதிரி நாட்டு ராஜாவின் பூமியில் நாலைந்து வருசமாக மழையே பெய்யவில்லை! எந்தப் பத்தினியோ போட்ட சாபம் பலித்துவிட்டது என்று கூறினார்கள்.
சில ஜமீன்கள் சேரில் இருப்பு வைத்த தானியத்தை நாலைந்து வருசத்திற்கு ஏறிட்டுப் பார்க்க மாட்டார்கள். இப்படி அடைத்து வைப்பதால், ஈரத்தோடு இருப்பு வைத்த தானியங்கள் வருசக் கணக்கில் இருந்ததால் புழுத்து, உளுத்துக் கெட்டுவிடும்.
இருதாலய மருதப்ப பாண்டியன் ஆட்சிக் காலத்தில் மட்டும் முதல் வருசம் இருப்பில் வைத்த தானியத்தை, அந்த வருசம் ஆரம்பத்தில், மழை பெய்து செழித்த உடன் குளம் நிறைந்து, மறுகால் போன உடன் சம்சாரிகள் யாவரும் நெல் நடவு செய்த உடன், அந்த மகசூல் விளைந்துவிடும் என்ற நம்பிக்கை வந்தவுடன், இருப்பில் உள்ள தானிய தவசங்களை எல்லாம் குடி, படைகளுக்குத் தகுதி வாரியாக இனாமாக அளந்து கொடுத்துவிடச் சொல்லிவிடுவார்.
அதனால் மக்களும் மகிழ்ந்தார்கள். தானியங்கள் இருப்பில் வருசக்கணக்கில் இருந்து, உளுத்துப் புளுத்துக் கெட்டுப் போவதும் இல்லை.
ஊத்துமலை ஜமீன்தார் தன் ஆட்சிக்கு உட்பட்ட ஊர்களைப் பல பிர்க்காக் (பகுதி)களாகப் பிரித்து ஒவ்வொரு பிர்க்காவையும் பராமரிக்க ஒரு சேர்வைக்காரரை நியமித்து இருந்தார்.
அந்தந்த பிர்க்காக்களில் நடக்கும் களவு, திருடுகளைக் கண்டிப்பது, திருடர்களைத் தண்டிப்பது, களவு, திருடு நடக்காமல் காபந்து பண்ணுவது, வரிவசூல் பண்ணுவது, ‘சேர்’களுக்கு காவல்காரர்களை நியமிப்பது என்று அனைத்து வேலைகளையும் சேர்வைக்காரர்தான் செய்தார்.
கலங்கல் என்ற பிர்க்காவில் ஒருமுறை சேரில், பின்பக்கச் சுவரை இடித்து ஓட்டை போட்டு யாரோ ஒருவன் நாலைந்து கோட்டை நெல்லைத் திருடிவிட்டான்.
அது நடந்ததும் ஊத்துமலை ஜமீன்தார் மருதப்ப பாண்டியன் காலத்தில்தான். உடனே செய்தி ஜமீன்தார் காதிற்கு எட்டியது. ஜமீன்தார் திருடனை உடனே கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டார். எப்படியோ துப்பு வெட்டி திருடனைக் கண்டு பிடித்துவிட்டார்கள்.
திருடன் யார் என்றால், சேரைக் காவல்காத்த காவல்காரனோட மச்சினன்தான்.
திருடனைப் பிடித்து விசாரித்தால், அவன் ‘காவல்காரனான என் மச்சினன்தான் சேரின் பின்பக்கம் சுவரில் கன்னம் வைத்துத் (ஓட்டை போட்டு) திருடச் சொன்னான்” என்று காவல்காரனைக் கைகாட்டினான்.
“இது என்னடா வேலியே பயிரை மேய்ந்த கதையா இருக்கு” என்று நினைத்த மகாராஜா காவல்காரனைக் கூப்பிட்டு விசாரித்தார்.
காவல்காரன், ‘மகாராஜா! சேர்வைக்காரர் ஒரு வருசமா காவல் கூலி தரவே இல்லை. எனக்கு மட்டுமில்லை. எந்தக் காவல்காரனுக்கும் காவல் கூலி கொடுக்கவில்லை. என் வீட்டில் பல்லில் வைத்துக் கொரிக்கக்கூட ஒரு தானியம் இல்லை! ராவாப் பகலா சேரிலிருக்கும் தானியத்திற்கு காவல் காக்கிற எனக்கே கூலித் தானியத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறார் இந்த சேர்வைக்காரர். நானும் என் பிள்ளைகளும் எத்தனை நாளைக்குத்தான் பட்டினி கிடக்க முடியும்? இந்த அநியாயத்தை நான் யாரிடம் போய்ச் சொல்ல முடியும்? எனக்குக் கூலியாக வரவேண்டிய தானியத்தை, நான் தான் ‘கன்னம்’ வைத்து என் மச்சினனை எடுக்கச் சொன்னேன். நான் செஞ்சது தப்புதான் வயிற்றுப் பசி பொறுக்கமாட்டாமல் திருடச் சொல்லிவிட்டேன். எனக்கு மகாராஜா என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துகிறேன்” என்று பணிவாகக் கூறினான்.
மகாராஜா, மற்றக் காவல்காரர்களையும், சேர்வைக்காரரையும் தனித்தனியே கூப்பிட்டு விசாரித்தார்.
விசாரித்ததில் காவல்காரன் சொன்னது யாவும் உண்மை என்பது ருசுவானது (நிரூபணமானது). எனவே சேரின் சுவரைக் கன்னம் வைத்துத் திருடிய திருடனையும், காவல்காரனையும் விடுதலை செய்துவிட்டு, சேர்வைக்காரனைக் கூப்பிட்டுக் கண்டித்து, அவனைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அந்தப் பிர்க்காவுக்குப் புதிய சேர்வைக்காரனை நியமித்தார் மகாராஜா. ஆனால் காவல்காரனை பதவியிலிருந்து நீக்காமல் விட்டதோடு அவனுக்கு “அரண்மனைக் காவல்” என்ற உயர்ந்த பதவியைக் கொடுத்தார், மகாராஜா இருதாலய மருதப்ப பாண்டியன்.
ஜமீன்களிலேயே மதிநுட்பமும், ஈவு இரக்கமும், பக்தியும், நீதியும் உடையவராக திகழ்ந்தார் இருதாலய மருதப்ப பாண்டியன்” என்று கதையைக் கூறி முடித்தார் பெரியவர்.

பாணான் மரபு


பழங்காலத்தில் ஜாதியப் பிரிவுகள், அவரவர்கள் குழுவாகச் செய்யும் தொழிலின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. தச்சு வேலை, கொல்லு வேலை, தங்க வேலை, கல்வேலை – என்று தனித்தனித் தொழிலை மட்டும் செய்கிறவர்களை, ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குள்ளேயே தனித்தனி பிரிவுகளாக வகுத்திருந்தார்கள்.
சலவைத்தொழில் செய்கிறவர்களிலும், அந்தக் காலத்தில் ரெண்டு மூன்று வகையினர் இருந்தனர். உயர் ஜாதிக்காரர்களுக்குச் சலவை செய்து கொடுக்க என்று ஒரு பிரிவினரும் தாழ்ந்த ஜாதிக்காரர்களுக்கு சலவை செய்து கொடுக்க என்று ஒரு பிரிவினரும் இருந்தார்கள்.
இன்றைக்கு நவீன இயந்திரங்களின் பயன்பாடு வந்த்தால் குறிப்பிட்ட சில வேலைகளைக் குறிப்பிட்ட சில ஜாதிக்காரர்கள்தான் பார்க்க வேண்டும் என்ற நிலை மாறிவிட்டது. சான்றாக மரம் அறுக்க இயந்திரங்களும், மரத்தடிகளை இழைக்க இயந்திரங்களும் இன்று பயன்பாட்டிற்கு வந்துவிட்டதால், எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களிலும் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் தச்சுத் தொழிலைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
மரக் கட்டில்களையும், மேஜை, நாற்காலி போன்ற மரச் சாமான்களையும் விதவிதமாகத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் பலவும் நாட்டில் பெருகிவிட்டன. அத்தொழிற்சாலைகளில் தச்சுத்தொழில் செய்யும் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் பணி செய்வதில்லை. சகல ஜாதியைச் சேர்ந்தவர்களும், அத்தொழிற்சாலையில் பணி செய்கிறார்கள்.
இதே போல, இரும்பு சம்பந்தப்பட்ட வேலைகளும், இன்று இயந்திரமயமாகி விட்டன. செருப்புத் தைப்பது, சலவை செய்வது, சிகை அலங்காரம் செய்வது என்பது போன்ற பல தொழில்கள், இன்று ‘ஜாதி’ என்ற எல்லையைத் தாண்டிப் பொதுமைப்பட்டு விட்டன.
‘தையல் வேலை’. தையல்கலை சம்பந்தப்பட்ட வேலைகளையும் பழங்காலத்தில் குறிப்பிட்ட ஒரு ஜாதியைச் சேர்ந்த மக்கள் மட்டுமே செய்தார்கள். கையால் தையற் வேலை செய்து வாழ்ந்த அந்த மக்கள் ‘பாணான்’ என்ற குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். பாணான் என்பதின் பெண்பால் பெயர் பாணாத்தி என்பதாகும்.
இசை பாடி மக்களை மகிழ்வித்தவர்கள் ‘பாணன்’ என்று அழைக்கப்பட்டார்கள். தையல் கலையை மட்டும் செய்து வாழ்ந்த மக்களை ‘பாணான்’ என்று அழைத்தார்கள். ‘பாணன்’ என்பதையும் ‘பாணான்’ என்பதையும் பிரித்தறிந்து பொருள் புரிந்து கொள்ள வேண்டும்.
தையல் இயந்திரம் கண்டு பிடிக்கப்படும் முன்பு நம் நாட்டில் வாழ்ந்த மக்கள், கையால் தைக்கப்பட்ட ஆடைகளையே அணிந்திருக்கிறார்கள். தையல் வேலை செய்கிறவர்களிலேயே பல பிரிவினர் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறார்கள்.
கிழிந்த பழைய துணியை தைத்துக் கொடுத்து மட்டும் (இன்றைக்கு கிழிந்தா பழஞ்சாக்கைத் தைத்துக் கொடுப்பதைப்போல) தொழிலாகக் கொண்டு சில பாணான்களும், பாணாத்திகளும் வாழ்ந்திருக்கிறார்கள். பழைய கிழிந்த வேட்டிகளையும், பழைய கிழிந்த சேலைகளையும், சட்டைகளையும் மட்டும் கையில் ஊசி நூல் கொண்டு தைத்துக் கொடுத்து, அதற்குக் கூலியாகத் தானிய தவசங்களையும், சாப்பிட கஞ்சியும் வாங்கி இருக்கிறார்கள்.
கிழிந்த பழந்துணிகளைப் பொதுமக்களுக்குத் தைத்துக் கொடுத்து அதிலிருந்து வரும் எளிய வருவாயைக் கொண்டு தன் கால ஜீவனத்தைக் கழித்த பாணானும், பாணாத்தியும் அன்றையச் சமூக அமைப்பில் விளிம்புநிலை மக்களாகவே இருந்திருக்கிறார்கள்.
இன்னும் பேச்சுவழக்கில் ஒருவனை அல்லது ஒருத்தியைத் திட்டும்போது ‘போடா… பாணாத்தி…’ என்று சொல்லி வைகிறார்கள். (ஏசுகிறார்கள்) இந்த வசவில் பாணாத்தி என்ற சொல் இழிநிலையிலேயே கையாளப்படுகிறது.
பாணான்களிலும் அந்தக் காலத்தில் ரெண்டு மூணு வகையினர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் மிகவும் கடைநிலையில் உள்ளவர்கள்தான் கிழிந்த பழந்துணியைத் தைத்திருக்கிறார்கள். பாணான்களிலேயே நடுநிலையான அந்தஸ்தில் உள்ளவர்கள் புதிய துணிகளை அளவெடுத்து வெட்டிக் கையில் ஆடைகளாகத் தைத்து மக்களுக்குக் கொடுக்கும் ‘தையல்காரர்’களாக இருந்திருக்கிறார்கள். இத்தகைய தையல்காரர்களுக்கு கூலியும் அதிகமாகக் கிடைத்திருக்கிறது. பாணான்களிலேயே தலைநிலையில் உள்ள தையல்காரர்கள் தையல் கலைஞர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். இவர்கள், அரசர்கள், ஜமீன்தார்கள், பெருந்தனக்காரர்கள் போன்ற மேட்டுக்குடி மக்களுக்கும், தேரை அலங்கரிக்கவும், பவனி வரும் சாமியின் அலங்காரத்திற்கும், சாமியாடும் கோமரத்தான்களுக்கும் மட்டும் கலை அழகுடன் கூடிய ஆடை அணிகலன்களைத் தைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
தையல் கலை மூலம் கலையழகுடன் கூடிய ஆடைகளைத் தைத்துக் கொடுக்கும், பாணான் என்ற கலைஞர்களை அந்தக் காலத்தில் ஜமீன்தார்களும், குறுநில மன்னர்களும் ஆதரித்திருக்கின்றார்கள். சாமி அலங்காரத்திற்கும், சப்பர அலங்காரத்திற்கும், தேரின் அலங்காரத்திற்கும், கலையழகுள்ள, தையல் வேலைகளைச் செய்து கொடுக்க என்று சில பாணான்களை அரசர்கள் நியமித்து, அவர்களுக்குக் கூலிக்குப் பதில் சில மானியங்களை (முப்போகம் நெல் விளையும் நிலங்களை) வழங்கி இருக்கிறார்கள்.
திருநெல்வேலி டவுனில், கூழைக்கடை பஜாருக்கு அருகில் உள்ள ஒரு சந்திற்கு பாணான் முட்டுச்சந்து என்று பெயர் உள்ளது. நெல்லையப்பர் கோயில் சம்பந்தப்பட்ட தையல்கலை வேலைகளைச் செய்யும் சில தையல் கலைஞர்களின் குடும்பங்கள் மட்டும் அந்தக் காலத்தில் அந்தச் சந்தில் வாழ்ந்திருக்கிறார்கள். எனவே தான அந்தச் சந்திற்கு பாணான் முட்டுச்சந்து என்று பெயர் வந்தது என்று பெரியவர் ஒருவர் என்னிடம் நேர் பேச்சில் கூறினார்.
இன்றும் ‘பாணான்’ இனத்தைச் சேர்ந்த சில குடும்பத்தினர் திருநெல்வேலி டவுனில் வசிக்கிறார்கள். அவர்களில் சிலர், இன்றும் திருவிழாக் காலங்களில் நெல்லையப்பர் கோயில் தேரின் அலங்கார வேலைகளையும், சப்பர அலங்கார வேலைகளையும் பார்க்கிறார்கள்.
தாமிரபரணி ஆற்றின் கரையில் குறுக்குத் துறைக்குப் பக்கத்தில் உள்ள சில வயல்களை ‘பாணான் மானியப் பத்து (கழனி) என்று அழைக்கிறார்கள். வயல்களுக்கு இன்று ‘பாணான் மானியம்’ என்ற பெயர் இருக்கிறதே தவிர, தற்போது அந்த நிலங்கள் சம்சாரிகள் சிலருக்கு உரிமையானதாக உள்ளது. பாணான் வம்சத்தைச் சேர்ந்த முன்னோர்கள் அந்த மானிய நிலங்களை வறுமையின் காரணமாகப் பிறருக்கு விற்றிருக்க வேண்டும்.
எங்கள் வட்டாரத்தில், ஊத்துமலை ஜமீனின் தலைநகரமான வீரகேரளம் புதூரில், சில ‘பாணான்’ இனத்தைச் சேர்ந்த தையல் கலைஞர்கள் வாழ்கின்றனர். தையல் கலை என்பதும் இயந்திர மயமாகிவிட்டதால், இவ்வூரில் உள்ள பாணான் இனத்து ஆடவர்கள், தையல் கடை வைத்து, தையல் வேலை செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களில் ஒரே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பாடாலிமுத்து என்பவர் மட்டும் பாரம்பரியமான தன் தையல் கலையை இன்றும் விடாமல் செய்து கொண்டிருக்கிறார். எங்கள் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஜாதியைச் சேர்ந்த அனைத்துக் கோமரத்தான்களுக்கும் (சாமியாடிகளுக்கும்) தேவையான தலைக் குல்லாய்களையும், ‘சல்லையம்’ என்று சொல்கிற இடுப்பில் – அணியும் நீண்ட டவுசர் (சாட்ஸ்) போன்ற உடுப்பையும் தைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாமியாடிகள், தலையில் அணிந்துகொண்டு ஆடும் குல்லாய் (தொப்பி) பல வண்ணத்துணிகளால் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டதாக இருக்கும். சாமிகள் அணியும் குல்லாய் பெரும்பாலும் விதவிதமான, கைத் தையல்களால், வண்ணமயமாக உருவாக்கப்படுகிறது, இந்தக் குல்லாய்களின் இடை இடையே மின்னும் கண்ணாடித் துண்டுகளும் கைத் தையலால் பதிக்கப்பட்டிருக்கம்.
அதேபோல சாமியாடிகள் இடுப்பில் அணியும் ‘சல்லையம்’ என்ற உடையும், பல வண்ணத் துணிகளால், அழகிய கலைநயம் மிக்க வேலைப்பாடுகளுடன் கூடியதாகத திகழ்கிறது. காலங்காலமாக, சாமியாடிகளுக்கு, தலைக் குல்லாய்களையும், சல்லையங்களையும், பாணான் இனத்தைச் சேர்ந்த இந்த பாடாலிமுத்துவின் முன்னோர்தான் தைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாணான் மரபில் வந்த பாடாலிமுத்து இன்றும் தன் குலத்தொழிலை கலைநயத்துடன் செய்து வருகிறார்.
இவர், இத் தையல் கலையை குருகுலமாகத் தன் தந்தையாரிடம் இருந்து கற்றுக் கொண்டதாகக் கூறுகின்றார். வீரகேரளம்புதூரில் சாமியாடிகளுக்குத் தேவையான அழகிய வேலைப்பாடுகள் மிகுந்த உடுப்புகளையும், குல்லாய்களையும் தைத்து தன் தையல் கடையில் வரிசையாகத் தொங்கப் போட்டிருக்கின்றார். பொதுமக்களில் சிலர் நேர்த்திக் கடனாக இந்த உடுப்புகளை வாங்கி சாமிகளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறார்கள் என்கிறார்.
சாமியாடிகளுக்குத் தேவையான உடுப்புகளுடன் சாமியாடிகள் கையில் பிடித்து ஆடும் வல்லயக் கம்புகளையும், சாமியாடிகள் கையில் வைத்து அடிக்கும் சாட்டைகளையும் சேர்த்துத் தன் தையல் கடையில் வைத்து விற்று வருகிறார். தையல் கலைஞரான பாடாலி முத்து.
ஆய்வாளர்களின் அதிகக் கவனத்தைப் பெறாத, பாணான் கலைஞர்களைப் பற்றி நாட்டுப்புறவியல் துறைசார்ந்த ஆய்வாளர் யாராவது முயன்று தேடினால் மேலும் அதிகமான தரவுகளை நாம் பெறலாம்.


அன்னபூரணத்தின் அவலக்கதை-II

      பத்து வயதில் கல்யாணம் நடந்ததும், பதினோரு வயதில் விவாகரத்து நடந்ததும் தெரியாமல், அன்ன பூரணம் என்ற சிறுமி, தன் சோட்டுப் பிள்ளைகளுடன் பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்தாள்.


மருதப்பர் விவாகரத்து ஓலை அனுப்பினாலும், அழகப்பத் தேவர் அதை வாங்கிக் கொள்ளவில்லை. "வயசுக்கு வராத பெண் பிள்ளையை விவாகரத்து செய்ய. கட்டிய கணவனுக்கும் உரிமை கிடையாது" என்று வாதிட்டார்.


மருதப்பரின் வகையறாக்காரர்களோ, "விவாகரத்து ஓலையில் கட்டிய கணவர் கையொப்பம் இட்டு விட்டதால் இனி, இந்த ஊரில் உமக்கு வேலை இல்லை, அரண்மனைக்குச் சொந்தமான லெட்சுமி விலாஸ் என்ற வீட்டைக் காலிசெய்துவிட்டு, உம் சொந்த ஊருக்குச் சென்றால் உயிர் பிழைத்தீர், இல்லை என்றால் நடக்கிறதே வேறு!"என்று அழகப்பரை மிரட்டினார்கள்.


ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் மருதப்பரின் ஆட்களிடம் இனியும் மோதினால் நிலமை மோசமாகிவிடும் என்று நினைத்த அழகப்பத் தேவர். இரவோடு இரவாக, அரண்மனைக்குச் சொந்தமான லெட்சுமி விலாஸ் என்ற வீட்டைக் காலி செய்துவிட்டு மகளையும் அழைத்துக் கொண்டு, தன் சொந்த ஊரான குருக்கள் பட்டிக்கே வந்துவிடுகிறார்.


சிறுமியான அன்னபூரணத்திற்கு, திடீரென்று தன் வாழ்வில் எங்கிருந்தோ ஒரு பிரகாசம் வந்தது போலவும், அது இடையில் அணைந்து மீண்டும் இருள் வந்தது போலவும் இருந்தது.


சின்னஞ்சிறு கிராமத்தில் சிறிய ஓட்டு வீட்டில் வறுமையான சூழலில் வாழ்ந்து கொண்டிருந்த அனுபவமும், இடையில், படாடோபமான,அரண்மனை அந்தஸ்துடன் கூடிய வாழ்வனுபவமும், அன்னபூரணம் என்ற சிறுமியைத் திகைக்க வைத்தது.


பட்டுப்பாவாடையும் சட்டையும் உடுத்திக் கொண்டு, பஞ்சு மெத்தையில் படுத்து உறங்கியதும், பால் பழங்கள், நாவுக்கு ருசியான உணவு என்று சாப்பிட்டதும் தன்னைச் சுற்றிப் பணிப் பெண்கள் அமர்ந்து கொண்டு, மகாராணியாரே, நாச்சியாரே! என்று அழைத்து. ஏவிய வேலைகளைச் செய்ததும் அச்சிறுமிக்கு வியப்பைக் கொடுத்தது.


"இந்தப் பச்சமதலைக்கு (சின்னஞ்சிறு பெண்ணுக்கு) வந்த வாழ்வைப் பாரேன்!" என்று சுற்றி உள்ள பெண்கள் எல்லாம் மூக்கின் மேல் விரலை வைத்தார்கள்.


சும்மா இருந்த மரக்கிளையில் திடீரென்று தேனீக்கள் வந்து தேன்கூடு கட்டி, அதில் தேனைச் சேமித்தது போல அச்சிறுமியின் வாழ்வில் ஒளி வீசியது.


விதி வசத்தால் அந்த வாழ்வு வெகு நாட்களுக்கு நிலைக்கவில்லை. யார் கண்பட்டதோ, தேன்கூட்டில் உள்ள தேனை எல்லாம் யாரோ ஒருவன் வந்து எடுத்துச் சென்றுவிட்டான்.


சிறுமியின் கழுத்தில் கொடுத்தவாக்கைக் காப்பாற்றுவதற்காகத் தாலிகட்டிய மருதப்பர் அதன் பிறகு ஒரு நாள் ஒரு பொழுதுகூட அச்சிறுமியைப் பார்க்க வரவில்லை.


கல்யாணம் முடிந்த மகிழ்ச்சியும் விவாகரத்து செய்த துக்கமும் அன்னபூரணம் என்ற சிறுமியைப் பாதிக்கவில்லை. ஆனால் அழகப்பத் தேவர் மிகவும் மனம் நொந்து போனார்.


"பனை ஏறியும் பாளை தொடாமல் போனது போல, நம் நிலைமை ஆகிவிட்டதே!" என்று வருந்தினார். "தன் கைக்கு எட்டிய அரண்மனை வாழ்வும் சுக போகமும், ஆட்சி அதிகாரமும், தன் வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே!" என்று வருத்தப்பட்டார்.


அன்னபூரணம் என்ற சிறுமி மீண்டும் தன் சொந்தக் கிராமத்தில் உள்ள தன் சோட்டுப் பிள்ளைகளுடன் (சமவயதுப் பிள்ளைகளுடன்) சேர்ந்து,பாண்டி, நொண்டி, கிளித்தட்டு, கிச்சுக் கிச்சுத் தாம்பளம் என்று பலவிதமான விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்தாள்.


அழகப்பத் தேவரின் உறவினர்கள், "ஜமீன்தார், மேஜராகாத பிள்ளைக்கு ஓலை அனுப்பி விவாகரத்து செய்தது செல்லாது. எனவே நீ வெள்ளைக்கார துரைமார்களிடம் (அதிகாரிகளிடம்) மனுக்கொடுத்து மேல் நடவடிக்கை எடு!" என்று தூண்டினார்கள்.


பணத்தாசை பிடித்த அழகப்பத்தேவர் தன் உறவினர்கள் சொன்னபடி, திருநெல்வேலி சென்று, அப்போது அங்கு கலெக்டராக இருந்த வெள்ளைக்கார துரையிடம் ஜமீன்தார் மருதப்பரின் மேல் புகார் மனு கொடுத்தார்.


ஜமீன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடியிருந்து கொண்டு, ஜமீன்தாருக்கு எதிராக வெள்ளைக்கார துரையிடம் (கலெக்டரிடம்) புகார் மனு கொடுத்ததால், ஜமீன்தாரின் உறவினர்களும், அங்கு பணி செய்யும் அதிகாரிகளும், நேரடியாகவும், மறைமுகமாகவும், அழகப்ப தேவரை மிரட்டினார்கள். எனவே அழகப்பத்தேவர் தன்னைக் காத்துக் கொள்ள தன் உறவினர்களின் துணையை நாடினார்.


ஜமீன்தார் நேசமுடன் இருந்த காலத்தில், தனக்கு அன்பளிப்பாகக் கொடுத்த பொன், பொருள்களையும், நிலபுலன்களையும் அழகப்பத் தேவர் ஒவ்வொன்றாய் விற்றுத் தன் உறவினர்களின் உல்லாச வாழ்வுக்காகச் செலவு செய்தார்.


தன்னைச் சுற்றிச்சூழும் பகையைப் பற்றிக் கவலைப்படாமல் அன்னபூரணி என்ற சிறுமி தன் சோட்டுப்பிள்ளைகளுடன் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தாள்.


அரண்மனையில் உள்ள ஆட்களால் அன்னபூரணியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அச்சிறுமியை ஜமீன் எல்லை தாண்டிய வேறொரு கிராமத்தில் உள்ள தன் உறவினர் ஒருவரின் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டார் அழகப்பத் தேவர்.


அன்னபூரணம் என்ற சிறுமிக்கு. ஏன் நாம் இப்போது வேறொரு ஊருக்கு அழைத்துச் செல்லப்படுகிறோம் என்ற விபரமும் தெரியவில்லை.தாயில்லாப்பிள்ளையான அன்னபூரணம், அவளின் சிற்றன்னையி்ன் வீட்டில் தங்க ஆரம்பித்தாள். அந்தக் காலகட்டத்தில்தான், அன்னபூரணம் வயசுக்கு வந்தாள்.


அன்னபூரணத்தின் பூப்பு நீராட்டு யாருக்கும் தெரியாதபடி மிக ரகசியமாக வைக்கப்பட்டது. பருவம் வந்த தன் பெண்ணைப் பகடைக் காயாக வைத்து ஜமீன் சொத்துகளைப் பெற வேண்டும் என்று அழகப்பத் தேவர் கனவு கண்டார்.


கலெக்டரிடம் அழகப்பத்தேவர் கொடுத்த மனு விசாரணைக்கு வந்தது. அழகப்பத் தேவருக்கு ஆங்கிலம் தெரியாததால் தனக்கு என்று ஒரு வக்கீலை வைத்துக் கொண்டு வாதாடினார். மருதப்பரும் தனக்காக ஒரு வழக்கறிஞரை நியமித்தார்.


வெள்ளைக்கார கலெக்டருக்கு இந்த வழக்கே மிக விசித்திரமாகப்பட்டது. வயசுக்கு வராத சிறுமியைத் திருமணம் செய்து கொண்டதும், அதே சிறுமி வயசுக்கு வரும் முன்னரே, அவளை விவாகரத்து செய்ததும் சட்டப்படி குற்றம் என்று வெள்ளைக்கார கலெக்டர் நினைத்தார்.


ஆனால் வழக்கறிஞர்கள், பாலியமனம் என்பதும், சொத்துக்காக, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக, அல்லது தாத்தா, பாட்டி, போன்றோரின் விருப்பத்தை நிறைவேற்ற இது போன்ற திருமணங்களைச் செய்து கொள்வதும் தமிழர்களின் சம்பிரதாயம் என்றும் கலெக்டர் துரைக்கு எடுத்துரைத்தார்கள்.


எதிர் மனுதாரர், ஜமீன்தார் என்பதாலும், அவர், தன் ஆட்சி அதிகாரங்களுக்கு எல்லாவிதத்திலும் ஒத்துப் போகிறவர் என்பதாலும், கலெக்டர் துரை,இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு்க் கொண்டு செல்ல அறிவுறுத்தினார்.


கலெக்டரின் உத்தரவின் பேரில், வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது. அழகப்பத் தேவர் தன் சொத்துகளை ஒவ்வொன்றாய் விற்று வழக்கை நடத்தினார். நீதிமன்றம் வாய்தாக்களைப் போட்டுக் காலத்தைக் கடத்தியது.


நாளாக நாளாக, அன்ன பூரணம் கன்னிப் பெண்ணாக வளர்ந்து வந்தாள். இப்போது அவளை யாருக்கும் திருமணம் செய்து கொடுக்க அப்பெண்ணின் தந்தையான அழகப்பத் தேவர் விரும்பவில்லை. அவரைப் பொருத்தவரை அன்னபூரணம் ஊத்துமலை ஜமீனின் இளையராணிதான்.


ஜமீன்தார் மாலையிட்டு, பின் விவாகரத்தும் செய்துவிட்ட பெண்ணை, யாரும் திருமணம் செய்து கொள்ளவும் முன் வரவில்லை. செயற்கையாக ஒரு துறவு வாழ்க்கை அன்னபூரணியின் மேல் திணிக்கப்பட்டது.


ஒருபுறம் இளைய மகாராணி என்ற பிம்பம், மறுபுறம் சோத்துக்கே, அடுத்த வீட்டில் (சித்தியிடம்) கையேந்திக்கொண்டு தலைமறைவாக வாழும் அவல வாழ்க்கை. அன்ன பூரணியின் வாழ்க்கை, இருதலைக் கொள்ளி எறும்பாகிவிட்டது.


மருதப்பருக்கும், மீனாட்சி சுந்தர நாச்சியாருக்கும் பிள்ளைப்பேறுவேறு இல்லை. எனவே, மருதப்பர் யாராவது ஒரு சிறுவனைத் தனக்கு வாரிசாகத் தத்தெடுக்க நினைத்தார்.


ஏற்கனவே ரெண்டாந்தாரமாகக் கட்டிய மனைவி கன்னிப் பெண்ணாகக் கைநிமிர்ந்து நிற்கும்போது, அவளுடன் சேர்ந்து வாழாமல் சிறுவன் ஒருவனைத் தத்தெடுக்கக்கூடாது என்று அழகப்பத்தேவர் கோர்ட்டில் தடங்கல் மனு கொடுத்தார்.


மருதப்பர் எந்த நிலையிலும் அழகப்பத் தேவரின் எந்தக் கோரிக்கையையும் ஏற்க மறுத்தார். வாரிசு இல்லாத ஜமீன் சொத்துகளுக்கு தன் மகளே வாரிசு என்று அழகப்பத் தேவர் வாதாடினார்.


ஒரு புறம் தன்னைப் பெற்றெடுத்த தந்தை ஜமீன் சொத்துகளை அடைய வேண்டித் தன்னைப் பகடைக் காயாக வைத்து விளையாடுகிறார்;மறுபுறம் அறியாத வயதில் தான் கொடுத்த வாக்கிற்காகப் பேருக்குத் தாலி கட்டிவிட்டு, தன் கணவரான மருதப்பரும், பாராமுகமாக இருந்துகொண்டு தன்னை நிராகரிக்கிறார். எனவே நம் இல்லற வாழ்வு கேள்விக்குறியாகிவிட்டது என்பதை உணர்ந்து கொண்ட அன்னபூரணம் தனியே இருந்து அழுது தன் தலைவிதியை நினைத்துக் கண்ணீர் சிந்தினாள். பெற்றவர், கணவர் என்ற இரு ஆண்களின் ‘ஈகோ’வுக்குள் சிக்கி அப்பெண்ணின் வாழ்வு சிதைந்தது.


நீதி மன்றத்தில் சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் அடிக்கடி அன்னபூரணத்தம்மாளைச் சந்திக்கச் சென்றார்.


அவர்மூலம் கிறிஸ்தவ மதத்தைப் பற்றியும், பைபிளைப் பற்றியும் தெரிந்து கொண்டு, அன்னபூரணத்தம்மாள் ஒருநாள் கிறிஸ்தவ மதத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.


கிறித்தவ மதத்தில் சேர்ந்த அன்னபூரணத்தம்மாளின் பெயர் மேரி விக்டோரியாள் என்று மாற்றப்பட்டது. மன உளைச்சலின் உச்சக்கட்டத்தில் இருந்த அப்பெண், மதமாற்றத்திற்குப்பின், கன்னியாஸ்திரியாகித் துறவறம் பூண்டார்.


மகள் மதம் மாறியதால், மனம் உடைந்த அழகப்பத் தேவரும் சிறிது காலத்திற்குப் பிறகு இறந்து விடுகிறார்.

அன்னபூரணத்தம்மாளின் இந்த அவலக் கதையை எனக்கு வாய்மொழியாக வீரகேரளம்புதூரைச் சேர்ந்த இரா.உ.விநாயகம் பிள்ளை என்ற கதை சொல்லி கூறினார். தற்போது அவர் உயிரோடு இல்லை

அன்னபூரணத்தின் அவலக் கதை-I

அன்னபூரணத்தின் அவலக் கதை-I


தமிழகத்தைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து அப்பகுதிகளை ஜமீன்தார்கள் ஆண்டு வந்தார்கள். எங்கள் பகுதி ஊத்துமலை ஜமீனைச் சேர்ந்தது. சில ஜமீன்களின் வரலாறுகள் ஆதாரபூர்வமாக (தக்க சான்றாதாரங்களுடன்)எழுதப்பட்டுள்ளது.

ஊத்துமலை என்ற ஊரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்த ஊத்துமலை ஜமீனின் வரலாற்றை இதுவரை யாரும் முழுமையாகத் தொகுத்துத் தரவில்லை. ஊத்துமலை ஜமீனைப் பற்றி வாய்மொழி வாயிலாக உலவி வந்த பல்வேறு சொல் கதைகளை நான் பல்வேறு இதழ்களில் அவ்வப்போது எழுத்தில் பதிவு செய்துள்ளேன்.

சமீபத்தில் ஊத்துமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு.த. மருது பாண்டியன் அவர்கள், ஊத்துமலை ஜமீனின் வரலாற்றை முறையாகத் தொகுத்து, "ஊத்துமலை ஜமீன் தமிழ் வளர்த்த பூமி" என்ற நூலை வெளியிட்டுள்ளார்.இந்நூலை எழுதுவதற்கான வரலாற்று ஆவணங்களை எல்லாம் அவர், ஆங்கிலேயர்கள் எழுதி வைத்துச் சென்றுள்ள (பதிவு செய்துள்ள) ஆவணங்களில் இருந்தே பெற்றுள்ளார். தமிழர்களுக்கு குறிப்பாகத் தமிழ் அறிஞர்களுக்கு சமகால வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்பு அக்காலத்தில் இருந்ததில்லை என்பதை நாம் மறுக்க முடியாது.

அந்நூலில் ஊத்துமலை ஜமீனை ஆண்ட ஜமீன்தார்களில் மிகவும் புகழ்பெற்றவரும், மக்களால் போற்றப்பட்டவரும் தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவருமான இருதாலய மருதப்ப பாண்டியரின் வரலாற்றை மிகச் சிறப்பாகத் தொகுத்துத் தந்துள்ளார்.

இருதாலய மருதப்ப பாண்டியரின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்து காணப்படும் அன்ன பூரணம் என்ற பெண்ணின் கதை உள்ளபடியே அந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்களின் ஆதிக்க வெறிக்கும், அதிகார மோகத்திற்கும், இடையே அன்ன பூரணம் என்ற சிறுமி அகப்பட்டு அவள் அனுபவித்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எல்லாம் விதியின் செயல் என்று ஒரே வார்த்தையில் விடை சொன்னாலும், அன்னபூரணம் வடித்த கண்ணீரின், அனுபவித்த துன்பத்தின் சுமை மிகவும் அதிகம்.

அன்ன பூரணத்தம்மாளின் கதையை மிகச் சுருக்கமாக வாசகர்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன்.

ஊத்துமலை ஜமீனின் புதியதலை நகரமாக வீர கேரளம் புதூரை அறிவித்து அங்கு ஒரு அழகிய அரண்மனையைக் கட்டி, அதில் குடி பெயர்ந்து ஆட்சி செய்கிறார் இருதாலய மருதப்ப பாண்டியன்.

ஊத்துமலைக்கு அருகில் உள்ளது குருக்கள்பட்டி என்ற ஊர். குருக்கள் பட்டியில் அழகப்பத்தேவர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் வேட்டையாடுவதில் வல்லவர். எனவே, அவருடன் மருதப்பர் அடிக்கடி, ஊத்துமலைக் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றார்.

ஒரு நாள் வேட்டையின் போது மருதப்பரை கருநாகப்பாம்பு ஒன்று தீண்ட வருகிறது. தக்க சமயத்தில் அழகப்பத் தேவர் கருநாகப் பாம்பை வெட்டி ரெண்டு தூண்டாக்கிக் கொன்று மருதப்பரின் உயிரைக் காக்கின்றார்.

தன் உயிரைக்காத்த அழகப்பத் தேவருக்கு அன்று மாலையே வீரகேரளம் புதூரில் உள்ள தன் அரண்மனையில் தடபுடலாக விருந்து கொடுத்து,அவருக்குத் தேவையான பொன் பொருள்களையும், தனக்குப் பிரியமான, குதிரை ஒன்றையும் தானமாகக் கொடுத்து அழகப்பத்தேவரை கௌரவித்த மருதப்பர், "உமக்கு வாரிசாக இருக்கும் ஒத்த ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கைக்கும் நானே பொறுப்பேற்கிறேன்" என்று சொல்கிறார்.

பொன், பொருளைப் பெற்ற போதையில் அழகப்பத் தேவர், மருதப்பர் சொன்ன வார்த்தைகளின் பொருளை தனக்குச் சாதகமாக (வேறு விதமாக)புரிந்துகொள்கிறார். விதி இங்குதான் விளையாட ஆரம்பிக்கிறது.

மருதப்பர், குருக்கள்பட்டி அழகப்ப தேவரின் மகளின் நல் வாழ்விற்காக, அப்பெண்ணிற்குத் திருமணம் நடைபெறும் போது, நகை நட்டுகளைச் செய்து கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அழகப்பத் தேவரிடம் "உம் மகளின் வாழ்க்கைக்கும் நான் பொறுப்பு" என்று கூறினார்.ஆனால் அழகப்பத் தேவரோ, மருதப்பரே தன் வாயில் சொன்னதால், ‘உன் மகளுக்கு நானே வாழ்க்கை கொடுக்கிறேன்’ (அவளைத் திருமணம் செய்து கொண்டு) என்று வேறுவிதமாகப் பொருள் புரிந்து கொள்கிறார்.

குறுந்தன் மொழி என்ற ஊரைச் சேர்ந்த மீனாட்சி சுந்தர நாச்சியார் என்ற பெண்ணைப் பார்த்ததில் இருந்து அவளின் அழகில் மயங்கி, அவளையே ஒரு தலையாகக் காதலிக்கின்றார் மருதப்பர்.

சாதாரண குடிமக்களில் இருந்து தனக்கான வாழ்க்கைத் துணையை ஜமீன்தார்கள் தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் மருதப்பர் குறுந்தன் மொழியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரி என்ற பெண்ணைப் பல எதிர்ப்புகளுக்கு இடையே 1864-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி, வீரகேரளம் புதூரில் உள்ள தனது அரண்மனையில் வைத்து மணமுடித்துக் கொள்கிறார்.

மணவிழாவில் குருக்கள் பட்டி அழகப்பத் தேவர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. "தன் உயிர் காத்த நண்பர் தன் திருமணவிழாவில் கலந்துகொள்ள வில்லையே" என்று நினைத்து மருதப்பர் மனவருத்தம் கொள்கிறார். அழகப்பத் தேவரை அழைத்து வர ஆள் அனுப்புகிறார்.அப்போதும் அழகப்பத் தேவர் வரவில்லை. எனவே மணக்கோலத்தில் இருந்த மருதப்பரே தன் நண்பரைத் தேடி குருக்கள் பட்டிக்குச் செல்கிறார்.

மணக்கோலத்தோடு, தன் வீடு தேடி வந்த மன்னர் மருதப்பரை, முகம்வாடிய நிலையில் அழகப்பத் தேவர் வரவேற்கிறார். மருதப்பர்,அழகப்பரிடம், நான் முறைப்படி என் திருமணத்திற்கு ஓலை அனுப்பினேன். நீர் என் திருமணத்திற்கு வரவில்லை. பிறகு ஆள் அனுப்பி உங்களை அழைத்து வரச் சொன்னேன் அப்போதும் தாங்கள் தக்க பதிலும் சொல்லி அனுப்பவில்லை. நேரிலும் வரவில்லை. "என் மேல் தாங்களுக்கு அப்படி என்ன கோபம்? என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் நேரில் வந்தேன்" என்றார்.

அழகப்பத் தேவர், "தாங்களின் உயிரை நாகப்பாம்பிடம் இருந்து காத்த அன்று தாங்கள் ’உன் மகளின் வாழ்க்கைக்கு நான் பொறுப்பு’ என்று சொன்னீர்கள். எனவே, தாங்கள் என் மகளைத்தான் திருமணம் செய்து கொள்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் இன்று வேறு ஒரு பெண்ணுக்கு மாலையிட்டு, தாங்கள் ‘வாக்கு’ மீறி விட்டீர்கள். எனவேதான் நான் உங்கள் திருமணத்திற்கு வரவில்லை" என்றார்.


"தான் சொன்னதைத் தன் நண்பன் தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்டுள்ளானே." என்று மன வருத்தப்பட்ட மருதப்பர், கொடுத்த வாக்கை மீறக்கூடாது என்ற காரணத்திற்காக, அப்போதே அவ்வூர் மக்களின் முன்னிலையில், ஒரு மாலையை வாங்கி, அன்ன பூரணம் என்ற சிறுமிக்குச் சூட்டி, "இவளும் இனி என் மனைவிதான் நான் என் நண்பனுக்குக் கொடுத்த வாக்கை அவரின் விருப்பப்படி நிறைவேற்றி விட்டேன்" என்று அறிவித்தார். அப்போது அழகப்பத் தேவரின் மகளான அன்ன பூரணிக்கு சுமார் பத்து வயதுதான் இருக்கும்.

சிறுமி அன்ன பூரணிக்கு எல்லாமே விளையாட்டாகத் தெரிந்தது. குருக்கள் பட்டி அழகப்பத்தேவர் ஜமீன் சொத்துக்களுக்கு வாரிசாக வேண்டும் என்ற உள் நோக்கத்திற்காகத்தான் தன்மகளையே பகடைக் காயாக வைத்து விளையாடுகிறார் என்ற விபரம் யாருக்கும் தெரியவில்லை.

அன்னபூரணி என்ற சிறுமிக்கு ரெண்டாந்தாரமாக மாலையிட்டுள்ளார் மன்னர் மருதப்பர் என்ற சேதி(செய்தி) காற்றில் பரவியதும், மருதப்பரின் தாயார் பெரிய நாயகி அம்மாள், தன் மகனான மருதப்பரை அழைத்துக் கண்டித்தார்.


"கொடுத்தவாக்கைக் காப்பாற்றத்தான் அச்சிறுமிக்கு மாலை சூடினேன்" என்று விளக்கம் சொல்லியும், மருதப்பரின் தாயார் அச்சமாதானத்தை ஏற்றுக் கொள்ளாமல், தான் பிறந்த ஊரான சொக்கம்பட்டிக்குச் (சொக்கம்பட்டி ஜமீன்தாரின் அரண்மனைக்கு) சென்று விட்டார்.

மீனாட்சி சுந்தரி அம்மாளின் வீட்டாரும், மருதப்பர் மறுமணம் செய்து கொண்டதை விரும்பவில்லை. எனவே குருக்கள்பட்டி அழகப்பத்தேவருக்கும் அவரின் மகளான அன்னபூரணிக்கும் சொக்கம்பட்டி ஜமீன்தாரின் வகையறாக்காரர்களும், குறுந்தன் மொழியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தர நாச்சியாரின் வகையறாக்காரர்களும் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தார்கள்.

அன்னபூரணம் என்ற சிறுமியின் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை வந்தது. எனவே, அழகப்பத் தேவர் தன் மகளை அழைத்துக்கொண்டு வீர கேரளம் புதூர் அரண்மனைக்கு வந்து, மன்னர் மருதப்பரிடம், "உமது மனைவியும், என் மகளுமான அன்னபூரணத்திற்கு,உமது மூத்தமனைவியின் குடும்பத்தினராலும், உமது தாய்மாமனா சொக்கம்பட்டி ஜமீன்தாராலும் எந்த நேரமும் தீங்கு நேரலாம். எனவே, நீர் உமது ரெண்டாவது மனைவியான அன்னபூரணத்திற்கு அரண்மனைக்கு அருகிலேயே ஒரு வீட்டை ஏற்பாடுசெய்து கொடுத்து, அவளுக்குத் தேவையான வசதி வாய்ப்புகளையும் செய்து கொடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, மருதப்பரும், வீரகேரளம் புதூரில் உள்ள தன் அரண்மனைக்கு அருகிலுள்ள லட்சுமி விலாஸ் என்ற மாளிகை ஒன்றை ஒதுக்கிக் கொடுத்து. அங்கு அழகப்பத் தேவரையும் அவரின் மகளான அன்னபூரணத்தையும் தங்கச் சொன்னார்.

பருவ வயதை அடையாத, உலக நடப்புத் தெரியாத அன்னபூரணி என்ற சிறுமிக்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது கூடப் புரியவில்லை.அவள் விளையாட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட்டுப் பராக்கில் அலைந்தாள்.

லட்சுமி விலாசுக்கு அன்னபூரணி குடி வந்ததால், மீனாட்சி சுந்தர நாச்சியார் கோபம் கொண்டார். ஏற்கனவே மருதப்பரின் தாயார் பெரிய நாயாகி அம்மாள் கோபித்துக் கொண்டு சொக்கம்பட்டி சென்றவர் திரும்பி வரவேயில்லை.

மருதப்பர் "வாக்கு’க் கொடுத்து இப்படி ஒரு வேண்டாத சிக்கலில் மாட்டிக் கொண்டோமே" என்று நினைத்து மனம் வருந்தினார்.

கலை, இலக்கிய ஈடுபாடு, வேட்டைக்குச் செல்வது, அரச பரிபாலனம் என்று நீரோட்டமாகப் போய்க் கொண்டிருந்த மருதப்ப பாண்டியரின் வாழ்வை அழகப்பத் தேவரின் பணத்தாசையும், பதவி மோகமும் நிலைகுலையச் செய்தது.

நாளாக, நாளாக அழகப்பத் தேவர் அரண்மனையில் தன் செல்வாக்கை நிலைநாட்ட முயன்றார். தம் மகளுக்கும் ஜமீனில் சகல உரிமையும் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனால் மருதப்பருக்கும் அழகப்பத் தேவருக்கும் இடையே மனத் தாங்கல் ஏற்பட்டது.

அழகப்பத்தேவரின் சூழ்ச்சியால்தான், மனைவியையும், தாயையும் பிரிந்து வாழ்கிறோம் என்பதை உணர்ந்து கொண்ட மருதப்பர், அழகப்பரின் உறவை எப்படியாவது முறிக்க வேண்டும் என்று யோசித்து, தன் இரண்டாவது மனைவியான சிறுமி அன்னபூரணத்தை விவாகரத்து செய்து ஓலை அனுப்பினார். அப்போதும் அன்னபூரணி என்ற சிறுமி வயசுக்கு வரவே இல்லை.

கழனியூரன்


       கழனியூரன் என்ற எம்.எஸ்.அப்துல் காதர் 1954இல் திரு நெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் என்ற கிராமத்தில் பிறந்தார். துவக்கப்பள்ளி ஆசிரியராக பணி புரிந்து வரும் இவர், நாட்டுப்புறவியலில் இளம் முனைவர் பட்டம் பெற்று தற்போது முனைவர் பட்ட ஆய்வை மேற் கொண்டுள்ளார். கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணனுடன் இணைந்து ஏராளமான நாட்டுப்புறக் கதைகளை இவர் தொகுத்திருக்கிறார். நாட்டுப்புறவியல் சார்ந்து இதுவரை 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கதை சொல்லி இதழையும் நடத்தி வருகிறார்.


கழனியூரன் படைப்புகள்

சமூக விழிப்புணர்வு

1.தொலைந்த கிராமியத் தடங்கள்: சூத்ராள் சொன்ன ராமாயணம்
2.தொலைந்த கிராமியத் தடங்கள் இது விளையாட்டு மட்டுமல்ல
3.மாடுகளின் சிறைச்சாலை
4.கண்ணே கண்ணுறங்கு
5.தி.க.சி.க்கு வல்லிக்கண்ணன் எழுதிய கடிதம்
6.அழிப்பாங் கதைகள்
7.பழங்கணக்கு
8.அவளும் இவளும்
9.கிராமிய குடும்பம்
10.பெயர் மாற்றம்
11.தொலைந்த கிராமியத் தடங்கள் அரைக்காசு

கதைசொல்லி

12.பொறுப்பாசிரியரின் கடிதம்
13.சேலை
14.மீண்டும் சங்குத் தேவன்

சமூகம் - இலக்கியம் - சிறுகதைகள்

15.இப்படியாகத்தான் இருக்கிறது எதார்த்தம்
16.சேலை

ஆசிரியர் பெயர்: கழனியூரன் (Kalaniyoran)
மின்-அஞ்சல் : kazhaneeyuran@yahoo.co.in
தொடர்பு எண் : 919443670820
முகவரி : கழுநீர்க்குளம் அஞ்சல்
திருநெல்வேலி - 627861
இந்தியா