Monday, 22 July 2013

தாத்தா சொல்லும் கதைகள் 5

கர்வம் தவிர்

மலை முகடுகளில் மேகம் தவழ்ந்து விளையாடியது. மாலையில் இதமான குளிர்ந்த காற்று வீசியது. குழந்தைகள் கதை கேட்பதற்காக காத்திருந்தார்கள். குழந்தைகளைப் பார்த்து கைகளை அசைத்தபடியே வந்த கண்ணாடித் தாத்தா வழக்கமாக அமரும் பளபளப்பான கல்லின் மேல் உட்கார்ந்தார். தாத்தாவின் முன்னால் உட்கார்ந்த குழந்தைகள், ``கதை சொல்லுங்க தாத்தா`` என்று ஒரே குரலில் கூறினார்கள். தாத்தா தொண்டையைச் செருமி தன் குரலைச் சரி செய்துக் கொண்டு கதை சொல்ல ஆரம்பித்தார்.

`` ஒரு காட்டில் எல்லாவிதமான மிருகங்களும் வாழ்ந்தன. சிங்கம், புலி, கரடி போன்ற வலிமை மிக்க மிருகங்கள் மான், முயல், நரி போன்ற மிருகங்களை வேட்டையாடி அவற்றைக் கொன்று தின்று வாழ்ந்து வந்தன. ஒரே காட்டில் வாழ்ந்ததால், மாமிசம் உண்ணும் மிருகங்களுக்கு பயந்து தாவரங்களை உண்ணும் மிருகங்கள் வாழ்ந்தன.

வேட்டையாடும் மிருகங்களிடம் இருந்து மற்ற மிருகங்கள் தப்பித்து உயிர் வாழ படாத பாடுபட்டன. எனவே நரி மற்ற மிருகங்களைப் பார்த்து, ``சிங்கம், புலி போன்ற மிருகங்களிடமிருந்து தப்பிக்க நாமெல்லாம் ஒன்று கூடி சிந்தித்து ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்`` என்று கூறியது. நரியின் யோசனையை முயல், ஆமை போன்ற மிருகங்கள் வரவேற்றன. ``நாம் அனைவரும் இந்தக் காட்டில் உள்ள மழைக்காத்தான் என்ற பாறையின் அடியிலுள்ள குகையில் வரும் வெள்ளிக்கிழமை காலையில் ஒன்று கூடி பேசி ஒரு முடிவெடுப்போம்`` என்று நரி கூறியது.

நரியின் யோசனையை மற்ற மிருகங்களிடம் சென்று தகவலாகச் சொல்லும் பொறுப்பை ஆமை கேட்டது. நரி ஆமையைப் பார்த்து ``நீ மெதுவாக நடந்து சென்று ஒவ்வொரு மிருகத்தையும் பார்த்து தகவல் சொல்வதற்கு ஒரு மாத காலம் ஆகும் எனவே அந்தப் பொறுப்பை முயலிடம் ஒப்படைப்போம்`` என்றது நரி. முயலும் மகிழ்ச்சியுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. முயல் ஒவ்வொரு மிருகத்தையும் தனித்தனியே சந்தித்து செய்தியைக் கூறும் போது ஒவ்வொரு மிருகமும் கூட்டத்திற்கு நான்தான் தலைமை வகிப்பேன் என்று முயலிடம் கூறின. முயல், ``முதலில் நாம் ஒரு இடத்தில் ஒன்று கூடுவோம். அதன்பிறகு நம்மில் யார் தலைவராக இருப்பது என்பது பற்றி தீர்மானிப்போம்`` என்று சாமர்த்தியமாக மற்ற மிருகங்களிடம் கூறியது.

யானை முதல் எலி வரை உள்ள மிருகங்கள் அனைத்திற்கும் முயல் தவறாமல் அழைப்பு விடுத்தது. குறிப்பிட்ட நாளில், மழைக்காத்தான் பாறையின் அடியில் உள்ள குகையில் சிங்கம், புலி தவிர்த்த மிருகங்கள் எல்லாம் ஒன்று கூடின. ஆனால் அந்தக் கூட்டத்திற்கு மான் மட்டும் வரவில்லை. யானை நரியைப் பார்த்து, ``நாம் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி இருக்கிறோம் மான் மட்டும் ஏன் வரவில்லை`` என்று கேட்டது. நரி, மான் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. நம்மில் யாராவது ஒருவர் போய் மானை அழைத்து வருவோம் என்றது.

யானை, பூனையைப் பார்த்து நீதான் பார்க்க புலி மாதிரி இருக்கிறாய், நீ வேகமாகச் சென்று மானை அழைத்து வா என்றது. உருவத்தில் மிகப் பெரிய மிருகமான யானை சொன்னதைக் கேட்ட பூனையும் மறு பேச்சு பேசாமல் மானைத் தேடி ஓடியது. காட்டில் பல இடங்களில் தேடியும் மானைக் கண்டு பிடிக்க முடியவில்லை. கடைசியில் ஒரு குளத்தில் நீர் அருந்திக் கொண்டு இருந்த மானைப் பார்த்து, ``மிருகங்களின் கூட்டத்திற்கு நீ மட்டும் ஏன் வரவில்லை? யானை அண்ணா உன்னைக் கூட்டிக் கொண்டு வரும்படி என்னை அனுப்பி வைத்தார் என்று பவ்வியமாகக் கூறியது.

மான் கர்வத்துடன், இந்தக் காட்டில் வாழும் மிருகங்களிலேயே நான்தான் மிகவும் அழகாக இருக்கிறேன். நான் துள்ளி துள்ளி ஓடும் அழகை நீ பார்த்திருக்கிறாயா? என் கொம்புகளைப் பார் எவ்வளவு அழகாக இருக்கின்றன. இந்தக் காட்டில் வாழும் எந்த மிருகமும் என்னைப் போல் அழகாக இல்லை. எனக்கு துன்பம் வரும்போது என்னை நான் காப்பாற்றிக் கொள்வேன். எனக்கு யாருடைய உதவியும் ஆலோசனையும் வேண்டாம். நரி கூட்டி இருக்கும் அந்தக் கூட்டத்திற்கு நான் வரமாட்டேன். நரி தந்திரமான மிருகம். அது நம்மை எல்லாம் ஒரே இடத்தில் கூட்டி ஒரே நேரத்தில் கொன்றுவிட ஏதோ சதித் திட்டம் தீட்டி இந்தக் கூட்டத்தைக் கூட்டுகிறது. நரி இருக்கும் இடத்திற்கு நான் வரமாட்டேன். யானை உருவத்தில்தான் பெரிய மிருகமாக இருக்கிறது. அதற்கு மூளை மிகச் சிறியது. நரியின் தந்திரம் தெரியாமல் யானையும் அங்கு சென்றிருக்கிறது. நான் நரியின் முகத்தில் என்றும் விழிக்கவே மாட்டேன். எனவே உங்கள் கூட்டத்திற்கு வர எனக்கு இஷ்டம் இல்லை. யானையிடம் சென்று என் முடிவைக் கூறிவிடு என்று பூனையைப் பார்த்து மான் கர்வத்துடன் கூறியது.

பூனை மிருகங்களின் சபைக்கு சென்று மான் கூறியதை அப்படியே சொன்னது. அதைக் கேட்ட யானை, ``மானிற்கு தான் அழகாக இருக்கிறோம் என்ற ஆணவம் இருக்கிறது. அழகால் ஆபத்து வரும் என்ற உண்மையை ஒருநாள் மான் உணர்ந்து கொள்ளும் அதன்பின் அது நம்மைத் தேடி வரும். அதுவரை நாம் மானை விட்டுவிடுவோம்`` என்று கூறியது. யானையின் கூற்றை மற்ற மிருகங்களும் ஏற்றுக் கொண்டன. திட்டமிட்டபடி மிருகங்கள் கூடிப் பேசின. அன்றைய கூட்டத்தில் யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து பேசப்பட்டது.

உருவத்தில் பெரியதாக உள்ள யானையே தலைவராக இருக்கவேண்டும் என்று மற்ற மிருகங்கள் ஏகோபித்த குரலில் கூறின. யானையும் தலைவராக இருக்க சம்மதித்தது. நரியை செயலராக இருக்க யானை பரிந்துரை செய்தது. மற்ற மிருகங்களும் யானையின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டன. அப்போது தூரத்தில் சிங்கம் ஒன்று உருமியது. சிங்கத்தின் உருமல் சத்தம் கேட்டு, கூடியிருந்த அனைத்து மிருகங்களும், ஆளுக்கு ஒரு திசையில் ஓடி காட்டில் ஒளிந்து கொண்டன.

சிங்கத்தின் உருமல் சத்தம் கேட்டு மானும் ஒரு புதருக்குள் ஓடியது. மான் வேகமாக ஓடியபோது, மானின் அழகிய கொம்பு ஒரு முட்புதருக்குள் சிக்கிக் கொண்டது. எனவே, மானால் அங்கிருந்து நகர முடியவில்லை. மானின் கொம்பு முட்புதருக்குள் சிக்கி இருப்பதைப் பார்த்த நரி, யானையிடம் சென்று கூறியது. உடனே யானை வேகமாக அங்கு சென்று, முட்செடியை வேரோடு தன் துதிக்கையால் வளைத்துப் பிடித்து தூக்கியது. நரி, முட்செடியின் கிளைகளில் இருந்து மானின் கொம்பை விடுவித்தது. எனவே, மான் முட்புதரின் பிடியில் இருந்து விடுபட்டது.

அழகான கொம்பு இருப்பதால், துள்ளி துள்ளி ஓடுவதால் கர்வம் கொண்டு இருந்த மான் அன்று தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டது. தக்க நேரத்தில் வந்து தன்னை காப்பாற்றிய யானைக்கும், நரிக்கும் மான் நன்றி கூறியது. `இனிமேல் நான் அழகாக இருக்கிறேன் என்று கர்வம் கொள்ள மாட்டேன் என்று கர்வம் கொள்ள மாட்டேன் நானும் உங்களில் ஒருவனாக அடுத்து நடக்க இருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன்` என்று மான் கூறியது. என்று கதையைக் கூறி முடித்த தாத்தா, நாம் பெற்றிருக்கிற தனித்திறமையால், தனிச்சிறப்பால், நமக்கு தன்னம்பிக்கை வர வேண்டுமே தவிர, `தான்` என்ற ஆணவமோ, கர்வமோ வந்துவிடக்கூடாது என்ற நல்ல கருத்தை இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது`` என்றார்

தாத்தா சொல்லும் கதைகள் 4

`மூர்த்தியும் கீர்த்தியும்..!

 தாத்தா இன்றைக்கு பறவைகளைப் பற்றிய கதை சொல்லுங்க`` என்று குழந்தைகள் கூறின. கண்ணாடித் தாத்தா தன் கதை நினைவுப் பெட்டகத்தில் இருந்து பறவைகளின் கதையைத் தேர்ந்தெடுத்துச் சொல்ல ஆரம்பித்தார்.

கதை கேட்க கூடி இருந்த குழந்தைகளில் மூர்த்தி என்ற பையன் மிகவும் குள்ளமாக இருந்தான். குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப இருக்க வேண்டிய உயரத்தில் இருந்து மூர்த்தி என்ற பையனின் உயரம் குறைவாக இருந்தது. குள்ளமாக இருக்கும் மூர்த்தி கெட்டிக்காரப் பையனாகவும், படுசுட்டியாகவும் இருந்தான். எனவே, கண்ணாடித் தாத்தா மூர்த்தியைப் பார்க்கும் போதெல்லாம், அவனை உற்சாகப் படுத்துவதற்காக, `மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது` என்று சொல்வார். இன்றைக்கு மூர்த்திக்காகவே இந்தக் கதையைச் சொல்கிறேன் என்று குழந்தைகளைப் பார்த்துக் கூறிய தாத்தா, கதை சொல்ல ஆரம்பித்தார். குழந்தைகளோடு மூர்த்தியும் சேர்ந்து ``ம்... கதை சொல்லுங்க`` என்று குரல் கொடுத்தான்.

``ஒரு பெரிய காடு... அந்தக் காட்டில் உள்ள மரங்களில் எல்லாவிதமான பறவைகளும் கூடுகட்டி வாழ்ந்து கொண்டிருந்தன. ஒருநாள் கழுகு பறவைகளை எல்லாம் ஒரே இடத்தில் கூடும்படி உத்தரவிட்டது. கழுகாரின் ஆணைப்படி எல்லாப் பறவைகளும் காட்டில் உள்ள பெரிய ஆலமரத்தின் அடியில் கூடின. ஆலமரத்தின் பெரிய கிளை ஒன்றின் மேல் அமர்ந்து கொண்டு கழுகு கூட்டத்திற்கு வந்திருக்கும். மற்றப் பறவைகளை நோட்டமிட்டது. குருவி, கிளி, மைனா, காகம், செம்போத்து, மரங்கொத்தி, குயில், கொக்கு, நாரை, பருந்து என்று எல்லாவிதமான பறவைகளும் கூட்டத்திற்கு வந்திருந்தன.
மற்ற பறவைகளைப் பார்த்து கழுகு, ``பறவைகளா... இன்றைக்கு உங்களுக்கு நான் ஒரு போட்டி வைக்கப் போகிறேன். அந்தப் போட்டியில் ஜெயிக்கிறவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன். அதோடு `பறவை வீரன்` என்ற பட்டமும் தருவேன்`` என்றது.

``போட்டி நடத்துவது சரி கழுகாரே நீங்களும் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறீரா?`` என்று கேட்டது கிளி. கழுகு, ``நான் தானே போட்டியை நடத்துகிறேன். எனவே போட்டியில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை. ஆனால் நான்தான் நடுவராக இருந்து போட்டியின் முடிவை அறிவிக்கப் போகிறேன்...`` என்றது.

``சரி போட்டியை எப்போது எங்கு நடத்துவீர்கள்?`` என்று கேட்டது மைனா. நாளை காலை பத்து மணிக்கு போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பறவைகள் எல்லாம் இதே இடத்திற்கு வந்து விடவேண்டும் என்று கூறியது கழுகு.

மரங்கொத்தி, ``பருந்துதான் மிக உயரமாக வானத்தில் பறந்து பரிசைத் தட்டிச் செல்லப் போகிறது இதற்கு போட்டி வேறு தேவையா?`` என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டது. பறவைகளின் தலைவனான கழுகு, ``சரி கூட்டம் கலையலாம், நாளை காலையில் அனைவரும் மறக்காமல் போட்டியில் கலந்துகொள்ள அல்லது நடக்க இருக்கும் போட்டியை வேடிக்கை பார்க்க மறக்காமல் இதே இடத்திற்கு வந்துவிடுங்கள்`` என்று மீண்டும் கூறிவிட்டு கழுகு தன் நீளமான சிறகுகளை விரித்து வானத்தில் `கிவ்`வென்று பறக்கத் தொடங்கியது.
அன்று இரவெல்லாம் பறவைகள் ``நாளை நடக்க இருக்கும் போட்டியில் யார் ஜெயிக்கப் போகிறார்களோ?`` என்று சிந்தித்தபடியே தூங்கின. மறுநாள் காலையில் வழக்கத்தைவிட சற்று நேரத்திற்கு முன்பாகவே தூங்கி எழுந்த பறவைகள் அவசர அவசரமாக காலையில் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு காலை ஒன்பது மணிமுதலே அந்த ஆலமரத்தின் அடியில் வந்து அமரத் தொடங்கின. எல்லாப் பறவைகளும் ஓரே இடத்தில் கூடி குரல் எழுப்பியதால் ஆலமரத்தின் அடியில் இருந்து வினோதமான குரலோசை காற்றில் மிதந்து சென்றது.

சரியாக பத்துமணி ஆவதற்கு பத்து நிமிடம் இருக்கும்போது, போட்டியை நடத்தும் கழுகு வந்து பெரிய மரக்கிளையில் அமர்ந்தது. கழுகார் போட்டியின் நிபந்தனைகளை மற்ற பறவைகளுக்கு அறிவித்தார். சரியாக பத்துமணிக்கு நான் வானத்தில் பறந்து வட்டமிட்டபடி, ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்வேன். `மூன்று` என்று நான் சொன்னதும் போட்டி ஆரம்பமாகும். சரியாக பத்து நிமிட நேரம் மட்டும் ஒரே சமயத்தில் வானத்தில் எல்லாப் பறவைகளும் பறக்க வேண்டும். நான், வானத்தில் உயரே, உயரே பறந்து போட்டியைப் பார்வை இடுவேன். பத்து நிமிட நேரம் ஆனதும், நான் காலில் கவ்விக் கொண்டு செல்லும் ஒரு `பூ` கொடியை கீழே போடுவேன். உடனே எல்லாப் பறவைகளும் வானத்தில் பறப்பதை நிறுத்திவிட்டு இந்த ஆலமரத்தின் கிளையில் வந்து அமரவேண்டும் என்றது.

போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்த மற்றப் பறவைகள், கழுகாரின் நிபந்தனைகளைக் கேட்டு சரி என்றன. பத்துமணி ஆவதற்கு, பத்திநிமிடம் இருக்கும்போதே, கழுகு தன் கால்களுக்கு இடையில், காட்டில் கிடந்த ஒரு முல்லைக் கொடியை பிடித்துக் கொண்டு வானத்தில் பறந்து வட்டமிட்டது. போட்டியில் கலந்து கொள்ள சிட்டுக்குருவியும் வந்திருந்தது. மயில் சிட்டுக்குருவியைப் பார்த்து, `உயரே, உயரே பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாக முடியுமா? சிறிய பறவையான உன்னால் எப்படி இந்தப் போட்டியில் ஜெயிக்கமுடியும்?` என்று கேட்டது.

மயிலைப் பார்த்து சிட்டுக்குருவி இவ்வளவு பெரிய உடம்பை வைத்துக் கொண்டு, உன்னால் எப்படி மிக உயரமாகப் பறக்க முடியும்? பறவைகளுக்கு இடையில் அழகான பறவை எது? என்று ஒரு போட்டி வைத்தால் நீ உன் நீளமான தோகையை வைத்துக் கொண்டு அதை விரித்து ஆடி, போட்டியில் ஜெயிக்கலாம். இது உயரமாகப் பறக்கும் போட்டி நீயே போட்டியில் கலந்து கொள்ளும்போது, நான் ஏன் மிகச் சிறிய உடம்பை வைத்துக் கொண்டு இந்த போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது? என்று எதிர்க் கேள்வி கேட்டது.

வானத்தில் வட்டமிட்டபடி பறந்து கொண்டு இருந்த கழுகார், தன் கால்களில் பிடித்திருந்த பூங்கொடியை அசைத்து, `ஒன்று, இரண்டு, மூன்று` என்று உரக்கக் கூறியது. உடனே பறவை இனங்கள் எல்லாம் வானத்தில் பறக்கத் தொடங்கின. ஒரே நேரத்தில் பல்வேறு வடிவங்களையும் கொண்ட வித, விதமான பறவைகள் வானத்தில் பறக்கும் அந்த அதிசயக் காட்சியை காட்டில் வாழும் மிருகங்கள் எல்லாம் பார்த்து பரவசப் பட்டன. கழுகார் வானத்தில் மிக உயரமாகப் பறந்து வட்டமிட்டபடி பறவைகளுக்கு இடையே நடைபெறும் அந்தப் போட்டியைக் கண்காணித்தார்.

சரியாக பத்துநிமிடம் ஆனதும் கழுகார் தன் கால்களுக்கு இடையில் கவ்விப் பிடித்திருந்த பூங்கொடியை கீழே நழுவ விட்டார். வானத்தில் உயரமாகப் பறந்து கொண்டிருந்த அனைத்துப் பறவைகளும் தரை இறங்கின. ஆலமரத்தடியில் கூடிய பறவைகளைப் பார்த்து கழுகார், இப்ப நான் போட்டியின் முடிவை அறிவிக்கப் போகிறேன் என்றது. போட்டியின் முடிவைத் தெரிந்து கொள்ள அனைத்துப் பறவைகளும் ஆவலாக இருந்தன.
கழுகார், ஆலமரத்தின் உயரமான கிளை ஒன்றில் அமர்ந்து கொண்டு இன்று நடைபெற்ற போட்டியில் மிக உயரமாக வானத்தில் பறந்த ``பறவை வீரன்`` என்ற பட்டத்தை சிட்டுக் குருவிக்கு அளிக்கிறேன் என்றது. கழுகாரின் தீர்ப்பைக் கேட்டதும் பருந்திற்கு கோவம் வந்துவிட்டது. பருந்து கழுகைப் பார்த்து, கழுகாரே இன்று நடைபெற்ற போட்டியில் நான்தான் வானத்தில் மிக உயரமாகப் பறந்தேன். ஆனால் இன்று நடைபெற்ற போட்டியில் கலந்து கொள்ளாத சிட்டுக்குருவி ஜெயித்ததாக அறிவிப்பது என்ன நியாயம்? என்று கேட்டது.

கழுகார், சிரித்தபடியே! அட முட்டாள் பருந்தே, சிட்டுக்குருவி போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்று உன்னிடம் யார் கூறியது. சிட்டு குருவி உன் முதுகின் மேல் உட்கார்ந்திருந்தது. அதைக்கூட கவனிக்காமல் நீ வானத்தில் சிட்டுக்குருவியைச் சுமந்தபடி வானத்தில் பறந்தாய். என்னுடைய கணக்குப்படி, உன்னைவிட உயரமான உயரத்தில் பறந்தது சிட்டுக் குருவிதான் என்று விளக்கம் கூறினார், நடுவரான கழுகார்.
மயிலைப் பார்த்து அர்த்த புஷ்டியுடன் கண்ணடித்தது சிட்டுக்குருவி. கழுகு போட்டியில் வெற்றி பெற்ற சிட்டுக்குருவிக்கு ஒரு முத்து மாலையை பரிசாக அதன் கழுத்தில் போட்டது. பருந்தைத் தவிர்த்து மற்றப் பறவைகள் எல்லாம் தன் சிறகுகளை அசைத்து , தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தன. இதுதான் பறவைகள் நடத்திய போட்டியில் சிட்டுக்குருவி, வெற்றி பெற்ற கதை என்று கதையைக் கூறிய கண்ணாடித் தாத்தா, ``குழந்தைகளா.. `உருவுகண்டு எள்ளாமை வேண்டும்` என்று வள்ளுவர் கூறியுள்ளார். ``கடுகு சிறுத்தாலும் காரம் போகாது`` என்பதும், சிறிய உளிதான் மலையைத் தகர்க்கும் என்பதும் பழமொழிகள். எனவே, எளியார்களாலும், மெலிந்தவர்களாலும், சிறியவர்களாலும் எதையும் சாதிக்க முடியாது என்று நினைக்கக் கூடாது. அவர்களும் நம்மைப்போல் ஆற்றல் உள்ளவர்கள்தான் என்ற கருத்தை வலியுறுத்தத் தான் சிட்டுக்குருவியின் கதையை உங்களுக்குக் கூறினேன் என்று கதை கூறும் நீதிக் கருத்தையும் கூறிமுடித்தார்`` தாத்தா.

தாத்தா சொல்லும் கதைகள் 3

புத்தியுள்ளவன் பலவான்..!


கண்ணாடித் தாத்தா கதை கேட்கக் கூடி இருந்த பிள்ளைகளைப் பார்த்து, ``இன்றைக்கு நான் உங்களுக்கு சொல்லப் போகிற கதை மிகவும் பழமையானது. நான் உங்களைப் போல சின்னப் பிள்ளையாக இருந்தபோது என் தாத்தா எனக்குச் சொன்ன கதை இது என்ற பீடிகையுடன் கதையை ஆரம்பித்தார்.

``அப்படியா... அப்ப சொல்லுங்க`` என்றார்கள் குழந்தைகள் ஆர்வத்துடன்... தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்.

மலையடிவாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு குளம் இருந்தது. மலையில் பெய்கிற மழையால் பெருக்கெடுத்து வருகிற வெள்ளம் கால்வாய் வழியாக அந்த கிராமத்தைக் கடந்து சென்றது. கால்வாயில் வருகிற நீரை அக்கிராமத்து மக்கள் ஊரை அடுத்த பள்ளத்தாக்கில் குளம் வெட்டி, அதில் தேக்கி வைத்து, அக்குளத்து நீரை வயலுக்குப் பாய்ச்சி மகசூல் செய்து வந்தார்கள்.

குளத்தில் நண்டு, தவளை மற்றும் பல்வகை மீன்கள் வாழ்ந்து வந்தன. கோடைக்காலம் வந்ததும் குளத்து நீரின் அளவு குறைந்தது. அந்தக் குளத்தில் ஒரு கொக்கு மேடான இடத்தில் நின்று கொண்டு தினமும் அந்தப் பக்கம் நீந்தி வரும் மீன்களைக் கொத்தித் தின்று வாழ்ந்து வந்தது. நாளாக, நாளாக குளத்தில் தண்ணீர் வற்றிக் கொண்டே இருந்தது. குளத்தில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றிவிட்டால், குளத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் குளத்தில் உள்ள மீன்களை எல்லாம் பிடித்து விற்று விடுவார்கள் என்பது கொக்குக்குத் தெரியும்.

இந்த குளத்து மீன் மிகவும் ருசியாக இருக்கும். குளம் முழுவதுமாக வற்றும் முன்பாக இந்தக் குளத்தில் உள்ள மீன்களை எல்லாம் பிடித்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தது கொக்கு. பேராசைபிடித்த கொக்கு குளத்தில் வாழும் மீன்களை எல்லாம் பிடித்துக் கொண்டு செல்ல ஒரு தந்திரம் செய்தது. குளத்தின் நடுவில் மேடான ஓர் இடம் இருந்தது. அதை மண்குதிர் என்று கிராமத்து மக்கள் சொல்வார்கள்.

குளத்தின் நடுவிலுள்ள மண்குதிரில் போய் நின்று கொண்ட கொக்கு அங்கு நீந்திவந்த கெண்டை மீனிடம், ``தம்பி நான் உனக்கு ஒரு செய்தியைச் சொல்கிறேன். அதை நீ, உன் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் போய் சொல்`` என்றது. கெண்டை மீன், ``அது என்ன செய்தி என்று ஆர்வத்துடன் கேட்டது. தம்பி, நான் குளத்தின் மேடான பகுதியில் மண் குதிரில் நின்று கொண்டிருந்தேன். நேற்று இந்தக் குளத்தின் கரையில், நான்கு பேர் நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள். அதை நான் கேட்டேன். அவர்கள், இன்னும் ஒரு வாரத்தில் இந்தக் குளத்தை அழிக்கப்போவதாகவும், குளத்தில் உள்ள மீன்களை எல்லாம் பிடித்து விற்பனை செய்யப் போவதாகவும் பேசிக் கொண்டார்கள் எனவே இன்னும் ஒருவாரத்தில் நீங்கள் எல்லாம் செத்து விடுவீர்கள். ஆனால் நான் நினைத்தால் உங்களை எல்லாம் காப்பாற்ற முடியும் என்று நயவஞ்சகமாக பேசியது.

கொக்கு சொன்னதைக் கேட்ட கெண்டை மீனுக்கு, தண்ணீருக்குள் இருக்கும்போதே வேர்த்துக் கொட்டியது. கொக்கைப் பார்த்து, கெண்டை மீன் அப்படியென்றால் நீங்கள் சொன்ன செய்தியை இந்தக் குளத்தில் உள்ள எல்லா மீன்களிடமும் நான் இப்போதே சொல்கிறேன்`` என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டது. கெண்டை மீன் நேரே, விரால் மீனிடம் சென்று கொக்கு சொன்ன செய்தியைக் கூறியது. அந்த குளத்தில் உள்ள மீன்களுக்கு எல்லாம் விரால்மீன்தான் தலைவராக இருந்தது.

விரால் மீன் உடனே அந்த குளத்தில் உள்ள மீன்களை எல்லாம் ஒரு இடத்தில் கூட்டி, அவைகளிடம், கொக்கு சொன்ன செய்தியைக் கூறியது. விரால் மீன் சொன்ன செய்தியை கேட்ட மற்ற எல்லா மீன்களும் பயந்து நடுங்கின. விரால் மீன் என்ன முடிவெடுக்கிறதோ... அதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம்`` என்று குளத்தில் வாழும் எல்லாவகை மீன்களும் ஒருமித்த குரலில் கூறின. விரால் மீன் நாளைக் காலையில் நான் கொக்கைச் சந்தித்துப் பேசுகிறேன்`` என்றது. மறுநாள் காலையில் வழக்கமாக நிற்கும் மண்குதிருக்கு கொக்கு பறந்து வந்தது.

கொக்கின் வருகைக்காகக் காத்திருந்த விரால் மீன், கொக்கைப் பார்த்து நீர் எப்படி எங்களை எல்லாம் காப்பாற்ற முடியும்?`` என்று கேட்டது. கொக்கு விரால் மீனிடம், நான் வானத்தில் பறந்து திரிகிறவன், எனக்கு இந்தப் பகுதியில் உள்ள குளங்களைப் பற்றி நன்கு தெரியும், நீங்கள் தற்போது வசிப்பது சின்னஞ்சிறிய குளம். அதிலும் தண்ணீர் வற்றிவிட்டது. ஆனால் சற்று தொலைவில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. அது கடல் போல விரிந்து பரந்து கிடக்கிறது. எந்தக் கோடைகாலமானாலும் அதில், `கெத்கெத்` என்று தண்ணீர் கிடக்கும். இந்தக் குளத்தில் உள்ள உங்களை நான் மெல்ல நோகாமல் பூப்போல என் அலகால் கொத்தி எடுத்துக் கொண்டு பறந்து சென்று அந்தக் குளத்தில் விட்டுவிடுவேன்.

பெரிய குளத்தில் நீங்கள் நன்றாக நீந்தி மகழலாம். உங்களுக்குத் தேவையான உணவும் தாராளமாக அந்தக் குளத்தில் கிடைக்கும். குளம் வற்றிவிடுமே என்ற கவலையும் வேண்டாம். நீங்கள் பல்லாண்டு காலம் மகிழ்ச்சியாக அந்தக் குளத்தில் வாழலாம். ஏற்கனவே அந்தக் குளத்தில் வாழும் மற்ற மீன்களுடன் நட்புக் கொண்டு சந்தோஷமாக வாழலாம் என்று நயவஞ்சமாகப் பேசியது. கொக்கின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் விரால் மீனின் காதில் தேனாகப் பாய்ந்தது. கொக்கின் வார்த்தைகளை விரால் மீன் முழுமையாக நம்பியது. எனவே, விரால் மீன் மற்ற மீன்களை எல்லாம் ஒரு இடத்தில் கூட்டி அவைகளிடம் கொக்கு சொன்னதை எல்லாம் கூறியது. விரால் மீனின் முடிவை ஏற்பதாக மற்ற மீன்களும் கூறின.

விரால் கொக்கை முழுமையாக நம்பியது. இன்றிலிருந்து நாம் ஒவ்வொரு வரும் வரிசையாக மண் குதிரின் அருகில் செல்வோம். கொக்கு நம்மைக் கொத்திக் கொண்டு சென்று பெரிய குளத்தில் விட்டுவிடும் என்று கூறியது. கொக்கும் விரால் மீனும் பேசிக் கொண்டதை எல்லாம், குளத்தின் கரையில் ஒரு பொந்தில் இருந்த நண்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அன்று காலை முதல், வரிசையாக வந்து நின்ற மீன்களை எல்லாம் கொக்கு மகிழ்ச்சியுடன் கொத்திக் கொண்டு சென்று, ஒரு காட்டின் நடுவில் இருந்த பாறையின் மேல் போட்டது. பாறையின் சூட்டில் போய் விழுந்த மீன்கள் துடிதுடித்துச் செத்தன். மீன்கள் ஒவ்வொன்றும் துடிதுடித்துச் சாவதைக் கண்டு கொக்கு சிரித்தது. மீன்கள் எல்லாம் செத்து பாறையின் சூட்டில் கருவாடான பிறகு, நம் தேவைக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் தின்று கொள்ளலாம் என்று நினைத்து மகிழ்ந்தது

மீன்களை கொக்கு கடத்திச் செல்வதைப் பார்த்த நண்டு மறுநாள் காலையில் கொக்கிடம் வந்து, ``அண்ணா என்னையும் அந்த பெரிய குளத்தில் கொண்டுபோய் சேர்த்துவிடு என்றது. கொக்கிற்கு ரொம்ப நாளாக, நண்டை உலர வைத்துச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனவே, இன்று உன்னை முதலில் கொண்டு பொய் அந்தக் குளத்தில் விடுகிறேன் என்றது.


நண்டு உருவத்தில் பெரியதாக இருந்தது. எனவே கொக்கால் அதன் அலகைக்கொண்டு நண்டைக் கொத்த முடியவில்லை. நண்டு, கொக்கிடம், `அண்ணே நீளமான உங்கள் கழுத்தை நான் என் கால்களால் கவ்விக் கொள்கிறேன். நீங்கள் என்னை அந்த பெரிய குளத்தில் கொண்டு போய்விட்டு விடுங்கள்` என்றது. நண்டின் யோசனையும் கொக்கிற்கு சரி என்று பட்டது. எனவே, கொக்கு குனிந்து கொடுத்தது. நண்டு கொக்கின் கழுத்தைப் பிடித்துக் கவ்விக்கொண்டு, `ம் போகலாம்` என்றது கொக்கு காட்டில் உள்ள பாறைக்கு பறந்து சென்றது.

பாறைக்கு மேலே பறந்து செல்லும்போது நண்டு கீழே பார்த்தது. பாறையில் மீன்கள் எல்லாம் செத்துக் கிடந்தன. அந்தக் காட்சியை கண்ட நண்டிற்கு, கொக்கு மீன்களுக்கு செய்த துரோகம் புரிந்தது. நம்பிக்கைத் துரோகம் செய்த இந்த கொக்கை இனியும் உயிரோடு விட்டால், நீர் வாழும் இனங்களை எல்லாம் கூண்டோடு அழித்துவிடும். எனவே, தாமதியாமல் இந்தக் கொக்கைக் கொன்றுவிட வேண்டும் என்று முடிவு செய்த நண்டு, கொக்கின் கழுத்தில் கவ்விப் பிடித்திருந்த தன் பிடியை இறுக்கியது.

நண்டே என்ன காரியம் செய்கிறாய் என் கழுத்தை இறுக்காதே. நான் செத்துவிடுவேன் என்றது கொக்கு. நண்டு, `நீ மீன்களை எல்லாம் நம்ப வைத்துக் கொன்றுவிட்டாய். எனவே, இப்போது நான் உனக்குத் தண்டனை கொடுக்கிறேன் என்று கூறிக் கொண்டே கொக்கின் கழுத்தை மேலும் மேலும் இறுக்கியது. எனவே, மூச்சுத் திணறிய கொக்கும் பாறையின் மேல் விழுந்து உயிரை விட்டடு. கொக்கு செத்தபிறகு, நண்டு, மெல்ல ஊர்ந்து பாறையைவிட்டு, நீர் பிடிப்பான இடத்தை நோக்கி நடந்து சென்று உயிர் பிழைத்தது` என்று கதையைக் கூறி முடித்த தாத்தா கதை கேட்டுக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்து, பறக்கும் வல்லமை கொண்ட பெரிய பறவையான கொக்கையே சிறிய நண்டு, தன் புத்தி கூர்மையால் கொன்று, இனி இறக்க இருந்த மீன்களின் உயிரைக் காப்பாற்றி விட்டது.

சிந்திக்கும் ஆற்றல் இருந்தால் எவ்வளவு பெரிய எதிரியையும் நம்மால் வெல்ல முடியும் என்ற நீதிக் கருத்தை இந்தக் கதை உணர்த்துகிறது.

மனிதர்களிலும், இந்தக் கொக்கைப்போல் நயவஞ்சகமாகப் பேசி சாமான்ய மக்களை ஏமாற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள நண்டைப் போல் தைரியமாக நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்றார்.

தாத்தா சொல்லும் கதைகள் 2

 கண்ணாடி தாத்தா தெருவில் நடந்து வருவதைப் பார்த்ததும் குழந்தைகள் உற்சாகமானார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளிக்கு விடுமுறை. அது மின்வெட்டு நேரம் என்பதால் குழந்தைகள் தொலைக்காட்சியில் அவர்களுக்கே உரிய அலைவரிசையைப் பார்க்க முடியவில்லை. வீடியோ கேம் விளையாடவும் வழியில்லை. கண்ணாடி தாத்தாவிடம் கதை கேட்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு அவரைப் பார்த்ததும் உற்சாகம் பிறந்தது. கண்ணாடி தாத்தாவுக்கு பஞ்சுப்பெட்டி போன்று தலைமுடி நரைத்துவிட்டது. அதிலேயும் தாத்தாவுக்கு ஏறுநெற்றி என்பதால் முன் நெற்றி வழுக்கையாகி இருந்தது. நெற்றியில் குங்குமமும் திருநீறும் துலங்க, தன் கண்ணாடியைக் கழற்றி தன் வேட்டியில் துடைத்து மீண்டும் மாட்டினார் கண்ணாடி தாத்தா. குழந்தைகளைப் பார்த்து நளினமாகக் கையசைத்தார். அவர்களும் தாத்தாவின் முன்னால் புல்வெளியில் வரிசையாக அமர, ஒருமுறை செருமி தன் குரலை சரிசெய்துகொண்டு கதை சொல்ல ஆரம்பித்தார் கண்ணாடி தாத்தா.

ஒரு ஊர்ல ஒரு அண்ணனும் தம்பியும் இருந்தாங்க. அவங்களுக்கு அந்த ஊர்ல சொந்தமா ஒரு ஏக்கர் நன்செய் நிலமும் ஒரு ஏக்கர் புன்செய் நிலமும் இருந்தது. நிலங்கள் எல்லாம் அவர்களின் தந்தையாரின் பராமரிப்பில் இருந்தது. ஒருநாள் தந்தையார் இறந்துவிட்டார். அவர் இறந்த பிறகு இருக்கிற சொத்தையும் வீட்டையும் அண்ணனும் தம்பியும் ஆளுக்குப் பாதியாக பங்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள்.
அண்ணன், மகா முரடன். தந்திரசாலி, பேராசை பிடித்தவன். உடல் பலமும் அதிகமுள்ளவன். அவனை எதிர்த்து யாரும் எதையும் பேசமுடியாது. ஏறுக்கு மாறு பேசுவான். ஆளும் ஆறடி உயரம் இருந்தான். உடம்பும் அதற்கேற்ற தன்மையுடன் இருந்தது. தம்பியோ, பாவம்... பைத்தியக்காரன் போல திரிவான். தம்பிக்கு மெலிந்த உடல்வாகு, அதற்கேற்ற உயரம்தான் இருந்தான். யாரிடமும் அதிகம் பேசமாட்டான். எல்லோரிடமும் அன்பு செலுத்துவான். அடுத்தவர்கள் பணத்துக்கு ஆசைப்பட மாட்டான். நேர்மையான சுபாவம் உள்ளவன்.

அப்பா இறந்த பிறகு தம்பிக்காரன் அண்ணனிடம் சென்று, ��அண்ணா, நம் தந்தையார் நமக்கு விட்டுச்சென்ற நிலங்களை எல்லாம் ஆளுக்குப் பாதியாக பிரித்துக் கொள்வோமே!�� என்று கேட்டான். அதற்கு அண்ணன்காரன் தம்பியிடம், ��தம்பி நாம் நிலங்களைப் பிரித்துப் பயிர் செய்தால் நம் நிலத்தின் பரப்பு குறைந்துவிடும். அக்கம்பக்கம் உள்ள நிலத்துக்காரர்கள் மோசமானவர்கள். வரப்பு, வாய்க்காலை வெட்டி, தங்கள் நிலத்துடன் சேர்த்துக்கொள்வார்கள். எனவே நாம் நிலத்தை இப்போதைக்கு பங்குவைக்க வேண்டாம். நாம் இருவரும் என்றும் போல ஒற்றுமையாய் நம் நிலத்தில் பயிர் செய்வோம். நிலத்தில் விளையும் மகசூலையும் ஆளுக்குப் பாதியாகப் பங்கிட்டு எடுத்துக்கொள்வோம்�� என்றான்.

அண்ணன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று நினைத்த தம்பிக்காரனும் �சரி� என்றான். அந்த வருடம் நன்கு மழை பெய்தது. ஆறு, குளங்களில் எல்லாம் நீர் நிறைந்து அலைமோதியது. எனவே அண்ணனும் தம்பியும் நன்செய் நிலத்தில் நெல் நடவு செய்து, உரம் போட்டு, களை எடுத்து, மருந்து அடித்து, நீர் பாய்ச்சி, நெல்லை விளையவைத்தார்கள். புன்செய் நிலத்தில் நிலக்கடலை எனப்படும் வேர்க்கடலையை விதைத்து, நன்கு பராமரித்து வந்தார்கள். நன்செய் நிலத்தில் நெற்பயிர் நன்றாக விளைந்து வந்தது. புன்செய் நிலத்திலும் நிலக்கடலை மகசூல் விளைந்துகொண்டிருந்தது. இரண்டு பயிர்களும் இன்னும் முழுமையாக விளையவில்லை.

அப்போது அண்ணன்காரன் தன் கொடூர முகத்தைக் காட்ட ஆரம்பித்தான். தம்பியை ஏமாற்றி, விளைந்த மகசூல் அனைத்தையும் தானே அபகரிக்க வேண்டும் என்று திட்டம் போட்டான். எனவே தம்பியை அழைத்து, ��தம்பி, நன்செய் நிலத்தில் விளைந்த பயிரில் மேல்பாதியை நான் வைத்துக் கொள்கிறேன். நெல் பயிரில் கீழ் பாதியை நீ வைத்துக் கொள். அதேபோல, புன்செய் நிலத்தில் விளையும் பயிரில் கீழ்ப்பகுதியை நான் வைத்துக்கொள்கிறேன். மேல்பகுதியை நீ வைத்துக்கொள்�� என்றான்.

�அண்ணன்காரன் நெல் மணிகளை தான் அபகரித்துக்கொண்டு, வைக்கோலை நம் தலையில் கட்டப்பார்க்கிறான். அதேபோல கடலைமணிகளை எல்லாம் அவன் வைத்துக்கொண்டு கடலைச் செடியின் இலை, தழைகளை எல்லாம் எனக்குக் கொடுக்கப்பார்க்கிறான். தானியங்கள் எல்லாம் அவனுக்கு; மாட்டுக்குப் போடும் தீவனங்கள் மட்டும் நமக்கா? அண்ணன், பேராசைப் பிடித்தவனாக இருக்கிறான். விளைந்த மகசூலில் பாதியை நாம் பெற வேண்டும். ஆனால் இப்போதைக்கு அவனிடம் சண்டை போடவும் கூடாது. ஆனான் அண்ணனுக்கு புத்தி புகட்டவும் வேண்டும்� என்று பலவாறு சிந்தித்த தம்பிக்காரன், கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான்.

அன்று பவுர்ணமி இரவில் முழுநிலவு வானத்தில் ஜொலித்தது. தம்பிக்காரன் நடுஜாம நேரத்தில் எழுந்து, கையில் ஒரு பன்னருவாளுடன் புன்செய் காட்டுக்குச் சென்றான். அங்கு விளைந்திருந்த கடலை மகசூலில் தரைக்கு மேல் உள்ள இலை, தழைகளை ஒரு பாத்தி அளவுக்கு அறுத்து எடுத்து, ஒரு கட்டாகக் கட்டி கொண்டுவந்து வீட்டு முற்றத்தில் போட்டான்.

மறுநாள் காலையில் பொழுது பொல பொலவென்று விடியும்போது படுக்கையில் இருந்து எழுந்த அண்ணன்காரன், கண்களைக் கசக்கிக்கொண்டு முகம் கழுவுவதற்காக கையில் ஒரு செம்பு தண்ணீருடன் வீட்டு முற்றத்துக்கு வந்தான். அங்கே கடலைச் செடியின் இலைகள், தழைகள் அடங்கிய கட்டு கிடந்தது. அதைப் பார்த்து அதிர்ந்த அண்ணன்காரன், தம்பி படுத்துக்கிடக்கும் இடத்துக்குச் சென்று அவனை எழுப்பினான். ��தம்பி, என்ன கூத்து இது? யார் செய்த காரியம்? நம் புன்செய் காட்டில் உள்ள கடலை தழைகளை எல்லாம் யாரோ அறுத்துவந்து நம் வீட்டு முற்றத்தில் போட்டு இருக்கிறார்கள். இன்னும் நன்கு முற்றி விளையாத நிலையில் இப்படி தழையை அறுத்துவிட்டால், பூமிக்குள் பிஞ்சாக இருக்கும்  கடலை எப்படி மணி பிடித்து விளையும்? மேலே இலை, தழை இல்லாத கடலைப் பயிரை எப்படி பூமியில் இருந்து வெளியே எடுக்க முடியும்? எந்த மடையன் செய்த காரியம் இது?�� என்று காச் மூச் என்று கோபத்துடன் கத்தினான்.

அண்ணன் இப்படி அதிகாலை நேரத்தில் கத்துவான் என்று எதிர்பார்த்த தம்பிக்காரன், தன் படுக்கையை விட்டு எழுந்துவது, ��அண்ணா, ஆத்திரப்படாதே. நீதானே புன்செய் காட்டில் விளையும் மகசூலில் மேல்பாதி எனக்கு என்று சொன்னாய். அதனால்தான் காட்டுக்குச் சென்று எனக்கு உரிய பங்கை நான் அறுவடை செய்திருக்கிறேன்�� என்றான் அமைதியாக.
��தம்பி, கடலை பயிரில் மேல்பாதியை அறுத்துவிட்டால், கீழ்பாதியில் உள்ள மகசூல், பிஞ்சாக, விளையாமல் பொக்காகி விடுமே�� என்று பரிதாபமாகக் கேட்ட அண்ணன்காரனுக்கு, �நாம் தம்பியை ஏமாற்றி முழு மகசூலையும் அபகரிக்க நினைத்தது தப்புதான். தம்பி புத்திசாலி என்பதால் நம்மை எதிர்த்துப் பேசாமல், தர்க்க முறையில் காரியத்தை செய்துகாட்டி, மறைமுகமாக நமக்குப் புத்தி புகட்டுகிறான். இனியும் இவனை ஏமாற்ற முடியாது� என்பது புரிந்தது.

அவனை, உண்மையான பாசத்துடன் ��தம்பி�� என்று அழைத்து, ��என்னை மன்னித்துவிடு. நான் என் தவறை உணர்ந்துகொண்டேன். முதலில் உன்னை ஏமாற்றி உனக்கு உரிய பங்கை அபகரிக்க நினைத்தது தப்புதான் என்பதை இப்போது நானும் புரிந்து கொண்டேன். இனிமேல் நமக்குள் சண்டை, சச்சரவு வேண்டாம். நன்செய், புன்செய் ஆகிய இரண்டு நிலத்திலும் விளைந்து வரும் எல்லா மகசூல்களிலும் ஆளுக்குப் பாதியாக நாம் இருவரும் பங்கு வைத்துக்கொள்வோம்�� என்றான்.

தம்பிக்காரன், அண்ணனுக்கு இந்த மட்டிலாவது புத்தி வந்ததே என்று நினைத்து சந்தோஷமாகத் தலையை ஆட்டினான்!

குழந்தைகளே... இந்தக் கதையில் வரும் பேராசைப் பிடித்த அண்ணன்காரனைப் போல யாரும் இருக்கக்கூடாது. நம்மை ஏமாற்றி யாராவது நம் பங்கை திருட நினைத்தால் நம் அறிவைக்கொண்டு யோசித்து, நம் உடைமைகளை அவர்களிடம் இருந்து காத்திட வேண்டும். இதைத்தான் திருவள்ளுவரும் �அறிவு அற்றம் காக்கும் கருவி�� என்று கூறுகிறார். நமக்கு சோதனை வரும்போது நாம் அறிவு என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்து போராட வேண்டும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்.

தாத்தா சொல்லும் கதைகள் 1

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் என்ற சிற்றூரில் வசித்து வருகிறார். �கதை சொல்லி� என்ற காலாண்டிதழின் பொறுப்பாசிரியர். நாட்டுப்புறவியல் சார்ந்து இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார்.

கி.ராஜநாராயணன் கரிசல் காட்டு கதை சொல்லி என்றால், கழனியூரன் செவக்காட்டு கதை சொல்லி. சிறந்த களப்பணியாளர். இவரின் படைப்புகள் பலவும் களப்பணியின் மூலம் திரட்டிய தரவுகளால் உருவானவையே. கி.ரா.வின் சீடர் என்றும், கி.ரா.வின் வாரிசு என்றும் இலக்கிய உலகம் இவரை அழைக்கிறது.


பொங்கல் பண்டிகை பிறந்த கதை

- கழனியூரன்

பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒவ்வொரு பண்டிகைக்குப் பின்னாலும் ஒரு செய்தி அல்லது கதை நிச்சயமாக இருக்கும். ஆனால், நாளா வட்டத்தில் பண்டிகைகளின் முகம் மாறும்.

ஒரு குழந்தையின் முகத் தோற்றம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே இருப்பதைப் போல, பண்பாடு, கலாசாரம் சார்ந்த பண்டிகைகளின் முகமும் மாறிக்கொண்டே இருக்கும்.

பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் முதன்மையான பண்டிகை. ஆதி தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் பண்டிகை வேறு, இன்றை தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை வேறு.

�மாற்றம் ஒன்றுதான் மாறாதது� என்று சொல்வார்கள். மாற்றம் என்பது உண்மையானது. ஆனால், அந்த மாற்றம் இயல்பாக நடைபெற வேண்டும்.

ஒரு சிற்பத்தின் மேல் தடவப்படும் வண்ணங்களால் ஏற்படும் மாற்றம் என்பது வேறு. சிற்பத்தின் உருவ அமைப்பையே மாற்றுவது என்பது வேறு.

இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் பொங்கல் பண்டிகையில் உண்மையான தத்துவார்த்தத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாம் உண்ணும் உணவில், உடுத்தும் உடையில், அணியும் ஆபரணங்களில், இன்று பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதைப் போலவே, நமது கலாசாரம், பண்பாடு சார்ந்த பண்டிகைகளிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் முதன்மையான பண்டிகையாகும். இயற்கையை மிக இயல்பாக வழிபடும் பண்டிகையாகும்.

சூரிய சக்திதான் உலகில் முதன்மையான சக்தியாகும். எனவேதான் இளங்கோ அடிகள், தன் இயற்கை வழிபாட்டில், �ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்...� என்று பாடினார்.

சூரிய ஒளியில் இருந்தான், தாவரங்கள் சக்தி பெறுகின்றன. உழவனுக்கு சூரிய சக்தி மூலமே உணவு கிடைக்கிறது என்பது தெரிந்திருக்கிறது. எனவே தமிழர்கள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்க விரும்பி பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினார்கள்.

பூமி, தண்ணீர், காற்று, சூரிய சக்தி, மனித உழைப்பு & இவைகள் மூலமே உழவனுக்கு வருவாய் கிடைக்கிறது.

தன் பூமியில் விளைந்த நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியை பொங்கலாகச் சமைத்து உழவர்கள்  பொங்கல் அன்று சூரியன் உதிக்கும் போது படையலாகப் படைத்து இயற்கையின் மூல சக்தியான சூரியனை வழிபட்டார்கள்.

தன் வயலில் விளைந்த கரும்பு, மஞ்சள் மற்றும் காய்கறிகளையும், பூக்களையும், கிழங்குகளையும், கனிகளையும் இயற்கையின் முன் படைத்து இயற்கையை வழிபட்ட தமிழர்களின் பண்டிகைதான் பொங்கல்.

யாகம் வளர்ப்பது அதில் தாணியங்களை அள்ளிப் போடுவது, அக்னியில் நெய் வார்ப்பது போன்ற வழிபாட்டு முறைகள் பொங்கல் அன்று நடைபெறுவது இல்லை.

பொங்கலையும், காய்கறிகளையும் ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொண்டும், உறவுகளை மேம்படுத்திக்கொள்ளும் அன்புப் பண்டிகையாகும் பொங்கல்.

வீர விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் மூலம் தமிழர்களின் வீரத்தை வெளிக்காட்டும் பண்டிகையாகவும் பொங்கல் திகழ்கின்றது.

இன்று பொங்கல் பண்டிகை மிகவும் செயற்கையாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ் புத்தாண்டின் துவக்கம் �தை� மாதத்தில் இருந்தே துவங்கியது. �தை பிறந்தால் வழி பிறக்கும்� என்பது பழமொழி.

பொங்கல் பண்டிகைக்குப் பின்னாலும் ஒரு சொல் கதை உள்ளது.

�சொல் கதைகளுக்கு கண்ணும் கிடையாது. காதும் கிடையாது� என்று கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள் சொல்வார்கள். சொல் கதைகளை அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் அணுகவேண்டும்.

பிறந்த நாள் கொண்டாடும் வழக்கம், வெள்ளைக்காரர்களிடம் இருந்துதான் வந்தது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதி தமிழர்களிடமும் பிறந்த நாள் கொண்டாடும் பழக்கம் இருந்தது என்பதை இந்தச் சொல் கதை உறுதி செய்கிறது.

அந்தக் காலத்தில் தமிழர்களின் வருசப் பிறப்பு �தை� மாதத்தில் இருந்தே துவங்கி இருக்கிறது.

தை, மாசி, பங்குனி, சித்திரை முதலிய பன்னிரண்டு மாதங்களுக்குள்ளும் ஒரு நாள் சண்டை வந்தது. ஒவ்வொரு மாதமும் �நான்தான் தமிழ் வருசத்தின் முதல் மாதமாக இருப்பேன்� என்று கூறியதாம்.

யார், யாரெல்லாமோ வந்து மாதங்களின் சண்டையைத் தீர்த்து வைக்க முயற்சி செய்தார்களாம். ஒவ்வொரு மாதமும் என்னில் இருந்துதான் தமிழ் வருசப் பிறப்பு தோன்ற வேண்டும் என்பதற்கு ஆளுக்கு ஒரு காரணத்தைக் கூறியதாம்.

பூமியில் யாராலும், மாதங்களுக்குள் நடைபெற்ற சண்டையைத் தீர்த்துவைக்க முடியவில்லை.

கடைசியில் மாதங்கள் அனைத்தும் அணிவகுத்து கடவுளிடம் சென்று தங்கள் வழக்கைக் கூறின.

கடவுள் ஒவ்வொரு மாதங்களின் தனிச் சிறப்பையும் கேட்டு, �வருடத்தின் முதல் மாதமாக இருக்கும் தகுதி தை மாதத்திற்கே இருக்கிறது� என்று தீர்ப்புக் கூறினார்.

கடவுளே சொன்னதால் மற்ற மாதங்கள் எல்லாம், தை மாதத்தையே, வருசத்தின் முதல் மாதமாக ஏற்றுக்கொண்டன.

கடவுள் தை மாதத்தைப் பார்த்து �� உனக்கு ஏதாவது ஆசை இருந்தால் சொல் அதை நிறைவேற்றி வைக்கிறேன்�� என்றார்.

தை மகள், கடவுளிடம் �என் (தை மாதத்தின்) முதல் நாளை (தமிழ் வருசப் பிறப்பு நாளை) அதாவது தமிழ் வருடத்தின் பிறந்தநாளை மக்கள் எல்லாம் ஒரு விழாவாகக் கொண்டாட வேண்டும்�� என்ற வேண்டுகோளை வைத்தாள்.

கடவுளும் தை மகளின் வேண்டுகோளை ஏற்று �தை முதல் நாளை (தமிழ் வருசப் பிறப்பு நாளை) இனி மேல் தமிழர்கள் யாவரும் பொங்கல் விழாவாகக் கொண்டாடுவார்கள்� என்று சொன்னார்.

வருசம் தன் பிறந்தநாளைக் கொண்டாட ஆரம்பத்தில் இருந்துதான், மனிதர்களும் தன் பிறந்த நாளைக் கொண்டாட ஆரம்பித்தார்கள் என்று பொங்கல் பண்டிகை பற்றிய சொல் கதையைக் கூறினார், கதை சொல்லி ஒருவர்.

பொங்கல் பண்டிகை, உழவர்களின் திருநாளாகக் கொண்டாடப் படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய துணி, மணிகளையும், கழிவான பொருட்களையும் அழித்து சுற்றுச்சூழலை மேம்படுத்துகிறது போகிப் பண்டிகை.

�சுற்றுச்சூழல் சார்ந்த இதுபோன்ற பண்டிகையை உலகத்தில் மக்கள் வேறு எங்காவது கொண்டாடுகிறார்களா?� என்று தெரியவில்லை. �போகி� என்பது பொங்கலோடு தொடர்புடைய சூழல் அறிவியல் சார்ந்த பண்டிகையாகும்.

பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தன் உழவுத் தொழிலுக்கு உதவிய வாயில்லாத ஜீவன்களுக்கும் ஒரு பண்டிகையை தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்.

�மாடுகளுக்கு என்று ஒரு தனிப் பண்டிகையை வேறு எந்த மாநிலத்தவர்களாவது கொண்டாடுகிறார்களா?� என்று எனக்குத் தெரியவில்லை.

உழவுதான் தமிழர்களின் முக்கியமான தொழில். எனவேதான் உழவர்களின் பண்டிகையாகவும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. �அறுவடைத் திருநாள்� என்ற பெயரும் பொங்கல் பண்டிகைக்கு உள்ளது.

�அறுவடை நாளை� திருநாளாகக் கொண்டாடும் மரபு உலகில் பல நாடுகளில் இன்றும் நடைமுறையில் உள்ளது.

தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த பண்பாடு சார்ந்த பண்டிகைகளின் வரலாற்றை இன்றைய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இன்று தமிழகம் பல இனக்குழு மக்களின் கலவைக்கூடமாகத் திகழ்கின்றது. அறிவியல் வளர்ச்சியில் பன்னாட்டு வணிக வரவால் தமிழகத்தின் முகம் மாறிவிட்டது. எனவே, பொங்கல் போன்ற ஆதி பண்டிகைகளின் வடிவமும் சிதைந்துவிட்டது. பொங்கல் பண்டிகைக்குள்ளும் செயற்கைத் தன்மைகள் புகுந்து விட்டது. இனி அதை யாரும் மீட்டுருவாக்கம் செய்ய முடியாது. என்றாலும் எஞ்சிய வடிவத்தையாவது மேலும் சிதையாமல் காத்திட நாம் முயல வேண்டும்.

நகரங்களில் குக்கரில் பொங்கல் வைத்து, பக்கத்துக்கடையில் ஒரு கொலை மஞ்சளும், ஒரு துண்டு கரும்பும், வழக்கத்துக்கு மாறாக கூடுதலாக கொஞ்சம் அதிகமாக காய்களும், கிழங்குகளும் வாங்கி பொங்கல் பொங்கியாச்சு என்று உறவினர்களிடம் செல் பேசியில் பேசி மகிழ்ந்துவிட்டு, பொங்கல் என்ற விடுமுறை நாளை தொலைக்காட்சியின் முன் அமர்ந்து பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி முடித்துவிடுகிறார்கள்

மறைவாய் சொன்ன கதைகள் 1

மறைவாய் சொன்ன கதைகள், பாலியல் கதைகள், கி. ராஜநாராயணன், கழனியூரன்

எனக்கு அடல்ஸ் ஒன்லி வகை கதைகள் அறிமுகம் ஆன பொழுது நான் ஒன்பதாவது பத்தாவது படித்துக் கொண்டிருந்த சமயமாக இருக்கும். ஏனென்றால் எனக்கு நினைவில் இருக்கிறது அப்பொழுது நான் அரைக்கால் ட்ரௌசர் போட்ட பையன் என்று. அது தர்ம சங்கடமான சமயம், மதிய சாப்பாடு முடிந்து சற்று தூக்க கலக்கமாக இருக்கும் சமயங்களில் பையன்கள் ஆரம்பித்து விடுவார்கள்.

பின்னர் கல்லூரிக் காலங்களில் பெரும்பாலும் கடைசி பெஞ்சில் இதைப் பற்றிய பேச்சு அதிகமாக இருக்கும். சாஃப்ட்வேர் கம்பெனிகளும் இதற்கு கொஞ்சம் குறைந்தது கிடையாது, politically correctஓ இல்லையோ கூட வேலை செய்யும் பெண்களைப் பற்றி ஏக காலத்தில் கமென்ட்டுகள் வந்த வண்ணம் இருக்கும் XXX ஆக இல்லாமல் பெரும்பாலும் XX ஆகவோ இல்லை வெறும் X ஆகவோ தான் இருக்கும். தண்ணியடித்தால் ‘பஞ்சாபி A ஜோக்குகள்’ சொல்லும் PM ஒருத்தர், தண்ணியடிக்க ஆரம்பித்ததில் இருந்தே பெண்கள் பற்றி பேசும் ‘சாஃப்ட்வேர்’ நண்பர்கள் வரை இன்னமும் நிறைய பேர் நிறைய கதைகள் உண்டு.

பெரும்பாலும் யாரோ ஒருவர் ஆரம்பித்து பின்னர் மற்றொருவர் தொடர்வது என எல்லோரும் ஒரு கதையாவது சொல்லியிருப்பார்கள். நிறைய கதைகள் நினைவில் நிற்பது இல்லை பெரும்பாலும் இது போன்ற கதைகளை வெறுமனே கேட்டு அந்த நேரத்தில் சிரிக்கத்தகுந்தவையாகத்தான் இருக்கும்.

இதே போல் கிராமத்தில் நடமாடும் ‘மறைவாய் சொன்ன கதைகளைத்’ தொகுத்து கி.ராஜநாராயணனும் கழனியூரானும். மறைவாய் சொன்ன கதைகள் என்ற தொகுப்பாய் விட்டிருக்கிறார்கள் அதிலிருந்து ஒரு கதை சாம்பிளுக்கு. இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்ததற்கு கதை சிறியதாய் இருப்பதைத் தவிர்த்து வேறு ஒரு காரணமும் கிடையாது :) .

ஒரு ஊர்ல ஒரு புருஷனும் பொண்டாட்டியும் இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை இருந்தான். அவனுக்கு ஏழெட்டு வயசு இருக்கும். அவன் ஒரு பைத்தியக்காரனா வளர்ந்தான்.

ஒரு நாள் பட்டப்பகலில் கதவை ஒருச்சாத்தி(சிறிது திறந்தபடி) வைத்துக் கொண்டு புருஷனும் பொண்டாட்டியும் ‘பேசிப் பெறக்கிக் கிட்டு’ இருந்தாங்க. அவங்களோட பையன் கதவின் இடைவெளி வழியா உள்ளே எட்டி அந்தக் கங்காட்சியைப் பார்த்துட்டான்.

தன் பாட்டியிடன் வந்து வீட்டுக்குள் தான் பார்த்த கங்காட்சியை பற்றிச் சொல்லி ‘அம்மாவும் அப்பாவும் என்ன செய்றாங்க பாட்டி’ என்று விபரம் கேட்டான்.

பாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டுட்டு, ‘கதவைத் திறந்து போட்டுக்கிட்டு அவங்க சந்தோஷம் கொண்டாடியிருக்காங்க’ என்பதைப் புரிந்து கொண்ட பாட்டி பேரன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்து வழக்கம் போல் ஒரு பொய்யைச் சொன்னாள்.

அந்தப் பேரன் அடிக்கை எசக்குப்பிசக்கா பாட்டியிடம் அப்படிக் கேள்விகள் கேட்பதுண்டு.

ஒருநாள் ‘பாட்டி நான் எப்பைப் பிறந்தேன்?’ என்றூ கேட்டான்.

பேரனின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல விரும்பாத பாட்டி, ‘நீ சின்ன பிள்ளையா இருக்கும்போது ஒரு கன்னப் பருந்து உன்னைக் கொண்டுவந்து உன் அம்மாவின் மடியில் போட்டுட்டுப் போய்ட்டு’ என்று ஒரு பொய்யைச் சொல்லி வைத்தாள்.

இப்பமும் அதே மாதிரி ‘பேரப்புள்ள, உங்கம்மா திடீரென்று செத்துட்டா, உங்கப்பா அவளைக் கட்டிப் பிடிச்சி உசிரு கொடுத்துக்கிட்டு இருந்திருக்கு. அதைத்தான் நீ பார்த்திருக்கிறெ.’ என்று பொய்யைச் சொல்லி வைத்தாள்.

பைத்தியக்காரனான பேரப்பிள்ளையும் பாட்டி சொன்னதை நம்பிட்டான்.

ஒரு வாரம் கழித்து பக்கத்து வீட்டில் ஒரு வயசுக்கு வந்த பொம்பளைப் பிள்ளை ஒருத்தி இறந்துவிட்டாள். எல்லோரும் போய் செத்துப்போன பிள்ளையைப் பார்த்துட்டு வந்தாங்க.

பாட்டியோட பேரனும் போய் செத்துப் போன அந்தப் பிள்ளையப் பார்த்துவிட்டு அங்கே நின்றவர்களிடம் ‘எங்கப்பா செத்தவங்களுக்குக் கெல்லாம் உயிர் கொடுக்கத் தெரிஞ்சவங்க. இப்ப எங்கப்பாவைக் கூட்டிக்கிட்டு வந்து செத்துப் போன இந்தப் பிள்ளையக் கட்டி பிடிக்கச் சொல்லுங்க. இந்தப் பிள்ளைக்கும் உயிர் வந்திரும்’ என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.

பையன் சொல்வதைக் கேட்ட நிறைய பேருக்கு ‘விபரம்’ புரியவில்லை. கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் மட்டும் விசயத்தை யூகித்துக் கொண்டு சிரித்தார்.

அதற்குள் பையன் வாய் திறந்ததைக் கேள்விப்பட்டு அவனோட பாட்டி ஓடோடி வந்து அவன் வாயைப் பொத்துக் கொண்டு. ‘வாடா வா பைத்தியக்காரப் பெயல் மகனே!’ என்று சொல்லிக் கொண்டே தன் வீட்டுக்கு பேரனைக் கூட்டிக் கொண்டு போனாள்.

பாட்டி போன பிறகு, பையன் சொன்னதைக் கேட்டு சிரித்த பெரியவரிடம் சுற்றி நின்று ‘என்னன்னு விபரம் புரியலியே. நீங்களாவது சொல்லுங்களேன்’ என்றூ கேட்க பெரியவர் சிரிப்பை அடக்கிக் கொண்டு தான் யூகித்த விஷயத்தை அனைவருக்கும் விளக்கினார். துக்க வீட்டிலும் சிரிப்பலைகள் பரவியது.

அறியாத பிள்ளைகள் கேட்கிற சில எசக்குப்பிசக்கான கேள்விகளுக்கு சம்மந்தா சம்மந்தமில்லாமல் நாம் பொய்யான பதிலைச் சொன்னால் அதன் பின்விளைவுகள் இப்படித்தான் இருக்கும்’ என்று சொல்லி முடித்தார் கதை சொன்ன தாத்தா.

என் பள்ளிப் பருவத்தில் சொன்ன கதை ஒன்றும் அப்படியே.(எனக்கு இந்த வகைக் கதைகளை கூறுவதற்கான மொழி அமையணும் என்று வேண்டிக் கொள்கிறேன்.)

பெரும்பாலும் எனக்கு அறிமுகமாகியிருந்த கதைகள் பெண்ணொருத்தியுடையதோ இல்லை ஆணினுடையதோ இந்த விஷயத்திலான சாமர்த்தியத்தை சூட்சமத்தை விளக்குவதாக இருக்கும். அப்படித்தான் இந்தக் கதையும், முன்பு நண்பர்களாயிருந்து பின்னர் எதிரிகளான இருவரும் அவர்களில் ஒருத்தரின் காதலியும் ஒரு இரவு ஒரு மண்டபத்தில் தங்கும் படியான சூழ்நிலை ஏற்பட்டது. இதில் காதலியுடன் வந்திருப்பவரின் பெயர் சந்திரன் என்று வைத்துக் கொள்வோம், மற்றவர் பெயர் செல்வம். இது சுலபமாக கதை சொல்வதற்காக மட்டும். :) பின்நவீனத்துவ கதைக்காரர்கள் ஒருவனை அதீதன் என்றும் மற்றவனை நன்மொழித்தேவன் என்றும் அவளை ஆத்மார்த்தி என்றும் வைத்துக் கொண்டாலும் தவறில்லை. அதீதனும் நன்மொழித்தேவனும் வேறல்ல இருவரும் ஒருவரே என்று ‘சொல் என்றொரு சொல்’ சொல்பவர்கள் ஒதுங்கி நின்று செல்வம், சந்திரனாக கதைக்கலாம்.

சந்திரனுக்கு அவர்களுடைய நண்பர்கள் செல்வத்தைப் பற்றி நிறைய சொல்லி காதலியை பதுவிசாக பார்த்துக் கொள்ளும் படியும் ஒரு நிமிடம் விட்டாலும் செல்வம் தவறு செய்துவிட வாய்ப்புள்ளது என்று சொல்லி அனுப்ப சந்திரனுக்கோ தர்மசங்கடமான நிலை, இதில் செல்வத்தின் ‘காமப் புகழ்’ வேறு உலகம் அறிந்தது என்பது சந்திரனுக்கும் தெரிந்து தான் இருந்தது. சரி எப்படித்தான் அவனும் ‘தில்லுமுள்ளு’ செய்யறான்னு பார்ப்போம் என்று ஒரு வித மமதையில் ஒரு திட்டம் போட்டான். தன் காதலியின் யோனியின் மீது கையை வைத்துக் கொண்டே தூங்குவது என்றும் எப்படியும் அவன் ‘தவறு’ செய்ய நினைத்தால் கண்டுபிடித்து விடலாம் என்றும் திட்டம் போட்டான். இது போல் கை வைத்துக் கொண்டு வெகுநேரம் தூங்காமலும் வேறு இருந்தான் செல்வம் பற்றிய பயத்தினாலே, பின்னர் ஒருவாறு தூங்கிப்போனான் அவனுக்கே தெரியாமல் ஆனால் கைமட்டும் விழிப்பா அங்கேயே இருந்தது. இருட்டில் எங்கிருந்தோ வந்த ஒரு கொசு அவன் தொடையில் கடிக்க அதை அடிக்க சந்திரன், அவன் காதலி மேல் வைத்திருந்த கையை எடுத்துவிட்டு நொடியில் மீண்டும் வைக்கும் பொழுது பிசுபிசுவென்று இருந்தது என்றும் இதிலிருந்து செல்வம் எந்த அளவுக்கு சூச்சமக்காரன்னு புரியும் என்று சொல்லி கதை முடியும்.
Link: http://kundavai.wordpress.com/2008/07/03/

இப்படியாகத்தான் இருக்கிறது எதார்த்தம்

‘‘அபார்சன் பண்ணிடு’’ முடிவாகச் சொன்னான் கார்த்திகேயன். சந்திரலேகாவும் முடிவாகச் சொன்னாள், ‘‘அபார்சன் பண்ண முடியாது’’

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இந்தப் பிரச்சினை விரிசலை ஏற்படுத்தியது.

வாக்குவாதம் முற்றியதில் கார்த்திகேயன் டைவர்ஸ் பண்ணப் போவதாக மிரட்டினான். தன் கருப்பையில் வாழும் அந்த ஜீவனைக் கொன்றுவிட அந்தத் தாயின் மனம் துணியவில்லை!

கணவனா, கருவில் வளரும் குழந்தையா? என்ற நிலை வந்தபோது அந்தத் தாயின் மனம், கருவில் வளரும் அந்தப் பிஞ்சுப் பூவின் பக்கமே சாய்ந்தது.

டைவர்ஸ் நோட்டீசைக் கையில் வாங்கிப் பிரித்துப் படித்துவிட்டு பெட்டியில் சாய்ந்தாள் சந்திரலேகா. அவளின் அடி வயிற்றில் ஏதோ ஒன்று ஊர்வதைப் போல உணர்ந்தாள். கண்களில் அவளை அறியாமல் கண்ணீர் வெள்ளமாகப் பெருகியது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அவள் படித்த பள்ளியிலேயே முதல் மாணவியாகத் தேறினாள். நன்றாகப் படிக்கிற பிள்ளையை மேற்கொண்டு படிக்க வைக்காமல் நிறுத்திவிட அவள் தந்தை பரமேஸ்வரனுக்கு மனம் இல்லை!

பிளஸ்டூ தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறினாள். கல்லூரிக்கு அனுப்பும் போதோ, சந்திரலேகாவின் தந்தை யோசித்தார். நம் தகுதிக்குச் சரிப்பட்டு வருமா-? என்று.

சந்திரலேகா நான் கல்லூரிக்குச் சென்று படிக்கப் போகிறேன் என்று பிடிவாதம் பிடித்தாள். நாலைந்து கிலோ மீட்டருக்குள் பெண்கள் கல்லூரி இருந்தது. தினம் வீட்டில் இருந்தேபோய் வந்துவிடலாம். என்றாலும் மேற்கொண்டு ஆகும் செலவுக்கு என்ன பண்ணுவது? என்று யோசித்தார்.

குடும்பத்தின் வறுமை கருதித் தயங்கினாலும், மகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பது என்று முடிவெடுத்தார். ஒரு கமிசன் கடையில் கணக்கு எழுதி அதில் வரும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார் பரமேஸ்வரன்.

சந்திரலேகாதான் அவருக்குத் தலைப்பிள்ளை, அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் வேறு இருந்தார்கள். நன்றாகப் படிக்கின்ற பிள்ளையைப் படிக்க விடாமல் தடுப்பதும் ஒரு வகையில் குற்றம்தான் என்பதை உணர்ந்த பரமேஸ்வரன் பிள்ளை மேலும் நாலைந்து கடைகளுக்கு வருமான வரிக்கணக்குகளை வீட்டில் இருக்கும் நேரத்தில் முடித்துக் கொடுத்து அதில் வரும் உபரி வருமானத்தில் சந்திரலேகாவின் கல்லூரிக் கல்விக்கு ஆகும் செலவைச் சரிக்கட்டிவிடலாம் என்று நினைத்தார்.

சந்திரலேகா கல்லூரியிலும் நன்றாகப் படித்தாள். அவர் தாயார் வீட்டு வாசலிலேயே சிறியதாகப் பெட்டிக்கடை ஒன்றை வைத்து நடத்தினாள். அதிலிருந்து சிறிய வருமானம் வந்தது.

பி.ஏ. முடித்து தொடர்ந்து எம்.ஏ. படிக்க விரும்பினாள் சந்திரலேகா. அவள் அப்பா மிகுந்த தயக்கத்தோடுதான் மகளை மேற்படிப்பிற்கு அனுப்பினார். சந்திரலேகாவுக்குத் தன் வீட்டின் நிலை புரிந்திருந்தாலும் தான் தொடர்ந்து நன்றாகப் படித்து முன்னுக்கு வந்து தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தாள்.

சந்திரலேகா நினைத்தபடியே எம்.ஏ.வும் முடித்தாள். நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றாள். அவள் நினைத்தபடி படித்து முடித்ததும் வேலை கிடைத்துவிடவில்லை! சந்திரலேகா தொடர்ந்து படித்ததால் அவளின் தங்கச்சிமார்கள் இருவரையும் எம்.ஏ.வுக்கு மேல் பரமேஸ்வரனால் படிக்க வைக்க முடியவில்லை. அத்தோடு அவர்கள் இருவருக்கும் படிப்பும் சுமாராகத்தான் வந்தது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெற்று தேர்ச்சி பெற்றனர். அதனால் இளைய பிள்ளைகள் இவருவரையும் ரெடிமேடு டிரஸ் தயாரிக்கும் ஒரு கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பினார் பரமேஸ்வரன்.

சந்திரலேகா மேலும் பி.எட். படித்தால்தான் வேலை கிடைக்கும் என்று பலரும் யோசனை கூறினார்கள். வேறு வழியின்றி பி.எட். படிக்க வைத்தார் பரமேஸ்வரன். சந்திரலேகா பி.எட். படித்து முடிப்பதற்குள் பரமேஸ்வரனுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. பி.எட். படித்து முடித்ததும் வேலை கிடைக்கும் என்பதும் கனவாகத்தான் போனது. தனியார் பள்ளிகளில் பெருந்தொகையைக் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் என்ற எதார்த்தம் பரமேஸ் வரனைத் தாக்கியது.

ஒருவருஷம், இரண்டு வருசம் அரசுப் பள்ளியில் வேலை கிடைக்கும் என்று காத்திருந்த சந்திரலேகா ஏமாற்றம் அடைந்தாள். வீட்டிற்கு அருகில் இருந்த ஆங்கிலப்பள்ளி ஒன்றில் வேலை காலியாக இருக்கிறது என்ற தகவல் வந்தது. மனுப் போட்டால் மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறினார்கள். குடும்பத்தின் நிலை கருதியும், தன் மன உளைச்சல் கருதியும், ஆங்கிலப் பள்ளியின் அந்த ஆசிரியர் பணியை ஏற்றுக் கொண்டாள். மாலையில் டியூஷன் எடுத்தாள். அதில் ஓரளவிற்கு வருமானம் வந்தது. மாணவிகளுடன் பழகுவதும் கற்பித்துக் கொடுப்பதும் அவளின் மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

சந்திரலேகாவின் வயதுடைய சக பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் முடிந்திருந்தது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பெண் பிள்ளையைக் கட்டிக் கொடுக்காமல் வீட்டிலேயே வைத்திருப்பது சரியல்ல என்று நினைத்து பரமேஸ்வரன் தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்.

பல இடங்களுக்கும் சென்று பல தரகர்களிடமும் சொல்லி வைத்தார். வருகிற வரன்கள் எல்லாம் வரதட்சணை சீர் செனத்தி என்று கண்களை மூடிக்கொண்டு கேட்டனர்.

சந்திரலேகா ‘‘அப்பா எனக்குத் திருமணமே வேண்டாம். நிரந்தரமாக வேலை கிடைத்த பின்பு கல்யாணம் கட்டிக் கொள்கிறேன்’’ என்றாள். காலம் தன் கடமையை ஒழுங்காய்ச் செய்தது. சந்திரலேகா வின் நடுத் தலையைச் சுற்றிலும் சில முடிகள் வெள்ளையாய் மினுமினுக்கத் துவங்கின.

‘பட்டம் தப்பினால் நட்டம்’ என்று நினைத்த பரமேஸ்வரன் எப்படியாவது மகளைக் கட்டிக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கார்த்திகேய னின் ஜாதகத்தை ஒரு தரகன் கொண்டு வந்து கொடுத்தார்.

கார்த்திகேயன் பி.ஏ.படித்துவிட்டு வேலை கிடைக்காமல் சொந்தமாக ஒரு பலசரக்குக் கடை வைத்து நடத்திக் கொண்டிருந்தான். மகளுக்கு இணை யான கல்வித்தகுதியோடு ஆசிரியர் வேலை பார்க்கிற மாப்பிள்ளையைப் பார்த்துக் கட்டிக் கொடுப்பது என்பது நடக்கக்கூடிய காரியம் இல்லை என்ற உண்மையை உணர்ந்துகொண்ட பரமேஸ்வரன் இந்த மாப்பிள்ளை தொழில் செய்கிறார். படித்திருக்கிறார். எனவே இவருக்கே தன் மகள் சந்திர லேகாவைக் கட்டிக் கொடுத்துவிடலாம் என்று நினைத்தார்.

சந்திரலேகா எவ்வளவோ மறுத்துப் பார்த்தும் பரமேஸ்வரன் கேட்கவில்லை. வயது ஏறிக் கொண்டே போகிறது. இனியும் உன்னை வீட்டில் வைத்துப் பார்ப்பது முறையல்ல. அத்தோடு உனக்கு அடுத்தபடியாக இரண்டு பெண்கள் வளர்ந்து நிற்கிறார்கள். உன்னை முதலில் கட்டிக் கொடுத் தால்தான் அடுத்தடுத்து இரண்டு மூன்று வருடங்களில் மற்றப் பிள்ளைகளைக் கட்டிக் கொடுக்க முடியும் என்று விபரம் கூறி சந்திரலேகாவைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்து விட்டார்.

கடனை உடனை வாங்கித் தத்திப்புத்தி எப்படியோ சந்திரலேகாவைக் கரை சேர்த்தார் பரமேஸ்வரன். கல்யாணம் முடிந்த பின்புதான் கார்த்திகேயன் சுயரூபம் சந்திரலேகாவுக்குத் தெரியவந்தது. சீட்டு விளையாடுவது, குடிப்பது என்று ஊதாரியாக இருந்தான் கார்த்திகேயன். கடை என்பது பேருக்குத்தான் இருந்தது. கடையைச் சுற்றிக் கடன்கள் விழுது போலப் பின்னிக் கிடந்தது-.

ஏண்டா இவ்வளவு தூரம் படித்தோம் என்றிருந்தது சந்திரலேகாவுக்கு. கல்யாணத்திற்கு, பிறகு, கணவன் ஊரில் உள்ள ஒரு ஆங்கிலப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தாள். அந்த வருமானம்தான் அவள் உயிரைக் காப்பாற்றியது.

மீண்டும் டியூஷன் எடுக்க ஆரம்பித்தாள். ஒரே வருசத்தில் கடன் தொல்லை தாங்க முடியாமல் கடையை அடைத்துவிட்டான் கார்த்திகேயன்.

கார்த்திகேயன் அவளைவிட நாலுவயது குறைந்தவன். கல்யாணத்திற்கு முன்பே அந்த விவரம் அவனுக்கும் தெரிந்து இருந்தது. ஆனால் கல்யாணம் முடிந்த பிறகு, அடிக்கடி அவளின் நரைத்திருந்த முடியைச் சுட்டிக் காட்டிப் பேசினான். அவளின் வயதை நினைவு படுத்தினான். வார்த்தைகளால் அடிக்கடி வதைத்தான். அப்போது சந்திரலேகா அழுவதைப் பார்த்து ரசித்தான். அவனின் அந்தக் கொடூரமான ரசனையை அவளும் உணர்ந்துதான் இருந்தாள்.

என்றாலும் தன் குடும்பத்தின் நிலை கருதி, தனக்குப் பின்னால், கல்யாணத்திற்குக் காத்திருக்கும் தன் தங்கை மார்களின் நலன் கருதி, அவனோடு வாழ்ந்து கொண்டிருந்தாள். இப்படிப்பட்ட சூழலில் தான் சந்திரலேகா கர்ப்பமுற்றாள். அந்தச் சந்தோஷச் செய்தி, அவளை ஏனோ வதைத்தது.

‘‘நாம் இருக்கும் நிலையில் இப்போதைக்கு நமக்குக் குழந்தை வேண்டாம். உனக்கு நிரந்தர வேலை கிடைத்த பின்பு நாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இப்போதைக்கு இந்தக் கருவைக் கலைத்துவிடு’’ என்றான்.

முப்பத்தைந்து வயதைக் கடந்துவிட்ட இந்த நிலையிலாவது தலைப்பிள்ளையைப் பெற்றுக் கொள்ளும் வரம் கிடைத்ததே என்று மகிழ்ந்திருந்த சந்திரலேகாவால் கர்ப்பத்தைக் கலைப்பது என்பதையே நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை!

தாய்வீட்டிற்கு வாழாவெட்டியாய்ப் போய்த் தன் தங்கைமார்களுக்குச் சிரமம் கொடுக்க விரும்பாத சந்திரலேகா தனியே ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி அதில் குடியேறினாள். பிறக்கப் போகும் தன் மகனையோ, மகளையோ நினைத்து நினைத்து அந்தக் கனவிலேயே வாழ்ந்தாள் சந்திரலேகா. பிரசவத்திற்கான நாளும் வந்தது. பரமேஸ்வரன் தான் அவளை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தார்.

சந்திரலேகாவுக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது

மீண்டும் சங்குத் தேவன்

காட்சி: 1

பாத்திரங்கள் : முறுக்கு பாட்டி (முத்தாச்சி), ராமாத்தாள் (பக்கத்து வீட்டுக்காரி)

நேரம் : மத்தியான நேரம்

இடம் : முத்தாச்சி வீட்டு முற்றம்

ராமா : எக்கா, சௌக்கியமா இருக்கியா? உன்னக் கண்ணப் படச்சிப் பார்த்து ரொம்ப நாளாச்சே...

முத் : ஏதோ, இருக்கேண்டிய்யம்மா... அந்த பேராச்சி புண்ணியத்திலேயும், மூங்கிலடியான் புண்ணியத்திலேயும்.

ராமா : என்னக்கா, ரொம்பச் சலிப்பா சொல்லுதியே... உனக்கென்ன குறைச்சல், ஒத்தைக்கு ஒரு மகள். அவளைச் செல்லமா வளர்த்தே. அவளுக்கும் மாலை பூத்துட்டு. இனிமே உன் பாடு யோகம்தானே!

முத் : ஒத்தப் புள்ளய வச்சிக்கிட்டு நா(ன்) படுகிற பாடு எனக்குத்தான் தெரியும் எனக்குச் சொந்த பந்தம்னு சொல்லிக்கிட இந்த ஊர்ல யாரு இருக்கா...? இந்த மாதிரி லாப, நஷ்டக் காலத்துல, நாலு காசுபணத்தைக் கொடுத்து உதவ எந்த நாதி இருக்கு எனக்கு..? ஏதோ அந்த பேராச்சி புண்ணயித்திலேயும், மூங்கிலடியான் புண்ணியத்திலேயும் எல்லாக் காரியமும் நடந்துக்கிட்டு இருக்கு.

ராமா : எக்கா, கல்யாண ஏற்பாடெல்லாம் எப்படி இருக்கு..?

முத் : ஏதோ.. அந்த பேராட்சி புண்ணியத்திலேயும், மூங்கிலடியான் புண்ணியத்திலேயும் எல்லாக் காரியமும் ஒண்ணொண்ணா நல்லபடியாத்தான் நடந்துகிட்டிருக்கு. பெண்ணை அழைச்சிக்கொண்டுபோய் கைலாசபுரத்துல என் சித்தி மகள் ரத்தினம் வீட்டுல விட்டாச்சி. மற்ற ஏற்பாட்டை எல்லாம் அவள் பொறுப்பாய் பார்த்துக்குவாள். நாளைக் காலையில கல்யாணம்.. தாலி கட்டுக்கு உன்னால வரமுடியாட்டாலும் மறுவீட்டிற்காவது வந்திரு.

ராமா : என்னக்கா நான் வராம இருப்பனா... உன் மகள் என் மகள் மாதிரியில்ல.. ரொம்ப பாசக்காரப் புள்ளையாச்சே.. அது கிடக்கட்டும். மாப்பிள்ளை என்ன ஜோலி பாக்காஹ?

முத் : மாப்பிள்ளை வெள்ளைக்கார துரைகிட்ட உத்தியோகம் பார்க்காகளாம். அந்த துரை பேருகூட என்னம்மோ ‘விண்டில்’னு சொன்னாங்க. அந்தப் பேரைக்கூட என்னால ஒழுங்காக சொல்ல முடியலை. வெள்ளைக்காரத் துரைமார்களின் பெயர்கள் நம்ம வாயில நுழையவா செய்யும்? மாப்பிள்ளை அந்த துரை வீட்டுல ‘பங்கா’ இழுக்கிற உத்யோகம் பார்க்காகளாம். காலணாச் சம்பளம் என்றாலும் கவர்மெண்ட் சம்பளமாச்சா.. ஒண்ணாந்-தேதியானா, வெள்ளக்காரன் காசு சும்மா டாண்ணு கைக்கு வந்திருமே!

ராமா : அது என்னக்கா ‘பங்கா’ இழுக்கிறதா..? அப்படின்னா என்ன வேலை, எனக்குத் தெரியலையே, கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லேன்.

முத் : ராமாத்தா, வெள்ளைக்கார துரைகள் நம்மள மாதிரி, கையில ஒரு ஓலை விசிறியை வச்சிக்கிட்டு காத்து வீச மாட்டாங்களாம். அவங்க பாட்டுக்கு நாற்காலியில உக்காந்து அவங்கவங்க வேலை ஜோலியைப் பார்ப்பாங்களாம். இந்த மாதிரி வேக்காடான, கோடை காலத்துல காத்து வேணுமே. அதனால தலைக்கு மேல ஒரு வட்டை கட்டித் தொங்கவிட்டு அதுல ஒரு அகலமான தட்டு மாதிரி செய்த விசிறியைக் கட்டி தொங்க விட்டிருப்பாங்களாம். ஒரு ஓரமா நின்னு ஓராள். கைப்பிடிக் கயிற்றைப் பிடிச்சி இழுக்கும்போது, துரை உக்கார்ந்திருக்கிற இடத்துல தலைக்கு மேலே தொங்குகிற அகலமான தட்டு முன்னும் பின்னும் போக, துரைக்கு நல்லாக் காத்து வீசுமாம். இந்த காத்தாடிக்குத்தான் ‘‘பங்கா”ன்னு பேராம், நான் என்னத்தக் கண்டேன். மாப்பிள்ளை வீட்டுக்குச் சொந்த பெரியப்பா ஒருத்தர், தலையாரியா இருக்கார். அவர் கிராம முனிசீப்கூட கணக்கப்பிள்ளை கூட எப்பவாவது துரையைப் பார்க்கப் போவாராம். அப்ப அந்த பங்காவைப் பாத்திருக்காராம், அவுகதான் எனக்கு பங்காவைப் பத்திச் சொன்னாக. மத்தப்படி நான் பங்காவைக் கண்டனா... கிங்காவைக் கண்டனா...?

ராமா : எக்கா, உன் மருமவன் பேரு என்னது?

முத் : அடி கூறு கெட்டவளே, காலம் ரொம்பத்தான் கெட்டுப் போச்சி.. நீ என்ன செய்வே..? எவளாவது, மகள் கெட்டப்போற மருமகனின் பெயரைச் சொல்லுவானா..? நீயும் கூசாம நாக்கு மேல பல்லப் போட்டுக் கேட்டுட்டியே.. என்றாலும் நீ கேட்டதால, உனக்கு மட்டும் சொல்லுதேன். நம்ம தெரு தலைமாட்டுல இருக்கே, தென்ன ஓலை வேய்ந்த மூக்காத்தா மதினிவீடு. அவுக புருசன் பேரு தெரியுமா.. உனக்கு, அந்தப் பேருதான், என் மருமகனுக்கும்...!

ராமா : அட... மாடசாமிதான் உன் மருமகன் பேரா? சாமி பேருதான்! அப்ப நல்ல பையனாத்தான் இருப்பான். இருக்கட்டும் யக்கா, நகைக்கு என்ன செஞ்சே?

முத் : எங்க ஆத்தாவும், ஐயாவும் சேர்ந்து என்னைக் கட்டிக் கொடுக்கும்போது, எனக்கு காது வளர்த்து ஒரு ஜோடி பாம்படமும், தண்டட்டியும் போட்டாக. அத இது நாள் வரைக்கும் நான் கழட்டி, அடகு வச்சிராம வித்திராம காபந்து பண்ணி வச்சிருந்தேன். இப்ப அதை அழிச்சி, அதோடு கொஞ்சம் தங்கமும் வாங்கிப் போட்டு, இந்த நவநாகரிக காலத்துக்கு ஏத்த மாதிரி புது தினுசாச் செய்யணும்னு, நம்ம ஊரு தங்கவேலு ஆசாரியாரிடம் கொடுத்திருக்கேன். அவரு புதுப் பாம்படத்தை இன்னைக்கு தாரேன்னு சொல்லி இருக்காரு. ஆசாரியார் பட்டரைக்கு போயி.. பாமடத்தை வாங்கிட்டு.. நான் நாளைக் காலையில பொழுது விடியுமுன்னால, நம்மூரு பொத்தைக்கு மேற்க... இருக்க கைலாசபுரத்துக்குப் போகணும், நான் போனாத்தான், மாப்பிள்ளை பொண்ணு கழுத்துல தாலிய கட்டுவாக.. அதான், இப்படி அரக்கப் பரக்கப் புறப்பட்டுகிட்டு இருக்கேன். இல்லைன்னா, உங்கிட்ட உக்கார்ந்து சாவகாசமாய் பேசிக்கிட்டிருக்க மாட்டனா...?

ராமா : சரி, சரி, நேரமாகுது, நீ போக்கா, சீக்கிரமாப் போயி, அந்த ஆசாரியை நெருக்கு.. அப்பதான் அவரு நேரங்காலத்தோடு, பாம்படத்தைச் செஞ்சி தருவாரு.. இல்லைன்னா நாளைக்குத் தாரேன், நாளான்னைக்குத் தாரேன்னு இழுத்தடிப்பாரு...

முத் : அப்ப சரி, நான் வாரண்டியம்மா, மறந்துராம மறுவீட்டு அழைப்புக்கு வந்திரு...!

ராமா : சரிக்கா, நான் வந்திருதேன் மறுவூட்டுக்கு.. இப்ப நீ ஜாக்கிரதையாப் போயிட்டு வா.. தங்கச் சாமானைப் பத்திரமா, சூதானமாகக் கொண்டுபோய்ச் சேரு... காலம் ரொம்பக் கெட்டுக் கிடக்கு.. இந்தக் காலத்துல யாரைத்தான் நம்ப முடியுது...? ஏதோ உன் மகள் கல்யாணம் நல்லபடியா முடியணும். அந்தப் பேராச்சியும் மூங்கிலடியானும்தான் உனக்குத் துணை செய்யணும்.

முத் : ம், ‘‘ஆசாரி சொல் அரைச் சொல்லும்பாக”.. அந்த மனுசன் என்ன பண்ணி வச்சிருக்காரோ? யாரு கண்டா...! (முனங்கியபடியே நடக்கலானாள் முத்தாச்சி)

காட்சி-2

இடம் : தங்காசாரியின் பட்டரை
பாத்திரங்கள் : தங்காசாரி (தங்கவேல்), முத்தாச்சி (முறுக்குப் பாட்டி)
நேரம் : மாலை நேரம்

முத் : என்ன ஆசாரியரே, இப்படி இழுத்தடிக்கீர்! நேத்து வரச் சொன்னீர் நேத்து வந்தேன், பிறகு இன்னக்கிக் காலையில் வரச் சொன்னீர். இன்னைக்கி காலையில வந்தேன். ‘‘இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு மத்தியானம் வா”ன்னு சொன்னீர். மத்தியானம் வந்தேன். பிறகு ‘‘சாயங்காலம் வா”ன்னு சொன்னீர். இப்ப சாயங்காலமும் ஆயிட்டு. பாமடத்தைத் தரப்போறீரா இல்லையா..?

தங் : எம்மா, தாயி, கோவப்படாதே, இப்படிச் செத்தோடம் உக்கார். உன் அவசரம் எனக்குத் தெரியாதா..? கல்யாணக் காரியம் என்பது எனக்குப் புரியாதா..? இடையில ஒரு அவசர வேலை, சிறுகுளம் சுப்பையா பண்ணையார் வந்து ஒரு திருமாங்கல்யத்தைக் கொடுத்து இப்ப உடனே செஞ்சி தரணும்னு சொல்லி, ராவாப்பகலா, பட்டரையிலேயே பழிகிடையா கிடக்க ஆரம்பிச்சிட்டார். பெரிய மனுஷன் பகை தொள்ளாளிக்கு ஆகுமா? அடிக்கடி வேல தருகிற மனிதன். அவர், அதனால இடையில் ஒருநாள், அன்னந்தண்ணிகூடக் குடிக்காம, ராவாப் பகலா உக்கார்ந்து, அவர் வேலையை முடிச்சிக் கொடுத்துட்டேன். இனிமே, உன் வேலைதான். இன்னும் செத்த (சிறிது) நேரத்துல உருப்படியைத் தந்திருதேன்.”

முத் : ஐயா, உங்களுக்குத் தெரியாத யோசனையா? நான் ஒத்தப்பேரி (தனி ஆள்). ஆம்பளை துணை இல்லாதவள். ஒத்த ஒரு பொட்டப் பிள்ளைன்னாலும், என் வீட்டுக்காரவுக இல்லாமல், அப்பிள்ளையை வளர்த்து ஆளாக்கி, ஒரு மாப்பிள்ளை வீடும் பார்த்துப் பேசி முடிக்கதுக்குள்ள தவிடு தாங்கிப் போச்சி. ‘‘என் வீட்டுக்காரவுக, உயிரோட இருக்கும்போதே, கூப்பிட்ட ஆட்களுக்கு வேலைக்குத்தான் போனாக.. அந்தக்கொத்து (தினக்கூலி) தான் பார்த்தாக. அவுகளும் நான் சின்ன வயசா இருக்கும்போதே பாம்பு கடிச்சதால ‘‘திருநாடு” (மேல் உலகம்) போய்ச் சேர்ந்துட்டாக. என் கையில ஒரு முறுக்கு யாவாரம் கிடச்சிது, அதை வச்சுத் தாயும் பிள்ளையும் பசி, பட்டினி இல்லாமல் வயித்தைக் கழுவத்தான் முடிஞ்சது. இடையில, காலும், அரையுமா சிறுவாடாகச் சேர்த்து வச்சது, கொஞ்சம், கையிலயும், மடியிலயும் இருந்திச்சி, அதை வச்சித்தான், இப்ப இந்தக் கல்யாணத்தை எடுத்து நடத்த முடிஞ்சுது. பெத்த பிள்ளையை ஒரு மகராசன் கையில பிடிச்சுக் கொடுத்துட்டா பெத்த கடமை முடிஞ்சிடும். பிறகு நிம்மதியா கண்ணை மூடலாம்.

தங் : முத்தாச்சி, இருந்தாலும் நீ கெட்டிக்காரிதான். நாலு பேரப்போல, ‘‘தாம், தூம்” என்று ஆடம்பரம் பண்ணாம, சிக்கனமா, இருந்துக்கிட்டு, முறுக்கைச் சுட்டு நாலு ஊருக்கு போய் வித்துக்கிட்டு, நாலு காசு, பணமும் சம்பாதிச்சி இப்ப பெத்த புள்ளையை ஜாம், ஜாம்னு கெட்டிக் கொடுக்கப் போறே! நீ ஒண்ணும் கவலைப்படாதே! உனக்கு அந்தப் பேராச்சியும், மூங்கிலடியானும் ஒரு குறையும் வைக்க மாட்டாங்க. அது சரி, உன் மகளை எந்த ஊர்ல கட்டிக் கொடுக்கப் போறே?

முத் : நம்ம ஊருக்கு மேக்கால இருக்க, கைலாசபுரத்துக்குத்தான் கட்டிக் கொடுக்கப் போறேன். அங்க எனக்கு என் வீட்டுக்காரர் வழியில நிறைய சொந்த பந்தங்கள் இருக்கு.. என் மதினிக்காரி துப்புலதான் இந்த மாப்பிள்ளை வீடு வந்தது. அங்க, என் வீட்டுக்காரரோட சொந்த பந்தங்கள் நல்ல ‘‘சுதை”யோடே இருக்காங்க.. புள்ளையை நல்லபடியாப் பார்த்துக்குவாங்க.. அதான் அந்த மாப்பிள்ளைக்கு கெட்டிக் கொடுக்கேன்.. மாப்பிள்ளையும் நல்ல பிள்ளை, மாப்பிள்ளைப் பையனை எனக்குச் சின்ன பிள்ளையில இருந்தே தெரியும், எந்தக் கெட்ட பழக்கமும் அவுகளுக்கு கிடையாது. அடிச்சிட்டு ஒரு வாய்க் கஞ்சைக் குடுத்தாக்கூட குடிச்சிக்குவாக.. அதோட வெள்ளைக்கார துரைகிட்டயில்ல வேலை பார்க்காக..

தங் : அப்படியா... ரொம்ப சந்தோசம், உன் மகளுக்கும் ஒரு குறையும் வராது. யாருக்கு என்ன கெடுதல் செஞ்சிருக்கோம். பேராச்சி நமக்கு ஒரு குறையும் வைக்க மாட்டா. என் கைனால பாமடம் செய்துகொடுத்த பிள்ளைகள் எல்லாம், பெத்துப் பெருவாழ்வு வாழுறாங்க. என் ‘கைராசி’ அப்படி. அதனாலதான், எனக்கும் நிமிடி முடியாம வேலை வந்துக்கிட்டே இருக்கு.. அது கிடக்கட்டும். கைலாசபுரம் போகணும்னு சொல்லுதியே.. ஊருக்கு மேற்கே இருக்கிற பொத்தைக் காட்டைக் கடந்துல்ல போகணும். இப்பமே பொழுது கண்ணுக்குள்ள விழுந்துட்டே, தங்கச் சாமானை வேற கொண்டுக்கிட்டுப் போக வேண்டியதிருக்கே, மலங்காட்டு வழியா, ஒத்தயில போகவா, போற? இப்ப இந்த வெள்ளைக்காரங்க ஆட்சியில ஊர்க்காவல்கூட கிடையாதே. ராத்திரியில் காடுகரைகளுக்குப் போயிட்டு வரக் கூடப் பயமா இருக்கு. அதனால நான் சொன்னேன்னு கேளு. யாரையாவது ஒரு இளவட்டப் பிள்ளையை துணைக்கிக் கூட்டிக்கிட்டுப் போ.. பிறகு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிட்டுன்னா.. உன்னால தாங்க முடியுமா..? கல்யாணக் காரியத்தை முன்னால வச்சிக்கிட்டு ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா..?

முத் : ஆசாரியாரே, நீர் சொல்லுறது எல்லாம் சரிதான், இப்ப போய் நான் கூப்பிட்டா எந்த இளவட்டப் பிள்ளை எனக்குத் துணைக்கு வருவாம்? நீர் வேலையை முடிச்சிப் பாமடத்தைத் தாரும். நான் அடிமடியில ஒழிச்சி வச்சிக்கிட்டு எப்படியாவது சாமானைக் கல்யாண வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்திடுவேன். அந்தக் கவலை உமக்கு வேண்டாம். இருட்டு, வழியில ஒத்தையில போகணுமேன்னு பயந்துதான், சீக்கிரம் உருப்படியைச் செஞ்சி தாரும்ன்னு கெஞ்சினேன். நீருதான், அன்னா, இன்னான்னு காலத்தைக் கடத்திட்டீர், இப்ப தங்கச் சாமானைக் கொண்டுக்கிட்டு ஒத்தயில போகாதேன்னு பயங்காட்டுதீரு! எனக்கு அந்த பேராச்சியும், மூங்கிலடியானும் துணைக்கு இருக்கிறவரை எந்தப் பயமும் இல்லை. ஒவ்வொரு சொட்டு ரெத்தமும் சுண்டும்படியா, ராவாப்பகலா, முறுக்குச் சுட்டு விற்று உழைத்த முதல், இதை யாரும் அபகரிக்க மாட்டாங்க. அப்படியே உழைச்ச முதலைக் கொள்ளை இடணும்னு நினைச்சி எம் பொருளை அபகரிச்சாங்கன்னா, அவங்க விளங்காமத்தான் போயிருவாங்க!

தங் : எம்மா, தாயி நீ சொல்வது எல்லாம் சரிதான், நானும் இல்லைன்னு சொல்லலை. நக்குத நாயி செக்கைக் கண்டுதா? சிவலிங்கத்தைக் கண்டுதாங்கறது பழமொழி. கொள்ளைக்காரப் பெயல், நல்ல முதல், கெட்ட முதல்ன்னு பார்ப்பானா? அவன் என்ன ஜோசியக்காரனா? உழைச்ச முதல் எது உழைக்காத முதல் எதுன்னு பார்த்துக் களவாங்க! இப்ப சமீப காலமா, நம்ம ஊருக்கு மேற்கால இருக்கிற பொத்தையில, சங்குத் தேவன்னு ஒரு பெரிய கொள்ளைக்காரன் தங்கி இருக்கான்னு கேள்விப்பட்டேன். நாலு நாளைக்கு முன்னாலதான். நம்ம மேலப்பண்ணை வீட்டுல புகுந்து இரும்புப் பெட்டியை உடைச்சி ரெண்டாயிரம் ரூபாயைக் களவாண்டுக்கிட்டுப் போயிட்டானாம். ரெண்டு நாளைக்கு முன்னால, காசுக்கடைச் செட்டியார், பத்தமடைக்கு வட்டித் துட்டு பிரிக்க போயிட்டுத் திரும்பி வார வழியில, அவரிடம் இருந்த காசு பணத்தை எல்லாம் சங்குத் தேவன் புடுங்கிட்டு உட்டுட்டான்னு சொல்லுதாங்க. அதனால ஜாக்கிரதையா தங்கச் சாமானைக் கொண்டுக்கிட்டு போ.. இந்தா உருப்படிகளை நல்லாப் பார்த்துக்க. சூதானமாக மறைச்சி வச்சிக்க.. கல்யாணத்தை நல்லபடியா முடிச்சிட்டு வந்து கூலியைக் கொடு போதும்.

முத் : ஏதோ, இந்தமட்டுக்காவது நகையைச் செஞ்சி கொடுத்தீரே, உமக்குக் கோடி புண்ணியம். ஆசாரியாரே, நாம் போயிட்டு வாரேன். கல்யாணக் கதை எல்லாம் முடிந்த பிறகு சாவகாசமாக வந்து உம்முடைய கூலியைத் தருகிறேன். கூலியோடு கூடவே பிள்ளைகளுக்கு முறுக்கும் கொண்டுக்கிட்டு வாரேன்.

காட்சி - 3

இடம் : மலையடிவாரம், காட்டு வழி, ஒத்தையடிப்-பாதை
காலம் : முன்னிரவு நேரம், நிலாக்காலம்
பாத்திரங்கள் : முத்தாச்சி (முறுக்குப்பாட்டி), சங்குத்தேவன் (கொள்ளைக்காரன்)

(இருளில் ஒத்தையடிப் பாதையில், தனி வழியே போவதனால், முறுக்குப்பாட்டி முத்தாச்சி ஒரு நாட்டுப்புறத் தெம்மாங்குப் பாடலைப் பயம் தோன்றாமல் இருக்கப் பாடிக்கொண்டே நடக்கிறாள்)

முத் : (மனதிற்குள்) ஐயா, மூங்கிலடியானே..! பேராச்சித்தாயே! ஏதோ நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள் என்ற தைரியத்தில், கிளம்பிவிட்டேன். விடிந்தால் என் மகளுக்குக் கல்யாணம். என்னையும் என் நகைகளையும் நீங்கள்தான் காபந்து பண்ணி ஊருக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கணும்.

சங்கு : (கரடுமுரடான குரலில்) யாரது? பொம்பளப் பாட்டுச் சத்தம் மாதிரிக் கேக்குது..?

முத் : ஐயா, சாமி, நான் முறுக்குப் பாட்டி முத்தாச்சி.. கைலாசபுரத்துக்குப் போய்கிட்டு இருக்கேன். நீங்க யாரு? உங்க சத்தம் மட்டுந்தான் கேக்கிறது. உங்க உருவம் கண்ணுக்குத் தெரியலையே! ஏற்கனவே எனக்கு வயசாயிட்டு, இந்த மங்கலான நிலவு வெளிச்சத்துல, ஒரு எழவும் தெரிய மாட்டங்குது. கிட்ட வாங்க ஐயா, நான் வயசு காலத்துல ஒத்தயில நடக்க மாட்டாம நடந்து போயிக்கிட்டு இருக்கேன், நீங்க கிட்ட வந்தீங்கன்னா, எனக்கு வழித்துணையா இருக்கும், பேச்சுத் துணைக்கு ஆள் கிடச்ச மாதிரியும் இருக்கும்.

சங்கு : பாட்டி இப்ப, நான் கிட்ட வந்துட்டேன், என்னை இப்ப நல்லாப் பார்த்துக்க.

முத் : அட, என்னப்பா, நீயி, இப்படி கப்படா மீசையும், தாடியுமா, கக்கத்துல கம்பும், தலப்பாக் கட்டும், பார்க்க பெரிய கொள்ளைக்காரன் மாதிரி இருக்கே.. நீர் உடுத்தி இருக்கிற வேட்டியத் துவச்சே, பல நாளா, இருக்கும் போல இருக்கே.. என்னம்மா, புளுங்கி வீசுது, நாலு மனுஷர், மக்களை மாதிரி முகத்தைச் சிரைச்சி, வேட்டி, சட்டையைத் துவச்சி உடுத்திக்கிட்டு வரக் கூடாதா..? ஏன் இப்படி நாடோடி மாதிரி இருக்கே? பேசாம, என்கூட நான் போகிற ஊருக்கு வா.. அங்க என் தாய் பிள்ளைகள் ஏராளமா இருக்காங்க. ரெண்டு, மூணு நாள், அங்க தங்கி, குளிச்சி மொழுகி, துணி மாத்திப் புது மனுஷனாகலாம்.

சங்கு : தாயி, நீ யாரோ? யார் பெத்த புள்ளையோ? முன்னப் பின்னத் தெரியாத என்மேலே இவ்வளவு அக்கரை காட்டுதியே! நீ நல்லா இருக்கணும். நீ. நல்லாதான் இருப்பே, என் தலைவிதி இது. இப்படி காட்டுக்குள்ள கிடந்து சாவுதேன். சரி, அது கிடக்கட்டும், முதல்ல நீ யாரு, நீ எங்கிருந்து வாரே? எந்த ஊருக்குப் போற? என்ன காரியமா, இப்படி ரா வேளையில, இந்தக் காட்டு வழியா ஒத்தயில போற? உனக்கு கள்ளர்கள் மேல் பயம் இல்லையா? பேய் பிசாசு மேலயும் நம்பிக்கை இல்லையா?

முத் : அடேயப்பா, எத்தனை கேள்விகளை கேள்வி மேல கேள்வியா அடுக்கிட்டீரு? எனக்கு சொந்த ஊரு ஆயங்குளம். இப்ப நான் கைலாசபுரத்திற்குப் போய்க்கிட்டு இருக்கேன். நான் பரம ஏழை. நான் பிறந்த வீட்டுலயும், பெருசாச் சொத்து சுகம் ஒண்ணும் கிடையாது. நான் வயசுக்கு வாரது வரையிலயும், என் கூடப் பிறந்த தங்கச்சியை வீட்டுல வச்சிக் கவனிக்கிறதும், காடு, கரைகளுக்கு வேலைத் தலத்துக்கு ஆய், அப்பனுக்கு கஞ்சி கொண்டுபோறதும்தான் எனக்கு வேலை. சாயங்கால நேரத்துல, காடு கரைகளுக்குப் போய் விறகு சுள்ளிகளைப் பெறக்கிக்கிட்டு வருவேன்.. அது ராத்திரி சோறு பொங்கறதுக்கு ஆகும்.

கொஞ்சம் வளர்ந்த பிறகு, என்னை ஆடு மேய்க்க அனுப்பிட்டாக. அதுக்குள்ள என் தங்கச்சிக்காரி கைநிமுந்து, காடு, கரையில் வேலை பார்க்கிற, ஆய், அப்பனுக்குக் கஞ்சி கொண்டுக்கிட்டு போக ஆரம்பிச்சிட்டா.

நான் மழைக்குக்கூட பள்ளிக்கூடத்துல ஒதுங்கினதில்லை! நான் வயசுக்கு வந்ததும் ஒரு மாப்பிள்ளைப் பார்த்துக் கட்டிக் கொடுத்துட்டாக.

சங்கு : அம்மா, தாயே! நான் உன்னிடம் உன் பிறந்த கதையைச் சொல்லு, வளர்ந்த கதையைச் சொல்லுன்னு கேட்டனா..? எந்த ஊருக்குப் போறன்னு சொல்லு, அது போதும்.

முத் : எய்யா, உன்னைப் பார்த்ததும் முதல்ல, நான் பயந்துதான் போயிட்டேன். இந்த மீசையையும், தாடியையும், தலைப்பாக் கட்டையும் பார்த்தா யார்தான் பயப்படாம இருப்பா? ஆனா, உன்னிடம் பேச்சுக் கொடுத்த பிறகுதான், உன்னைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டேன்.

நான் பயந்துக்கிட்டே வந்தேன். ராத்திரி நேரத்துல. இப்படிக் காட்டு வழியா, தன்னந்தனியா போக வேண்டியதிருக்கேன்னு நினைச்சி, அந்தப் பேராச்சித் தாயையும், மூங்கிலடியானையும் மனசுக்குள்ளேயே நினைச்சு கும்பிட்டுக்கிட்டேதான் நடந்தேன். அந்த ரெண்டு சாமிகளும் சேர்ந்துதான், எனக்கு வழித்துணையா உன்னை அனுப்பி வச்சிருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன்.

ஏதாவது கதை மாதிரி சொல்லிக்கிட்டே நடந்தால், பயமே தோணாதுன்னு நினைச்சிதான், என்னோட சொந்தக் கதையைச் சோகக் கதையை உன்னிடம் சொல்ல ஆரம்பித்தேன். நீ என்னடான்னா என் கதையைச் சொல்லவிட மாட்டங்கே..

சங்கு : சரி, சரி, அப்பன்னா, உன் சொந்தக் கதையைச் சொல்லு, உன் கதையை நானும் கேட்டுக்கிடுதேன்.

முத் : என்னக் கெட்டிக்கொடுத்த இடத்துலேயும் வாய்ப்பு வசதி ஒண்ணும் இல்லை. என் வீட்டுக்காரம் கையையும், காலையும்தான் சொத்து சுகமா வச்சிருந்தாக..! பத்து விரலால உழைச்சி, அஞ்சு விரலால அள்ளிச் சாப்பிடணும்கிற நிலையிலதான் அவுகளும் இருந்தாக.

யாரு செஞ்ச பாவமோ, ஒரு நாள் வயக்காட்டுல இருந்து, இருட்டுன பிறகுதான் வந்தாங்க. அப்ப எப்படியோ கால் தவறி ஒரு பாம்பு மேல மிதிச்சிட்டாக. அதனால, அந்தப் பாம்பு அவுகளைக் கடிச்சிட்டு. அந்த இடத்துலேயே நுரை தள்ளிச் செத்துட்டாக.

எனக்கு ஒத்த ஒரு பொட்ட பிள்ளைதான் பிறந்திச்சி. அந்தப் புள்ளையும் ஏந்து பிள்ளையா இருக்கும்போது, அவுக மண்டையைப் போட்டுட்டாக, அன்னையில இருந்து நான் முறுக்குச் சுட்டு யாவாரம் பார்க்க ஆரம்பிச்சேன். அதனால அஞ்சு வயசுப் பிள்ளைகூட என்னை முறுக்குப் பாட்டின்னுதான் கூப்பிடும். என் நெசத்துப் பேரு நிலைக்கலை. முறுக்குப் பாட்டின்ன பேருதான் நிலைச்சிருச்சி.

முறுக்கு சுட்டு நாலு ஊருக்கு, வீடு, வீடாக் கொண்டுக்கிட்டுப் போயி வித்து, யாவாரம் பார்த்து, அதுல கிடைச்ச காசு, பணத்தைக் காலும், அரையுமாச் சேர்த்து வச்சி, நகை நட்டு உண்டுபண்ணினேன்.

என் மகளும், வளர்ந்து ஆளாயிட்டா(ள்) அவளுக்கு, இந்த பொத்தைக்கு மேற்க இருக்க, கைலாசபுரத்துல மாப்பிள்ளை பார்த்துப் பேசி முடிச்சிட்டேன். நாளைக் காலையில விடிஞ்சாக் கல்யாணம், பெண்ண முன்கூட்டியே அழைச்சிக்கிட்டுப் போயிட்டாங்க. என் மகள் இப்ப, என் தங்கச்சிக்காரி வீட்டுல, கைலாசபுரத்துலதான் இருக்காள்.

எங்க ஊரு தங்கவேல் ஆசாரி இடம், என் மகளுக்கு நகை செய்யக் கொடுத்திருந்தேன். அவரு, அன்னா, இன்னான்னு இம்புட்டு நேரமாக்கிட்டாரு. இப்பதான், செஞ்சு கொடுத்தாரு. நகையை அதை வாங்கி, இடுப்புல முடிஞ்சி வச்சிக்கிட்டுத்தான் இந்த காட்டு வழியில ஒத்தயில நடந்து வாரேன். ஊர்ல இருந்து புறப்படும்போது தங்கவேல் ஆசாரி, ஏம்மா, தாயி, அந்தக் காட்டு வழியே ஒத்தயில போகாதே! அங்க கள்ளன் கிடக்கான், கத்தி வச்சிருக்கான்னு என்னப் பயங்காட்டினாரு. நான் கடவுள் விட்ட வழின்னு நினைச்சி தைரியமா தங்க நகையையும் வச்சிக்கிட்டு கள்ளன் வருவானோ..? நகையைப் புடுங்கிட்டுப் போயிடுவானோன்னு பயந்து நடுங்கிக்கிட்டுத் தன்னால பாட்டும் படிச்சிக்கிட்டு இந்தக் காட்டு வழியா நடந்து வந்துகிட்டு இருந்தேன். நான் கும்பிடுகிற அந்த பேராச்சித் தாயும், மூங்கிலடியானும் என்னைக் கைவிடலை. உன்னை வழித்துணையா அனுப்பிட்டாங்க.

சங்கு : பாட்டி, உன் கதையைக் கேட்டாலே, கள்ளாளிப் பெயலுக்குக்கூட இரக்கம் வந்திரும். ஏழைபாழைகளுக்கு யாரும் இடைஞ்சல் கொடுக்கக் கூடாதுங்கறதுதான் என்னோட எண்ணம். பாட்டி, நீ பயப்படாம என்னோடு வா, கைலாசபுரம் கோயில் கோபுரம் தெரியும், ஊர் எல்லைவரை உன்னோடு துணைக்கு நான் வருகிறேன். அதற்கு பிறகு நீ ஊருக்குப் போயிரு. நான் என்னோட வழியே போயிருதேன். இது முன்நிலாக்காலம், சீக்கிரம் முதல் ஜாமத்திலேயே நிலா அடஞ்சிடும். அதனால காலை விரசாப் போட்டு எட்டி நட.

முத் : எப்பா, என்னோட கதையை நான் சொன்னேன். நீயும் கேட்டுக்கிட்டே. இப்போ உன்னோட கதையை நீ சொல்லேன். நானும் கேட்டுக்கிடுதேன்.

சங்கு : என்னோட கதை நாலு மனுஷர் மக்களிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ளும்படியான கதை இல்லை, என் கதையை யாரும் தெரிஞ்சிக்க வேணாம். அதோ, கோயில் கோபுரத்தின் உச்சி தெரிகிறது. இன்னும் சற்று நேரம் நடந்தால் போதும், கைலாசபுரத்தின் ஊரின் எல்லை வந்திரும்.

முத் : சரி, உம்ம கதையைச் சொல்ல வேணாம். வழி நடை அலுப்புத் தெரியாமல் இருக்க ஒரு தெம்மாங்குப் பாட்டாவது பாடும், உம்ம பாட்டைக் கேட்டுக்கிட்டே நானும் நடந்து வாரேன்.
(சங்குத்தேவன், ஒரு தெம்மாங்குப் பாட்டை ராகத்துடன் பாடுகிறான்)

முத் : ஏம்ப்பா, என்ன அருமையா பாடுகிறீர், ஆளைப் பார்த்தா முரடா இருக்கிறீர், ஆனால் உம்ம குரல் தேனா இனிக்கே..!

சங்கு : அம்மா, தாயே, இதோ, ஊர் எல்லை வந்தாச்சு, போயிட்டு வா. உன் மகள் கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும்..! உன் மகளுக்கு இந்த தங்கச் சங்கிலியை என் சீதனமாகக் கொடுத்திரு. இந்தா இந்தச் சங்கிலியை வாங்கிக்க.

முத் : எய்யா, நீர் இதுவரை எனக்கு துணையா வந்ததே போதும். நான் உழைத்த முதலில் செய்த நகையைக் காப்பாத்திவிட்டீரே. அதுவே போதும்! உம்ம முதலு எனக்கு வேண்டாம். அந்தச் சங்கிலியை நீரே வச்சிக்கரும்.. நான் போயிட்டு வாரேன்.. ஆயிசோட அந்த பேராச்சி, மூங்கிலடியான் புண்ணியத்துல புளைச்சிக் கிடந்தா, இனி ஒரு தரம் பார்ப்போம்.

சங்கு : அம்மா, தாயி, என்ன உன் உடன் பிறக்காத தம்பியா நினைச்சுக்கோ. இதை உன் மகளுக்குத் தாய்மாமன் சீரா நினைச்சிக் கொடு, இந்தா பிடி, இந்தச் சங்கிலிய வாங்கிக்க..

முத் : அட, என்ன நீரு இப்படி, தங்கச் சங்கிலிய என் கையில போட்டுட்டுப் போறீரு! இதுவரை என்னோடு துணைக்கு வந்தீரே! உம்ம பெயர் என்னன்னு சொல்லலியே... இந்த நகையை யார் தந்தான்னு சொல்லி, எம் மகள் கழுத்தில் போட? உம்ம பெயரையாச்சும் சொல்லும் தெரிஞ்சிக்கிடுதேன்.

சங்கு : எம்பேருதான் சங்குத்தேவன், இந்த ஊர் உலகமே கொள்ளைக்காரன்னு சொல்லி எந்தப் பேரைக் கேட்டு நடுநடுங்குதோ... அந்தக் கொள்ளைக்காரச் சங்குத்தேவன் நான்தான். நான் பொல்லாதவங்களுக்குத்தான் பொல்லாதவன், உன்னை மாதிரி ஏழை பாளைகளுக்கு நான் காவல்காரன், அதுதான் சங்குத்தேவனின் தர்மம்!

காட்சி - 4

இடம் : திருமண வீடு
நேரம் : காலை நேரம்
பாத்திரங்கள் : முத்தாச்சி, முத்தாச்சி மகள் முருகாத்தாள்.

முத் : அந்தப் பேராச்சி தாயி புண்ணியத்துலேயும், மூங்கிலடியான் புண்ணியத்துலயும் நல்லபடியா என் மகள் திருமணம் நடந்திருச்சி.

மகள் : (ராமாயி) ஆத்தா, தங்கச் சாமாக்கள் அழகா இருக்கு, தங்கவேல் ஆசாரியார், நல்லபடியா செய்திருக்கிறார், பாமடத்தை. அது சரி ஆத்தா, தங்கச் சங்கிலி தந்தியே, கழுத்துல போட்டுக்கிடச் சொல்லி, அது ஏது? யார்ட்டயாவது இரவல் வாங்கிட்டு வந்தியா?

முத் : என் கூடப் பிறக்காத பிறப்பு ஒருத்தன், என் கூடப் பிறந்ததா நினைச்சி, இது என் தாய்மாமன் சீர்னு நினைச்சி, உன் கழுத்துல போடச் சொல்லித் தந்தான். ரொம்ப நல்ல மனுஷன் அவன். பார்க்கத்தான் ஆளு ரொம்ப முரடனா இருந்தான். ஆனால் ஏழை, பாளைகள் மேல் இரக்கம் உள்ள மகராசன் அவன்.

முரு : அப்படியா, அவரு பேரு என்னன்னு சொல்லம்மா..

முத் : அந்த மகராசன் பேரு சங்குத்தேவன்.

முரு : என்னது சங்குத்தேவனா? அவரைப் பெரிய கொள்ளைக்காரன்னுல்ல சொல்லுவாங்க.. நீ, என்னடான்னா, அவரைப் போயி மகராசன்னு சொல்லுதியே!

முத் : அவன் யாரு முதலை எப்படி கொள்ளை அடிச்சானோ? எனக்குத் தெரியாது! அந்த பேராச்சிக்குத்தான் தெரியும்! ஆனால் என்னைப் பொருத்தவரைக்கும் அவன் மகராசன்தான். தலைநாள்ல மகளே, உன் வயித்துல ஒரு ஆம்பளைப் பிள்ளை பிறந்ததுன்னா, அந்த பிள்ளைக்கு சங்குத்தேவன்னுதான் பேரு வைக்கணும். தாழம்பு ஏடெல்லாம் முள்ளாகத்தான் இருக்கு. அதனால, அதைப் பறிச்சி தலையில வைக்காமலா இருக்காங்க, பொம்பளைங்க?குறையில்லாத மனுசர் இந்த உலகத்துல ஏது? அவன் திருடனாகவே, இருக்கலாம். ஆனா அவன் எனக்குக் கடவுள் மாதிரி, அவனைக் கை எடுத்துக் கும்பிடணும். சங்குத்தேவனின் தர்மமே தர்மம்!

குறிப்பு: காவியங்களை மறு எழுத்தில் புத்தாக்கம் செய்வதைப் போல அமரர் புதுமைப்பித்தனின் சங்குத்தேவனின் தர்மம் என்ற சிறுகதையை நாடகமாக்கிப் பார்க்கும் முயற்சியில் உருவானது இப்படைப்பு

அரைக்காசு

ஒரு காசுக்கு யாரிடம் போய்ச் சில்லரை வாங்க என்று தெரியவில்லை. நாசுவர் கூலியை வாங்காமல், இடத்தை விட்டுப் போவதாகத் தெரியவில்லை. ஐயர் ஆத்துக்காரிக்கோ அரைக் காசை அதிகமாகக் கொடுக்கவும் மனசு வரவில்லை. அதனால் அந்த ஐயராத்தம்மா, நாசுவரிடம், "என் மகனுக்கு முடி சிரைத்ததற்கு கூலி அரைக்காசு, மீதம் உள்ள அரைக்காசுக்கு எனக்கு மொட்டை போட்டு விடு'' என்று சொல்லி தலையை நீட்டினார்.

நாட்டுப்புறத் தரவுகளைச் சேகரிப்பதாலும், அவைகளைப் பதிவு செய்வதாலும் தொலைந்து போன பல வழக்காறுகளையும், சமூகப் பழக்க வழக்கங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஒரு சிற்பத்தைப் பார்க்கும் போது, அச்சிற்பத்தில் உள்ள கலை நயத்தை மட்டும் பார்க்காமல், அச்சிற்பத்தில் உள்ள பெண் அணிந்துள்ள நகைகள், அவள் உடை உடுத்தி இருக்கும் விதம் என்று பலவற்றையும் நாம் கவனிக்க வேண்டும். எனவேதான் ரசிகமணி டி.கே.சி அவர்கள், “கோயில்களில் இருக்கும் சிற்பங்களுக்கு எண்ணெய் பூசியும், துண்டுகள் கட்டியும், அச்சிற்பங்களின் அழகை மறைக்காதீர்கள். அச்சிற்பத்தைச் செய்த சிற்பி ஏற்கனவே, அதற்கு ஆடை அணிகலன்களையும் அணிவித்துத்தான் அச்சிற்பங்களைச் செய்திருக்கிறான். நீங்கள், கோயில் சிற்பங்களின் மேல் எண்ணைய் பூசி அல்லது அச்சிற்பங்கள் மேல் வண்ணம் பூசி, அல்லது சுண்ணாம்பு கொண்டு வெள்ளை அடித்து விடுகின்றீர்கள். அதனால், அச்சிற்பியின் கை வண்ணமும் மறைந்து போகிறது '' என்று அடிக்கடி கூறுவார்கள் என நேர் பேச்சின் போது கி.ரா அவர்கள் என்னிடம் பலமுறை கூறி இருக்கின்றார்.

ரசிகமணி டி.கே.சி அவர்கள் சொன்னது உண்மை தான் என்பதை தற்போது சிறு தெய்வ வரலாறுகளைத் திரட்ட பல கோயில்களுக்குச் சென்று அக்கோயில்களில் உள்ள சிற்பங்களை மிக நெருக்கமாகப் பார்த்த போது தெரிந்து கொண்டேன்.

இரண்டு தலைமுறைக்கு முன்பு உள்ள ஒரு புகைப்படம் நமக்கு கிடைத்தால் அப்புகைப்படத்தில் இருந்து அப்பகுதி மக்கள் எத்தகைய ஆடைகளை அணியும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள், எத்தகைய அணிகலன்களை அணிந்திருந்தார்கள், எப்படி சிகையலங்காரம் செய்திருந்தார்கள், எந்த மாதிரியான காலணிகளை அணிந்திருந்தார்கள் என்பன போன்ற சேதிகளை நாம் அறிந்து கொள்ள முடியும்.

அதுவேதான் ஒரு பழமொழி அல்லது சொலவம் நமக்குக் கிடைத்தால் அப்படி மொழியை ஆய்வு செய்வதால் நமக்கு அக்காலத் தமிழ்ச் சமூகத்தின் சில பண்பாடுகளை பற்றித் தெரிய வரும்.

அதை இனி ஒவ்வொரு இதழிலும் பார்ப்போம்.

எங்கள் ஊரில் ஒருவர் பலசரக்குக் கடைக்கு சாமான்கள் வாங்க வந்திருந்தார். மொத்தம் தொண்ணூற்றி ஐந்து ரூபாய்க்கு சாமான்கள் வாங்கினார். கடைக்காரரிடம் நூறு ரூபாயைக் கொடுத்து விட்டு மீதி ஐந்து ரூபாயைத் தாருங்கள் என்று கேட்டார். கடைக்காரர் மீதி ஐந்து ரூபாய்க்கு சில்லரை இல்லை. பிறகு கடைக்கு வரும் போது ஐந்து ரூபாயை வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

சாமான் வாங்கியவர் மீதி ஐந்து ரூபாய்க்குப் பதில் ‘கடுகு' கொடுத்து விடுங்கள் என்றார்.

அப்போது கடையில் என்னருகில் நின்ற பெரியவர் ஒருவர் மீதி ஐந்து ரூபாய்க்குப் பதில் கடுகு கேட்டவரைப் பார்த்து, அரைக்காசுக்கு ஐயராத்தம்மா மொட்டை போட்டுக் கொண்ட கதையாக இருக்கிறதே! என்றார்.

அந்தச் சூழலில் பெரியவர் சொன்ன அந்த வாக்கியத்தை நான் வெகுவாக ரசித்தேன். பெரியவரைத் தனியே அழைத்து “நீங்கள் சொன்னது பழமொழியா?'' என்று கேட்டேன்.

பெரியவர், "தம்பி அது பழமொழி அல்ல... அது ஒரு சொலவம் என்றார். அப்பத்தான் எனக்குப் பழமொழிங்கிறது வேற.. சொலவம் என்கிறது வேற என்ற விபரம் புரிந்தது.

நான் பெரியவரை, ஒரு வேப்பமரத்து நிழலுக்கு கூட்டிக்கிட்டு போய், அந்தச் சொலவத்துக்கு என்ன அர்த்தம்னு எனக்குத் தெரியலையேன்னு கேட்டேன்.

பெரியவர், அந்தச் சொலவத்துக்கான விளக்கத்தை ஒரு கதை போல சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு ஊர்ல ஒரு கோயில் இருந்திச்சு. அந்தக் கோயில் காரியங்களைப் பார்க்கிறதுக்காக ஒரு ஐயரைக் குடும்பத்தோடு அந்த ஊர்ல கொண்டாந்து குடி வச்சிருந்தாங்க, அந்த ஊர் மக்கள்.

ஒரு நாள் ஐயர் பாம்பு கடிச்சு செத்துட்டார். ஐயர் பொண்டாட்டி தாலியை அறுத்திட்டு மொட்டைப் பிராமணத்தியா அந்த குக்கிராமத்துலயே இருந்தாள். அவளுக்கு ஒரு ஆம்பளப் புள்ளை இருந்தான்.

அது ஒரு குக்கிராமம்ங்கிறதால அந்த ஊர்ல வண்ணாரோ, நாசுவரோ கிடையாது.

வண்ணாரையோ, நாசுவரையோ கூப்பிடனும்னா தாய்க் கிராமத்துக்குப் போகிறவர்களிடம் சொல்லி விடனும் அல்லது யாராவது போய் கூப்பிட்டுட்டுத்தான் வரனும். தாய்க்கிராமத்துக்குப் போகனும்னா, நடுவழியில இருக்கிற ஆத்தைக் கடந்துதான் போகனும்.

ஐயர் பொண்டாட்டி ஏற்கனவே தாலிய அறுத்துட்டு தலையைச் சிரைச்சி போட்டுகிட்டு, வெள்ளைச் சேலை உடுத்திக் கிட்டு வீட்டுக்குள்ளே இருந்தாள். அவள் பையனுக்கு நிறைய முடி வளர்ந்துட்டு பையனுக்கு உச்சியில குடுமி வச்சிட்டு, மத்த முடியை எல்லாம் சிரச்சி விடனும்னு நினைச்சாள் தாய்க்காரி. தன் வீட்டுக்கு அழுக்கு எடுக்க வந்த பொம்பளைக்கிட்ட தாய்க்கிராமத்துல இருக்கிற நாவிதரை என் வீட்டுக்கு வந்து பையனுக்கு குடுமி வச்சி சிரைக்கச் சொல்லுன்னு தாக்கல் சொல்லி அனுப்பினாள்.

மறுநாள் தாய்க்கிராமத்தில் இருந்து நாசுவர் பெட்டியோடு ஐயராத்தம்மா வீட்டுக்கு வந்தார். கத்திப் பெட்டியை வீட்டுத் திண்ணையில் வச்சிட்டு, நாசுவர் குரல் கொடுத்தார்.

ஐயராத்துக்காரி மகனை முடிவெட்டிக் கொள்ள அனுப்பி வைத்தாள். நாசுவரும் பையனுக்கு நடுமண்டையில் குடுமி ஒதுக்கி, மற்ற இடங்களில் மொட்டை அடித்தார்.

மொட்டை அடித்து முடித்ததும் ஐயராத்துக்காரி, "பையனுக்கு முடி வெட்ட எவ்வளவு கூலி'' என்று கேட்டாள். நாசுவர் "அரைக்காசு கூலி என்று பதில் கூறினான்.

ஐயர் ஆத்துக்காரியிடமோ, ஒரு காசு முழுசாக இருந்தது. எனவே நாசுவரிடம் ஒரு காசை (நாணயம்) கொடுத்து "உனக்கு கூலி போக மீதி அரைக்காசைக் கொடு' என்று கேட்டாள்.

நாசுவரோ பாவம், அன்னன்னைய பாட்டிற்கு கிடைக்கும் கூலியைக் கொண்டு தான் ஜீவனைக் கழிச்சிக்கிட்டு இருந்தார். அவரிடம் எப்படி சில்லறை இருக்கும். எனவே, என்னிடம் அரைக்காசு மீதம் கொடுக்க சில்லரை இல்லை என்றார்.

அதோ ரொம்பக் குக்கிராமம். மொத்தமே, அந்தக் குக்கிராமத்தில் நாற்பதோ, ஐம்பதோ வீடுகள் தான் இருந்தன. அந்தக் குக்கிராமத்தில், எந்தக் கடையும் கிடையாது. எந்த வியாபாரியும் அந்த ஊரில் கிடையாது. பணப்புழக்கமே, இல்லாத சிறு×ர் அது.

ஒரு காசுக்கு யாரிடம் போய்ச் சில்லரை வாங்க என்று தெரியவில்லை. நாசுவர் கூலியை வாங்காமல், இடத்தை விட்டுப் போவதாகத் தெரியவில்லை. ஐயர் ஆத்துக்காரிக்கோ அரைக் காசை அதிகமாகக் கொடுக்கவும் மனசு வரவில்லை. அதனால் அந்த ஐயராத்தம்மா, நாசுவரிடம், "என் மகனுக்கு முடி சிரைத்ததற்கு கூலி அரைக்காசு, மீதம் உள்ள அரைக்காசுக்கு எனக்கு மொட்டை போட்டு விடு'' என்று சொல்லி தலையை நீட்டினாள்.

நாசுவன் பார்த்தார் எப்படியோ ஒரு காசு கூலியாகக் கிடைத்தது என்று நினைத்து ஐயராத்தமாளுக்கும் மொட்டை அடித்து விட்டு ஒரு காசு நாணயத்துடன் தன் ஊரைப் பார்த்துப் புறப்பட்டார்.

"இது தான் அரைக்காசுக்காக, ஐயராத்தம்மா மொட்டை போட்டுக் கொண்ட கதை' என்று அந்த சொலவத்துக்கான விளக்கத்தை ஒரு கதை போல சொல்லி முடித்தார் பெரியவர்.

இதிலிருந்து, பல சொலவங்களுக்கு பின்னால், ஒரு வாழ்வியல் சம்பவம், அல்லது நடப்பு அல்லது கதை இருக்கிறது என்பதையும், 'காசு என்ற பெயரில் ஒரு நாணயம் அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்தது என்பதையும், கணவனை இழந்த பிராமணப் பெண்கள் தலை முடியைச் சிரைத்து மொட்டை போட்டுக் கொள்ளும் கொடுமையான வழக்கம் பழந்தமிழகத்தில் நடைமுறையில் இருந்தது போன்ற சேதிகளையும் நாம் உணர்ந்து கொள்ள இடம் இருக்கிறது. அத்துடன் இந்தச் சொல்வளம் அல்லது அச்சொல்வளம் சார்ந்த நடப்பு நடைமுறையில் இருந்த காலத்தையும் ஒருவாறு நாம் தெரிந்து கொள்ள முடிகிறது

பெயர் மாற்றம்


அந்தக் காலத்தில் இரண்டு வழிப் போக்கர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால், எந்தத் தயக்கமும் இன்றி, ஒருவருக்கு ஒருவர், ‘உங்கள் வர்ணம் (ஜாதி) என்ன?’ என்று கேள்வி கேட்டு அதற்கான விடையையும் தெரிந்து கொள்வார்கள்.

கொஞ்ச காலத்திற்கு முன் வரை, கிராமந்தரங்களில் வாழ்கிறவர்களின் பெயர்களை வைத்தே, அவர் இன்ன வகுப்பைச் சார்ந்தவர் என்று ஒருவாறு யூகித்துக் கொள்வார்கள்.

திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்குப் பிறகு குப்பன், சுப்பன், மாடன், காடன், மாடசாமி, கருப்பன், கருப்பாயி போன்ற பெயர்களைத் தன் பிள்ளைகளுக்குச் சூட்டுவதைத் தவிர்த்து, விளிம்பு நிலை மக்களும் தன் பிள்ளைகளுக்கு, மணியரசன், முத்தமிழ், கலைமணி, தமிழரசி என்று பெயர்களைச் சூட்டினார்கள்.

சென்ற நூற்றாண்டு வரை கிராமத்துப் பெரியவர்கள் தன் பெயருடன், தன் ஜாதியின் பெயரையும் சேர்த்தே சொன்னார்கள். இப்படியாகப் பெயரும் ஜாதிய அடையாளமும் தமிழர்களைத் தொற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் நடந்த கதை இது.

உயர்ந்த ஜாதிக்காரர்கள் அதிலும் பணக்காரர்கள், தன் பெயரைக் கம்பீரமாக வைத்துக் கொண்டார்கள். அதே போல் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரர்கள், அதிலும் ஏழைகள், சின்னச்சாமி, முனியசாமி, கருப்பசாமி என்று பெயர் வைத்துக் கொண்டார்கள்.

பெருந்தெய்வங்களை வழிபடுகின்ற மக்கள் அத்தெய்வங்களின் பெயர்களைத் தன் பிள்ளைகளுக்கு வைத்துக் கொண்டார்கள். சிறு தெய்வங்களை வழிபடுகின்ற கிராமத்து மக்கள், அத்தெய்வங்களின் பெயர்களையே தன் பிள்ளைகளுக்கு வைத்துக் கொண்டார்கள். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் உயர் ஜாதியினரின் கோயில்களுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்ட காலத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் தன் பிள்ளைகளுக்கு, பெருஞ்சாமிகளின் பெயர்களைச் சூட்டிக் கொள்ளவில்லை. அப்படியே விதிவிலக்காக விளிம்புநிலை மக்களில் யாராவது பெரிய சாமிகளின் பெயரை வைத்துக் கொண்டால் அவர்கள் தன் பெயரை மாற்றிக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அப்படி தாழ்த்தப்பட்ட, ஏழை மனிதன் ஒருவன் தன் பெயரை மாற்றிக் கொள்ளத் தன் முதலாளியால் நிர்பந்திக்கப்பட்ட விதத்தையும், அச்சிக்கலில் இருந்து அவன் மீண்டு வந்த விதத்தையும் பற்றிப் பேசும் ஒரு பழமொழியையும், அப்படி அதற்குப் பின்னால் உள்ள கதையையும் பார்ப்போம்.

‘பெருமாள் பெரிய பெருமாளாகிய கதையாக, இருக்கிறதே’!’ என்பது கிராமத்து மக்களின் நாக்குகளில் இன்னும் உலா வரும் ஒரு சொலவடையாகும். இந்தச் சொலவடைக்கு விளக்கம் சொல்வதைப் போன்று அமைந்துள்ளது இந்தக் கிராமியக் கதை.

ஒரு ஊர்ல, ஒரு பண்ணையார் இருந்தார். அவர் தீவிரமான வைணவ பக்தர். ‘சிவ, சிவா' என்று யாராவது அவரின் முன்னால் நின்று சைவக் கடவுளின் பெயரை மெல்லக் கூறினால் கூட, பண்ணையார் தன் காதுகள் ரெண்டையும் பொத்திக் கொள்வார். அதே சமயம், அவரின் முன்னால் நின்று ‘கோபாலா, கிருஷ்ணா, கோவிந்தா, கண்ணா’ என்று சொன்னால் போதும். அப்படிச் சொன்னவனுக்கு, காசு, பணமும் கொடுத்து காணாததுக்கு அறுசுவையுடன் கூடிய விருந்தும் கொடுத்து அவனைக் கொண்டாடுவார்.

இப்படி, மத வெறி, ஜாதிய வெறி, அந்தப் பண்ணையாரின் ரத்தத்தில் கலந்து போய் இருந்தது. அந்தப் பண்ணையார், உயர்ந்த ஜாதிக்காரர்கள் அதிலும் வைணவர்கள் மட்டுமே ‘பெருமாள்' என்ற பெயரை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.

இப்பேர்ப்பட்ட பண்ணையாரிடம் ஒரு வேலைக்காரன் வேலைக்கு வந்து சேர்ந்தான். வேலையில் சேர்க்கும்போது பண்ணையார், வேலைக்காரனின் வர்ணத்தை (ஜாதியை) கேட்டார். வேலைக்காரனும் தன் உண்மையான ஜாதியின் பெயரைச் சொன்னான். பண்ணையார், வேலை கேட்டு வந்தவனிடம் ‘உன் பெயர் என்ன?’ என்று கேட்டார். வேலைக்காரனும் ‘பெருமாள்' என்ற தன் உண்மையான பெயரை மறைத்து, தன் பட்டப் பெயரைச் சொன்னான். அவன் தலை பம்பையும்,பரட்டையுமாக இருந்ததால், கிராமத்து மக்கள், அவனைப் ‘பரட்டை' என்ற பட்டப் பெயரைச் சொல்லி அழைத்தார்கள். பண்ணையாரின் புத்தியை அறிந்து கொண்டுதான் வேலைக்காரனும் தன் உண்மையான பெயரை மறைத்து விட்டுத் தன் பட்டப் பெயரைச் சொன்னான். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த வேலைக்காரனுக்கு ‘பரட்டை' என்ற பெயர் பொருத்தமாக இருப்பதாக நினைத்த பண்ணையார் உடனே, அந்த வேலைக்காரனுக்கு அன்றே வேலை போட்டுக் கொடுத்தார்.

வேலைக்காரன் ரொம்ப நாணயமாகவும், நேர்மையாவும், குறிப்பறிந்தும் வேலை செய்தான். ஒருத்தனே ரெண்டாள் செய்யும் வேலையைச் செய்தான். அதே சமயம் வேலை, செய்நேர்த்தியுடனும், சுத்தமாகவும் இருந்தது. ‘பரட்டை' என்ற வேலைக்காரனைப் பண்ணையாருக்கு ரொம்பப் (மிகவும்) பிடித்துப் போய் விட்டது. தனக்கு நம்பிக்கையான ஒரு வேலைக்காரன் கிடைத்து விட்டான் என்று சந்தோஷப்பட்டார் பண்ணையார். வேலைக்காரனுக்கு விரைவிலேயே சம்பளத்தையும் கூட்டிக் கொடுத்தார். வேலைக்காரன் இப்போது முன்பை விட இன்னும் கடுமையாக உழைத்தான்.

ஒரு நாள் பண்ணையாரின் மேற்பார்வையில் பரட்டை என்ற வேலைக்காரன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்த வேலைக்காரனின் தாய் தலைவிரி கோலமாக, அரக்கப் பரக்கத் தன் மகன் வேலை பார்க்கும் பண்ணைக்கு ஓடி வந்து, ‘ஏலே, பெருமாளு... சீக்கிரமா வீட்டுக்கு வாலே, அங்க வீட்டுல உம் புள்ளைக்கு ரொம்பச் சுகமில்லை!’ என்றாள்.

வேலைக்காரனின் தாய் தன் மகனைப் பார்த்து ‘ஏலே பெருமாளு’ என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டதைக் கேட்டு, மிகுந்த அதிர்ச்சியுற்றார் பண்ணையார். வேலைக்காரனைப் பார்த்துப் பண்ணையார், ‘ஏப்பா... உன் பேரு பெருமாளா? பரட்டையா?’ என்று பதற்றத்துடன் கேட்டார்.

வேலைக்காரனோ, தன் பிள்ளைக்குச் சுகமில்லை என்ற சேதியைக் கேட்டுக் கலங்கிப் போய் நின்றான். பண்ணையாருக்கு வேலைக்காரனின் பிள்ளைக்குச் சுகமில்லை என்பதைப் பற்றி எந்தக் கலக்கமும் இல்லை. அவர் மனது ‘வேலைக்காரனின் உண்மையான பெயர் என்னவாக இருக்கும்?’ என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.

வேலைக்காரன் தன் பெயரை பண்ணையில் சொல்ல வேண்டாம் என்று வீட்டில் கூறி இருந்தான் என்றாலும் பேரனுக்குச் சுகமில்லை என்பதால், தன் தாய் தன்னை அறியாமல் தன் உண்மையான பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு விட்டார் என்பதைப் புரிந்து கொண்ட வேலைக்காரன், பண்ணையாரிடம் அரைகுறையாக உத்தரவு வாங்கிக் கொண்டு தன் வீட்டைப் பார்த்து ஓடினான்.

பண்ணையார் வைணவர், தன்னிடம் வேலை பார்க்கும் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவனுக்கு ‘பெருமாள்' என்று பெயர் இருப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதே சமயம் நம்பிக்கையான, நாணயமான, கடின உழைப்பாளியான அந்த வேலைக்காரனை வேலையை விட்டு நீக்கி விடவும் மனம் வரவில்லை. எனவே, அந்த வேலைக்காரனிடம் சொல்லி அவன் பெயரை, மாற்றச் சொல்ல வேண்டும் என்று நினைத்தார் பண்ணையார்.

வேலைக்காரன் சுகமில்லாத தன் மகனை வைத்தியரிடம் கூட்டிக்கிட்டுப் போய் வைத்தியம் செய்த பிறகு அவனுக்கு நோய் குணமாகி விட்டது. ஒரு வாரம் கழித்து மீண்டும் பண்ணையார் வீட்டிற்கு வேலைக்கு வந்தான். அந்த வேலைக்காரன் இல்லாமல், பண்ணையாருக்கு ஒரு கை முறிந்த மாதிரி இருந்தது. இப்போது அந்த வேலைக்காரன் மீண்டும் வேலைக்கு வந்ததும் முதல் காரியமாக, ‘யப்பா நீ உன் பெயரை மாற்றிக் கொள்’ என்றார். வேலைக்காரன், பண்ணையாருக்கு இருக்கும் ஜாதிவெறியை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டு, ‘என் பெயரை மாற்றி விடலாம். அதில் ஒன்றும் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அதற்கு கொஞ்சம் பணம் செலவாகும். நூறு ஏழை, பாளைகளுக்கு அன்னதானம் செய்து, சில பூஜை புனஸ்காரங்கள் எல்லாம் செய்த பிறகுதான் பெயரை மாற்ற முடியும்’ என்றான்.

பண்ணையார் ‘செலவைப் பற்றி ஒன்றும் கவலையில்லை எப்படியாவது நீ உன் பெயரை மாற்றிக் கொண்டால் சரிதான்’ என்றார் வேலைக்காரனிடம்.

வேலைக்காரனும் பார்த்தான். இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்து ‘பெயர் மாற்றும் செலவுக்காக ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்டான்.

பண்ணையாரும் உடனே தன் ஒழுக்கரைப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து வேலைக்காரனிடம் கொடுத்து ‘உனக்கு இன்னும் ஒரு வாரம் விடுப்புத் தருகிறேன். விடுப்பு முடிந்து வரும் போது உன் பெயரை மாற்றிக் கொண்டு வா’ என்று கூறினார்.

வேலைக்காரன் பண்ணையார் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு போய் மறுநாள் தன் சொந்த பந்தங்களுக்கு எல்லாம் கிடா வெட்டி விருந்து படைத்தான். ஒரு வாரம் வீட்டில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் பண்ணையாரின் வீட்டிற்கு வேலைக்கு வந்தான்.

பண்ணையார், வேலையில் சேருவதற்காக வந்த வேலைக்காரனைப் பார்த்து ‘உன் பெயரை மாற்றிக் கொண்டாயா?’ என்று அவசர, அவசரமாகக் கேட்டார்.

வேலைக்காரன் பண்ணையாரைப் பார்த்து, ‘ஆம், ஐயா நான் நேற்றிலிருந்து என் பெயரை மாற்றிக் கொண்டேன்’ என்றான் பௌவியமாக. ‘இப்போது உன் பெயர் என்ன?’ என்று ஆர்வத்துடன் கேட்டார் பண்ணையார்.

வேலைக்காரன் தனக்குள் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு ‘ஐயா, ‘பெருமாள்' என்ற என் பெயரைப் ‘பெரிய பெருமாள்' என்று மாற்றிக் கொண்டேன்’ என்றான்.

வேலைக்காரன் சொன்னதைக் கேட்டதும் பண்ணையாருக்கு ‘விக்கினாப்புலயும் இல்லை, விரைச் சாக்குலயம் இல்லை' என்றாகி விட்டது. ஏற்கனவே வேலைக்காரனுக்கு இருந்த ‘பெருமாள் ' என்ற பெயரே தேவலை என்றிருந்தது அவருக்கு.

இனியும் ஒரு தடவை பெயரை மாற்றிக் கொள் என்றால், இன்னும் ஒரு வாரம் விடுப்பு கேட்பான். அத்தோடு அன்னதானம், பூஜை, புனஸ்காரம் செய்ய என்று ஆயிரம் ரூபாய் வேறு கேட்பான். அடுத்த தடவை இதை விட மோசமாக தன் பெயரை ‘கிருஷ்ண பெருமாள் ' என்று மாற்றினாலும் மாற்றி விடுவான். இனிமேல் அவன் பெயரை மாற்றிச் சொல்லக் கூடாது. என்ன பெயரும் அவனுக்கு இருந்து விட்டுப் போகட்டும். நாம் எப்போதும் போல் வேலைக்காரனை ‘பரட்டை' என்றே அழைப்போம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார் பண்ணையார்.

அன்றிலிருந்து பண்ணையார் அந்த வேலைக்காரனை ‘பரட்டை' என்றே அழைத்தார் என்பதுதான் ‘பெருமாள் பெரிய பெருமாள் ஆன கதை'.

நகைச்சுவைக்காக இந்தக் கதையை இன்றும் கிராமத்து மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தக் கதைக்குள் புதைந்துள்ள கூர்மையான ஜாதிய வெறி நம்மை சிந்திக்க வைக்கிறது. அங்கதச் சுவையுடன் கூடிய இக்கதை பல சமூக விமர்சனங்களை நம் முன் வைக்கிறது.

நாட்டுப்புறவியல் சார்ந்த தரவுகள், இத்தகைய சமூகம் சார்ந்த பல சிந்தனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதால், அவைகளை இன்றும் நாம் மறு கவனிப்பு செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.

கிராமிய குடும்பம்

Bull race
பெண் உரிமை குறித்த செய்திகள் பலவும் பழைய கிராமியக் கதைகளிலும், பழமொழிகளிலும், பாடல்களிலும் பதிவாகி உள்ளன. அவைகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆர்வம் நமக்குத்தான் இல்லாமல் போய்விட்டது.

Bull race பொதுவாகப் பெண்களை நாலாந்தரக் குடிமக்களாக நடத்தும் ஆணாதிக்க மனப்பான்மை, இடைக்காலத்தில் நம்மில் புகுந்த ஆரிய மரபில் இருந்து வந்ததுதான். எழுத்துப்பூர்வமாக நமக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் இலக்கியச் சான்றுகள் பலவும் பெண்களின் பெருமை பேசுகின்றன. பெண்மையைப் போற்றுகின்றன. இந்த உண்மையை நிரூபிக்கத் தனி ஒரு நூலே எழுதும் அளவிற்கு இலக்கியச் சான்றுகள் விரிந்து பரந்துள்ளன.

சான்றாகத் திருக்குறளில் இருந்து ஒரே ஒரு செய்தியை மட்டும் வாசகர்கள் முன் வைக்கிறேன். இல்லறவியலில் திருவள்ளுவர் ஓர் அதிகாரத்திற்கு வாழ்க்கைத் துணை நலம் என்று பெயர் சூட்டுகின்றார். மனைவியை கணவனின் துணை என்றும் அத்துணையே வாழ்க்கைக்கு நலம் பயக்கும் என்றும் பொருள் படும்படி திருவள்ளுவர் அந்த அதிகாரத்திற்குப் பெயர் சூட்டியுள்ளார்.

ஓர் அதிகாரத்திற்குத் தலைப்பு வைக்கும்போது கூட பெண்ணுக்கு உரிய இடத்தை வள்ளுவர் வழங்கியுள்ளார். எனவே, பெண்ணடிமைத்தனம் என்பது பழந்தமிழ்ச் சமூகத்தில் தீவிரமாக இல்லை. இந்தக் குணம் இடைக்காலத்தில்தான் வந்து தமிழ்ச் சமூகத்தில் புகுந்தது என்பதைப் பல சான்றுகள் மூலம் நிறுவ முடியும்.

பெண்கள் தங்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்தார்கள். தங்கள் உரிமையை நிலைநாட்டினார்கள் என்பதை நிறுவ நாட்டார் கதையாடல்களில் பலப்பல சான்றுகளைக் காட்ட முடியும். பெண் மொழியாகப் பதிவாகியுள்ள ஒரு நாட்டார் கதையை இனி பார்ப்போம்.

ஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டியும் புருசனும் இருந்தாங்க. புருசன்காரனுக்கு சம்சாரித்தனம்தான் தொழிலு. ஆனால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் முயல் வேட்டைக்குப் போவான். முயல் வேட்டைக்கு என்று ஒரு வேட்டை நாயை வளர்த்தான்.

முயல் வேட்டையால் அவனுக்கு ரொம்ப கூர்மையான அறிவு இருந்தது. காடு கரைகளில் கிடக்கின்ற முயல் புழுக்கையைப் (கழிவை) பார்த்தே இந்த இடத்திற்கு முயல் எவ்வளவு நேரத்திற்கு முன் வந்தது, அது ஆண் முயலா? பெண் முயலா? குட்டி முயலா? இந்த இடத்தில் இருந்து தொடர்ந்து எந்த இடத்திற்கு அந்த முயல் பயணமாகிச் சென்றுள்ளது? அந்த முயல் தனியாக வந்ததா? அல்லது கூட்டமாக வந்ததா? அந்த முயலின் நிறம் என்ன? என்பது போன்ற பல விசயங்களை யூகித்து அறிந்து கொள்ளும் நுட்பமான அறிவு அவனுக்கு அனுபவத்தால் கிடைத்திருந்தது.

கிடக்கும் முயல் புழுக்கையின் அளவையும், வடிவத்தையும் வைத்து வந்தது ஆண் முயலா? பெண் முயலா என்றும், புழுக்கையின் ஈரப்பதத்தை வைத்து அந்த முயல் இந்த இடத்தில் இருந்து சென்ற நேரத்தையும், அந்த இடத்தில் அல்லது சற்று தொலைவில் உதிர்ந்து கிடக்கும் முயலின் முடியை வைத்து அம்முயலின் நிறத்தையும், புழுதியில் பதிந்துள்ள காலடித் தடத்தின் அளவையும், அழுத்தத்தையும் பார்த்து அம்முயலின் கனத்தையும், உருவத்தையும் கணித்துச் சொல்லும் ஆற்றல் அந்த முயல் வேட்டைக்காரனுக்கு இருந்தது.

அவன் முயல் வேட்டைக்குச் சென்று பிடித்து வரும் முயல்களை எப்போதும் வெளி ஆட்களுக்கு விற்று விடுவான். யாரும் முயல் வாங்கவில்லை என்றால் தன் மனைவியிடம் கொடுத்து கறி வைக்கச் சொல்வான். ஒருநாள் அந்த முயல் வேட்டைக்காரன், காடு கரைகளுக்குச் சென்று ஒரு பெரிய முயலை வேட்டையாடி வந்தான். அன்று வேட்டை முடிந்து திரும்பும் போது இரவு வெகு நேரமாகி விட்டது. வேட்டையால் ஒரு பெரிய ஆண் முயல் கிடைத்தது. இரவு ரொம்ப நேரமானதால் ஊரில் யாரும் அந்த முயலை விலைகொடுத்து வாங்க முன்வரலை. அதனால அந்த முயலைத் தன் பொண்டாட்டியிடம் கொடுத்து எம்மா, இது பொட்டக்காட்டுல பிடிச்ச முயலு. இன்னைக்கு இந்த முயலைக் கறி வை. நான் மாடு, கண்ணுகளுக்கு வைக்கோல் அள்ளி வச்சிட்டு, காடு கரைகளை ஒரு சுத்தி சுத்தி பார்த்துட்டு வாரேன். முன்னிருட்டு நேரத்துலதான் கள்ளாளிப் பெயல்கள். லாந்துவானுக (வருவார்கள்) ன்னு சொல்லிட்டு வீட்டை விட்டுப் போயிட்டான்.

பொண்டாட்டிக்காரி அந்த கொழுத்த முயலை அறுத்து நன்றாக மசால் போட்டு வாய்க்கு ருசியாகச் சமைத்து வைத்தாள். ராக்காவலுக்கு காடு கரைகளுக்குப் போன புருசக்காரன், வருகிற வழியில பனையேறி வீட்டுக்குப் போய் ஒரு கலையம் தனிக்கள்ளையும் குடிச்சிட்டு போதை யோடயும் பசியோடயும் வீட்டுக்கு வந்தான்.

கால், கை, கழுவிட்டு வாங்க... சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்று பொண்டாட்டிக்காரி சொன்னாள். புருசக்காரனும் கால், கை, கழுவிட்டு வந்து சாப்பாடு மனையில் (பலகையில்) உக்கார்ந்தான். தலை வாழை இலை விரிச்சு புருசக்காரனுக்கு சோறு போட்டான். காச்சி வைச்ச முயல் கறியை சட்டியோட கொண்டு வந்து புருசக்காரன் முன்னால வச்சாள். நல்ல பசியும், இளம் போதையுமா இருந்த புருசக்காரன் பொண்டாட்டியிடம் நீ சாப்பிட்டாயா என்று கேட்கவும் இல்லை. அவளுக்கு என்று முயல் கறியை மிச்சம் வைக்கவும் இல்லை. சமைத்த கறி ருசியாக இருந்ததால் தனக்கு முன்னால் சட்டியில் இருந்த முயல் கரி முழுவதையும் சாப்பிட்டு விட்டான்.

மனைவிக்கு என்று மிச்சம் வைக்காமல் சாப்பிடும் கணவனைப் பார்த்து அப்போதைக்கு அவள் ஒன்றும் சொல்லவில்லை. போதையில் இருக்கிறார் தேவையான அளவு சாப்பிடட்டும் என்று நினைத்துவிட்டாள்.

கட்டிய மனைவிக்கு என்று அவர் காய்ச்சிய முயல் கறியில் ஒரு துண்டுக் கறி கூட மீதம் வைக்காமல் சாப்பிட்டு முடித்து விட்டு, ஏவ்... என்று ஒரு ஏப்பமும் விட்டு விட்டு புருசக்காரன் சாப்பிட்ட இலையையும் எடுக்காமல் எந்திரிச்சி புறவாசலுக்குப் போய் கை, கழுவி விட்டு திரணையில் கிடந்த பாயை விரித்து கட்டையைச் சாத்தி விட்டான்.

தனக்கு ஒரு துண்டுக் கறிகூட மிச்சம் வைக்காமல் முயல் கறியை எல்லாம் சாப்பிட்டதோடு நீ சாப்பிட்டியா? உனக்குக் கறி இருக்கா? என்று ஒரு வார்த்தைகூட கேட்காமல் போய் படுத்து விட்ட தன் புருசன்மேல் பொண்டாட்டிக்காரிக்கு கோவம், கோவமாக வந்தது. என்றாலும் தன் கோவத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமலும், அன்று இரவு சாப்பிடாமலும் கொலைப் பட்டினியோடு வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துப் படுத்துக் கொண்டாள்.

அதிகாலையில் பொழுது விடிந்ததும், விடியாமலும் இருக்கும் கங்கல் மங்கலான குரங்கிருட்டு நேரத்தில் போதை தெளிந்து தூங்கி முழித்து கதவைத் தட்டினான் புருசக்காரன். நல்லா பொல, பொல என்று பொழுது விடியும் வரை பொண்டாட்டிக்காரி கதவைத் திறக்கவில்லை. கதவைத் தட்டிப் பார்த்து சடைஞ்சி போன (அலுத்துப்போன) புருசக்காரன் புழக்கடைக்குப் போய் முகம் கழுவி வாய் கொப்பளித்து விட்டு காடு கரையைச் சுத்திப் பார்க்கப் போயிட்டான் கோவத்தோட.

புருசக்காரன் காட்டுக்குப் போயிட்டான்னு தெரிஞ்ச பிறகு வீட்டுக்குள்ள இருந்து எந்திரிச்சு அவள் வாசல் கதவைத் திறந்துக்கிட்டு வெளியே வந்தாள்.

காடு கரைகளுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்த புருசக்காரனைப் பார்த்து பொண்டாட்டிக்காரி, ராத்திரி வாய்க்கு ருசியா முயல் கறி சாப்பீட்டிகளே... கட்டுன பொண்டாட்டியான எனக்கு ஒரு துண்டுக் கறியாவது மிச்சம் வச்சீகளா? சரியான தாந்திண்ணியாக (தானே அனைத்தையும் சாப்பிடுகிறவன்) இருக்கீகளே... என்று கேட்டாள்.

அப்போதுதான் புருசக்காரனுக்கே போதையில் நடந்த தவறு மூளையில் உரைத்தது. கோழி கூப்புட கூப்பிட்ட சத்தத்திற்கு பொண்டாட்டியிடம் இருந்து பதில் வராததற்கும், உடனே அவள் கதவைத் திறக்காததற்கும் என்ன காரணம் என்பது இப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. போதையில் அந்தத் தவறு நடந்து விட்டது என்பதைப் புரிந்து கொண்ட புருசக்காரன் சமத்காரமாக ஏதாவது ஒரு பதிலைச் சொல்லிச் சமாளிக்க வேண்டும் என்று யோசித்து, ஏ... புள்ள, பொட்டக்காட்டுல புடிச்ச முயல் கறி பொட்டப்புள்ளைக்கு ஆகாதுங்கறதுனாலதான் நான் உனக்கு மிச்சம் வைக்காமல் அம்புட்டு முயல் கறியையும் தின்னுட்டேன்னு பதில் சொன்னான்.

புருசக்காரனின் சமத்காரமான (சமயோசிதமான) பதிலைக் கேட்டுச் சிரித்துக் கொண்ட பொண்டாட்டிக்காரி, அந்தப் பிரச்சனையை அத்தோடு விட்டு விட்டு அடுத்து ஆகவேண்டிய வீட்டு வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

அடுத்த வாரம் அதே நாளில் புருசக்காரன் முயல் வேட்டைக்குப் போய் ஒரு கன்னித்தரத்து சிறிய பெண் முயலைப் பிடிச்சிக்கிட்டு வந்தான். வேட்டையில் கிடைத்த அந்த முயலை பொண்டாட்டிக்காரியிடம் கொடுத்து கறி வை என்று சொன்னான். பொண்டாட்டிக்காரி ஞாபகமாக இந்த முயலை எந்த இடத்தில் பிடித்தீர்கள்? என்று கேட்டாள். புருசக்காரன் எதேச்சையாக இந்த முயலை அணைக்கரை ஓரமாகப் பிடித்தேன் என்று கூறினான். பொண்டாட்டிக்காரி முயலை அறுத்துக் கறி வைக்க ஆரம்பித்தாள். புருசக்காரன் ராக்காவலுக்காகக் காடு, கரைகளுக்குப் போனான். காவல் முடிந்து ராத்திரி வெகு நேரம் கழித்துதான் புருசக்காரன் வீடு திரும்பினான்.

பொண்டாட்டிக்காரி அன்று நேரங்காலத்தோடு சோறு பொங்கி, முயல் கறி வைத்து வீம்புக்கு என்றே கறி முழுவதையும் சாப்பிட்டுக் காலி பண்ணிட்டு புருசக்காரனுக்குக் கொஞ்சோண்டு வெறும் சோறும் பழைய குழம்பும் மட்டும் சாப்பிட வைத்திருந்தாள்.

ராக்காவல் முடிந்து பசியோடு வீடு திரும்பிய புருசக்காரன் கையில் தலை வாழை இலையோடு வீட்டிற்கு வந்தான். கை, கால் கழுவி விட்டு மனையில் உக்கார்ந்து கொண்டு தலை வாழை இலையை விரித்தான் முயல் கறி நினைப்போடு.

பொண்டாட்டி இலையில சோத்தைப் போட்டு அதன் மேல் நேற்று வைத்த பழைய குழம்பைக் கொண்டு வந்து ஊற்றினாள். முயல் கறியின் நினைப்பில் வந்த புருசக்காரன் ஏன் பழைய குழம்பை ஊற்றுகிறாய்? முயல் கறி எங்கே? என்று கேட்டான்.

பொண்டாட்டிக்காரி சமத்காரமாக அணைக்கரையில் பிடிச்ச முயல் ஆம்பிளைக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க. அதனாலதான் இன்னைக்கு வைச்ச முயல் கறி முழுவதையும் நானே சாப்பிட்டுடேன் என்று பதில் சொன்னாள்

போன வாரம் நாம் எரிந்த வார்த்தைப் பந்து இந்த வாரம் நம்மை நோக்கித் திரும்ப வருகிறது என்பதைப் புரிந்து கொண்ட புருசக்காரன் அப்படியா சேதி, சரி இனிமேல் எந்த இடத்தில் பிடித்த முயல் கறியானாலும் நாம ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடுவோம் என்று சமாதானமாகச் சொல்லி விட்டு முகம் கோணாமல் பழைய குழம்பை வைத்து சாப்பிட்டு விட்டு எந்திரிச்சான். அன்று முதல் புருசக்காரனும் தன் மனைவிக்கு மிச்சம் வைத்து எதையும் சாப்பிட்டான் என்பதுதான் அந்த நாட்டார் கதை

அவளும் இவளும்

Farmer
உளவியலைப் பற்றியும், மனத்தின் காரியங்களைப் பற்றியும், தன் சொந்த அனுபவத்தால் தெரிந்து கொண்ட செய்திகளைக் கிராமத்துப் பெரியவர்கள் பழமொழிகளாகவும் கதைகளாகவும் சொல்லி வைத்துச் சென்றுள்ளனர். அவைகளை முதலில் நாம் எழுத்து மொழியில் பதிவு செய்ய வேண்டும். அப்படிப் பதிவு செய்யும் ‘தரவு'களுக்கு யாராவது ஒருவர் விளக்கம் சொல்லவும் வேண்டும்.

Farmer ‘இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்கிறது ஒரு பழமொழி ஆற்றின் இந்தக் கரையில் இருந்து கொண்டு ஒருவன் ஆற்றின் அந்தக் கரையைப் (எதிர்ப்புறம் உள்ள அக்கரையை) பார்க்கிறான். அப்படிப் பார்க்கும் போது ஆற்றின் இக்கரையில் உள்ள செழிப்பையும் ஆற்றின் அக்கரையில் உள்ள செழிப்பையும் மனத்திற்குள் ஒப்பிட்டுப் பார்க்கிறான்.

பொதுவாக ஏதாவது இரண்டு பொருள்களை, அல்லது செயல்பாடுகளை ஒப்பிட்டு விடுவது இயற்கைதான். எனவே இக்கரையில் இருந்து கொண்டு அக்கரையின் செழிப்பைப் பற்றி மனத்திற்குள் எடை போடுகிறவனுக்கு, அக்கரையில் உள்ள ‘பசுமை' பெரியதாகத் தெரிகிறது. ஆனால் உண்மையில் அக்கறையில் உள்ள தாவர சங்கமங்கள் அப்படி ஒன்றும் செழிப்பாக இல்லை!

இதே கருத்தை விளக்குகிறது ‘தூரத்துப் பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி' என்ற ஒரு சொலவம். முந்தையது பழமொழி, இது சொலவம். பழமொழி என்பது வேறு, சொலவம் அல்லது சொலவடை என்பது வேறு. ‘இரண்டையும் எப்படி பிரித்தறிவது?' என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. அந்த வேறுபாட்டை விளக்கத் தனிக்கட்டுரையே எழுத வேண்டும். இப்போதைக்கு நாம் இந்தக் கட்டுரையில் பழமொழிகளின் விளக்கத்தை மட்டும் பார்ப்போம்.

‘தூரத்தில் இருந்து பார்க்கும் போது ‘பச்சைப் பசேல்' என்று தெரிவதை மட்டும் வைத்துக் கொண்டு நாம் அங்குள்ள செழிப்பை முழுமையாக எடை போட்டு விட முடியாது. தூரத்தில் இருந்து பார்த்து நாம் எந்தவிதக் கணிப்பிற்கும் வந்து விடக்கூடாது. அப்படி நாம் கணிப்பது தவறான முடிவுகளையே ஏற்படுத்தும்' என்கிறது இந்தச் சொலவம்.

தூரத்தில் இருந்து பார்க்கும் போது கண்களுக்குக் குளிர்ச்சியாகத் (குளுமையாக) தெரியும் ஒரு தோட்டத்தை நாம் அருகில் சென்று உற்றுக் கவனித்தால் தான் அத்தோட்டத்தில் உள்ள பயிர்களில் பரவியுள்ள நோயும், வாட்டமும் நம் கண்களுக்குத் தெரியும்.

தூரத்தில் இருந்து மேலோட்டவட்டமாகப் பார்த்து நாம் எந்த முடிவுக்கும் வரக்கூடாது என்கிறது இச்சொலவம். இது பயிர் பச்சைகளைப் பற்றி மட்டும் கருத்துச் சொல்லும் சொலவம் அல்ல. இச்சொலவத்தில் பயிர் பச்சைகள் என்பது ஒருவித குறியீடு தான். இச்சொலவம் மனித வாழ்க்கையைப் பற்றியும் பேசுகிறது.

‘சிலர் வெளிப்பார்வைக்கு கார், பங்களா என்று தட புடலாக வாழ்வார்கள். ஆனால் அவர்களின் அருகில் சென்று சில நாட்கள் அவருடன் நெருங்கிப் பழகினால் தான் அவருக்கு உள்ள கடன், கண்ணிகள் பற்றியும், ஓட்டை உடைசல்கள் பற்றியும் நாம் புரிந்து கொள்ள முடியும்' என்ற வாழ்வியல் செய்தியையும் இச்சொலவம் பேசுகிறது.

இப்பழமொழியை வாழ்வியல் அனுபவத்தில் பல விஷயங்களோடு பொருத்திப் பார்க்க வாய்ப்புள்ளது. மேலோட்டமான விளம்பரங்களையும் ஆடம்பரங்களையும் படோபங்களையும் மட்டும் பார்த்து ஒருவர் மேல் அல்லது ஒரு அமைப்பின் மேல் அவசரப்பட்டு ஒரு முடிவெடுத்து விடுகிறோம். ஆனால் நிறுத்தி, நிதானமாக நாம் எடுத்த முடிவு சரிதானா என்று ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பதே நல்லது என்ற வாழ்வியல் செய்தியை இப்பழமொழி விளக்குகிறது.

ஒப்பிட்டுப் பார்ப்பதை அடிப்படையாகக் கொண்ட இன்னொரு பழமொழி 'அவளுக்கு, இவள் எழுந்திருந்து உண்பாள்' என்பது ஒரு முறை கேட்டதும், அல்லது ஒரு முறை படித்ததும் இந்தப் பழமொழியின் பொருளை நாம் புரிந்து கொள்ள முடியாது. கிராமத்து வாழ்வியல் அனுபவம் உள்ள ஒருத்தர் விளக்கம் சொன்னால் தான் இப்பழமொழியின் பொருள் அனைவருக்கும் புரியும்.

ஒரு பண்ணையில் ஏற்கனவே ஒருத்தன் வேலை பார்த்தான். அவன் வேலை பார்க்கும் லட்சணம் பண்ணையாருக்குப் பிடிக்கவில்லை,. எனவே அவனை வேலையில் இருந்து நிறுத்தி விட்டு, இன்னொருவனை பண்ணையார் வேலைக்குச் சேர்த்தார். இரண்டாவது வேலைக்குச் சேர்ந்த வேலைக்காரன் வேலை செய்கிற லட்சணமும் பண்ணையார்க்குப் பிடிக்கவில்லை. ஆனால், 'முதலில் இருந்த வேலைக்காரனை விட இவன் பரவாயில்லை என்று நினைத்தார்.

பக்கத்து வீட்டுக்காரர் பண்ணையாரைப் பார்த்து, ‘இந்த வேலைக்காரன் எப்படி?' என்று கேட்டார். அதற்குப் பண்ணையார் ‘அவனுக்கு இவன் தேவலை!' என்று பதில் சொன்னார்.

முதலில் இந்த விளக்கத்தைத் தெரிந்து கொண்டால் தான் அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்' என்ற பழமொழிக்கு உரிய உண்மையான பொருளை நாம் புரிந்துக் கொள்ள முடியும்.

இனி இந்தப் பழமொழி தோன்றியதற்குப் பின் புலத்தில் உள்ள கதையைப் பார்ப்போம்.

ஒரு ஊர்ல ஒரு சம்சாரி இருந்தான். அவனுக்கு அப்பன், ஆத்தா என்று யாரும் இல்லை. அனாதையா இருந்தான். வேற, அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி என்று அக்கு தொக்கு (சொந்தபந்தம்) எதுவும் இல்லை.

சொந்தத்துல கொஞ்சம் நிலபுலன்கள் இருந்திச்சு. அதில் சம்சாரித்தனம் செஞ்சி காலத்தை கழிச்சிக்கிட்டு இருந்தான். அவன் ஆள் இளந்தாரியா இருந்தான். ‘முழுத்த ஆம்பளைப் பயல் எத்தனை நாளைக்குத் தன் கையால கஞ்சி காச்சிக் குடிப்பான்?' என்று நினைச்ச ஊர்ப்பெரியவர்கள் நாலைந்து பேர் சேர்ந்து, பக்கத்து ஊர்ல உள்ள வசதி இல்லாத, ஏழை, எளிய ஒரு பெண்ணைப் பார்த்துப் பேசி முடிச்சி அவனுக்கு தாலி கட்டி வச்சாங்க.

அந்தப் புள்ளை பார்க்கத்தான் ஆள் லெட்சணமா இருந்தாளே தவிர, உள்ளுக்குள்ள தீராத நோயாளியா இருந்திருக்கா. கட்டிட்டு வந்த பெண்டாட்டி நோயாளியா இருந்தா என்ன செய்ய முடியும்?

புருஷக்காரன் நோயாளியான பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டு, வைத்தியர் வீட்டுக்கு நடையா நடந்தான். தன் வீட்டுக்கும் வைத்தியர் வீட்டுக்கும் நடந்ததுல சம்சாரியின் கால் தேய்ந்து; காசும் செலவானது. ஆனால் நோய் தீர்ந்த பாடாய்த் தெரியவில்லை. அக்கம் பக்கத்துக்காரர்கள் ‘நோய்க்கும் பார் பேய்க்கும் பார்' என்பது பழமொழி. இதுவரை நோய்க்குப் பார்த்துட்டே, இனி பேய்க்கும் பார்!' என்று யோசனை சொன்னார்கள். பேதலிச்ச மனசு பிறர் சொல்வதை எல்லாம் நம்பும். சொல்கிறவன் சரியாச் சொல்கிறானா? தப்பாச் சொல்கிறானா? என்று யோசிக்காது. எனவே சம்சாரி, கோடாங்கி வீட்டுக்கும், பூசாரி வீட்டுக்கும் பொண்டாட்டியைக் கூட்டிக்கிட்டு அலைந்தான். அலைந்ததுதான் மிச்சம் அவளின் நோய் தீரவில்லை. நாளாக, நாளாக நோயின் உக்கிரம் அதிகமாகி விட்டது. புருஷக்காரனுக்கும் அலைந்து அலைந்து சலித்து விட்டது. கையில் மடியில் இருந்த காசெல்லாம் காற்றாப் பறந்து விட்டது.

இப்போது பெரும் கடன்காரனாகி விட்டான். நாளா வட்டத்தில் கட்டிய பொண்டாட்டி படுத்த படுக்கையாகி விட்டாள்.

‘பழைய குருடி கதவைத் திறடி' என்கிற பருவத்தில் அவன் தான் மீண்டும் அடுப்புப் பற்ற வைத்துச் சமையல் செய்ய வேண்டிய நிலை வந்துட்டு, கல்யாணத்துக்கு முன்னால, அவனுக்கு மட்டும் சமைத்தான். இப்ப கட்டின பொண்டாட்டிக்கும் சேர்த்துச் சமைக்க வேண்டிய நிலை வந்துட்டு.

பக்கத்து வீட்டுக்காரங்க சும்மா இருப்பாங்களா? சம்சாரியைப் பார்த்து, ‘அடப்பாவிப் பெயலே, உனக்கென்ன வயசா ஆயிட்டு? இல்லை வாலிபம் தான் போயிட்டா? இன்னொரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோ' என்று யோசனை சொன்னார்கள்.

பிறகு என்ன செய்ய, அக்கம் பக்கத்துக்காரர்கள் இன்னொரு பெண்ணைப் பார்த்து ரெண்டாந்தரமாக அவனுக்குத் தாலி கட்டி வைத்தார்கள். மூத்த குடியாள் படுத்த படுக்கையாக இருந்ததால், அவளும், தன் புருஷன் ரெண்டாந்தரமாக இன்னொருத்தியைக் கட்டிக் கொள்ள மறுப்புத் தெரிவிக்கவில்லை!

ரெண்டாந்தரமாக வந்து சேர்ந்தவளும் நோக்காட்டுக்காரிதான் என்கிற விஷயம் சம்சாரிக்குப் போகப் போகத் தெரிந்தது. பிறகு என்ன செய்ய? ரெண்டாந்தாரத்துக்காரியையும் கூட்டிக்கிட்டு வைத்தியர் வீட்டுக்கும், கோடாங்கி வீட்டுக்குமாக நடையா நடக்க ஆரம்பித்தான் சம்சாரி. தன் விதியை நொந்து கொண்டே.

நாளாக, நாளாக நோயின் தாக்குதல் அதிகமானது ரெண்டாந்தாரத்துக்கும். அவளும் மூத்தகுடியாளின் அருகில் ஒரு பாயை விரித்துப் படுத்துக் கொண்டாள். புருஷக்காரன் இப்போது தன்னோடு, தன் மனைவிமார்கள் ரெண்டு பேருக்கும் சேர்த்துச் சமையல் செய்ய ஆரம்பித்தான்.

மூத்த குடியாள் படுக்கையை விட்டு எழுந்திருக்கவே முடியாத நிலையில் கிடந்தாள். எனவே சோறு, தண்ணீர் எல்லாம் ஊட்டித்தான் விட்டான் புருஷக்காரன். ஆனால் ரெண்டாந்தாரத்துக்காரி நிலமை சற்று பரவாயில்லை என்றிருந்தது. சோறு சமைத்துக் கொடுத்தால், தட்டில் போட்டுக் கொடுத்தால், தானே சாப்பிட்டுக் கொண்டாள்.

இந்த மாதிரிச் சூழ்நிலையில், நெருங்கிய சொந்தக்காரனான வெளியூரைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், சம்சாரியைப் பார்த்து ‘மூத்த குடியாளுக்கு இளைய குடியாள் எப்படிடே?' என்று கேட்டார்.

அதற்கு நம்ம சம்சாரி சொன்ன பதில் ‘அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்' என்பது. இந்தப் பழமொழியில் ‘அவள்' என்பது, மூத்தகுடியாள் என்றும், ‘இவள்' என்பது இளைய குடியாள் என்றும் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சம்சாரி சொன்ன பதிலைக் கேட்ட பெரியவர் சக்களத்தியும், சக்களத்தியும் சீக்காளியாகப் படுத்துக் கிடக்கும் போது, சம்சாரியைப் பார்த்து, ‘இன்னொரு பெண்ணைப் பார்த்து மூன்றாந்தாரமாகக் கட்டிக்கிடச் சொல்வோமா' என்று மனத்திற்குள் நினைத்துப் பார்த்தார். ஆனால் கேட்கவில்லை!

மூன்றாவதாகவும் ஒருத்தியைக் கட்டி அவளும் சீக்காளியாகப் படுத்துக் கிடக்கும் காட்சியை மனத்திற்குள் கற்பனை செய்து பார்த்த பெரியவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை! சம்சாரியின் விதியை நினைத்து அழுவதா, சிரிப்பதா? என்று திகைத்த பெரியவர் அந்த இடத்தை விட்டு நகன்றார்.

இதுதான் ‘அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்' என்ற பழமொழிக்கான விளக்கம் என்று கதையைச் சொல்லி முடித்தார் தகவலாளர்.